இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் மட்டும் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் ஐந்து லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக குருணாகலை மாவட்டமே வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சீரற்ற காலநிலை காரணமாகவே நாடெங்கும் வறட்சி ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறையின் ஊடக உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பிபிசியிடம் கூறினார்.
மொனராகலை, புத்தளம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயச் செய்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
உடனடி நிவாரணமாக அரசாங்கம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குக் குடிநீர் விநியோகத்தை முதன்மைப்படுத்தி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இம்முறை வறட்சி நிலவுவதனால், தென்னை மற்றும் வாழை மரங்கள் பெருமளவில் அழிந்துள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறுகிறார்.
ஆயினும், வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடும், நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
Social Buttons