Latest News

July 11, 2014

தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபம்: ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல்! – சிவில் சமூகக் கூட்டமைப்பு கண்டனம்
by admin - 0

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு விடுத்த சுற்றுநிருபத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில் இதனை எதிர்த்துப் போராடுவோம். ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராகப் போராட நாம் தயங்கமாட்டோம்.”
- இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சிவில் சமூகக் கூட்டமைப்பு.
கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சிவில் சமூகக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்தது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பளர் பாக்கியசோதி சரவணமுத்து, சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ, சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல், காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க முன்னாள் தலைவர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் உட்பட உள்ளூர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு தடைபோடும் வகையில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதல்ல என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டோர் விசனம் தெரிவித்தனர். அத்துடன் இந்த சுற்றுநிருபத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.
ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுத்து, அரசால் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட தாக்குதலே இது என்றும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.


அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மாநாடொன்றை நடத்தவுள்ளோம் என்றும் சிவில் சமூகக் கூட்டமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.
« PREV
NEXT »