
யுத்தம் தீவிரமடைந்து நாங்கள் இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தபோது ஒருநாள் எனது மகளைக் கண்டேன். அப்போது அவரைத் எம்முடன் வருமாறு கேட்டோம். அவர் வரவில்லை. அதன்பின்னர் யுத்தம் முடிவடைந்து நாங்கள் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கு வந்திருந்த போது எமது மகளைத் தேடியபோதிலும் அவர் கிடைக்கவில்லை.
அதனால் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடமும் மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி முறையிட்டோம். அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவிடமும் காணாமல் போயுள்ள எனது மகளைத் தேடித்தருமாறு நாங்கள் கோரினோம். ஆயினும் எமது மகள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாத நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உள்ளூர் பத்திரிகையொன்றில் இசைப்பிரியாவுடன் காப்பரண் ஒன்றினுள் எனது மகள் இருக்கும் படத்தைக் கண்டேன்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உதவிய மன்னார் பிரஜைகள் குழுவினரிடம் முறையிடவுள்ளோம்.” – என்றார் அவர். இசைப்பிரியா இராணுவத்தின் பிடியில் இருந்தார் என்றும் பின்னர் அவர் இறந்து கிடந்தார் என்றும் வெளிப்படுத்தும் காணொலிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இப்போது அவர் இராணுவ பங்கர் ஒன்றுக்குள் உயிருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரியவிடம் கேட்டபோது, இப்படியான படங்கள் குறித்து எழுந்தமானமாக எதுவும் கூறமுடியாது என்றும், அவை குறித்து ஆராயும் குழு அவற்றை முழுமையாக ஆராய்ந்தபின்னரே அவை குறித்து ஏதும் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Social Buttons