அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அண்மையாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலையில் பரிதவிக்கின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில்
கடும்போக்கு பௌத்த - சிங்கள இளைஞர்களுக்கும், அப்பகுதியின் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் வன்முறைகள்
வெடித்தன. இதனால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலர்
தாக்கப்பட்டனர். தவிர கோதாபிட்டிய, மீரிபென்ன, அட்ஹிகரகொட பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. இந்த வன்முறைகளை அடுத்து அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படை பொலிஸார் அனுப்பப்பட்டு அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண
தெரிவித்தார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை தாம் கைது செய்துள்ளனர் எனவும் குறித்த
பகுதியை விசேட அதிரடிப்படைப் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும்
தெரிவித்தார். இந்நிலையிலேயே வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியானதாகவும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும் இவை தொடர்பில் பொலிஸார் தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment