Latest News

August 14, 2014

இலங்கையில் மரண தண்டனை சட்டத்தை நீக்க வேண்டும் - பிரித்தானியா கோரிக்கை
by Unknown - 0

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியா தனது அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்கி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிராக டேவிஸ் பணியாற்றி வருகிறார்.
உலக நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் மரண தண்டனை உள்ளடக்கப்பட்டிருந்தாலும் 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் எவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதியே இறுதியாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என உள்நாட்டில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம், கொலைகள், போதைப்பொருள் விற்பனை போன்ற பாரிய குற்றச் செயல்களின் அதிகரிப்பே இந்த கோரிக்கைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையில் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவதுடன் பலர் தண்டனையை குறைக்குமாறு கோரி மேன்முறையீடு செய்துள்ளனர்.
« PREV
NEXT »