Latest News

April 27, 2014

இராணுவத்தின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு எதிரானது
by admin - 0

முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இராணுவத்துக்கு அருகதை கிடையாது

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கும்போது எமது இளைஞர்களை இவ்வாறான வழிமுறைகள் ஊடாக தந்திரமாக ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 94ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று(26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

இராணுவத்தின் தந்திரம் மக்களிடம் பலிக்கவில்லை

இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பது உலகம் முழுவதும் உள்ள ஒன்று. அதற்கெனச் சில விதிமுறைகள்; உண்டு. ஆனால், இலங்கையில், அதுவும் வடக்கில் மாத்திரம் கவர்ச்சிகரமான சலுகைகளையும் சம்பளங்களையும் தருவதாக வீடுவீடாகச் சென்றும், தெருத்தெருவாக ஒலிபெருக்கியில் அறிவித்தும் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவத்துக்கு உள்வாங்கும் தந்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால், எமது மக்கள் விழிப்புடன் இருந்ததால் இந்த இராணுவத்தின் முயற்சி எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே, அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு என்று இப்போது மாறுவேடம் போட்டிருக்கிறது. 

இளைஞர்களை ஏமாற்றும் செயல்

வடக்கில் மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்களில் பல நூற்றுக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அதேபோன்று மத்திய அரசுப் பணியகங்களிலும் ஏராளமான வெற்றிடங்கள் உள்ளன. வேலையற்றிருக்கும் எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கரிசனையை அரசு உண்மையாகவே கொண்டிருந்தால் முறையாக விண்ணப்பங்களைக் கோரி அவர்களை இங்கு நியமித்திருக்க முடியும். 

ஆனால், அதைச் செய்ய விரும்பவில்லை. வேலைதேடி அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் எமது இளைய தலைமுறையை ஏமாற்றி இராணுவத்துக்குள் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் கபட நாடகம்

இராணுவத்தின் மூலம் அரச சேவைக்கு ஆட்சேர்த்தல் என்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. அரசு இந்தப் புதிய நாடகத்தின் மூலம் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் தொடர்ச்சியாக   இராணுவத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கும் கபடத்தனமான ஒரு நிகழ்ச்சி நிரலையே  முன்னெடுத்து கொண்டிருக்கிறது.  

வேலைவாய்ப்பு என்ற போர்வைக்குள் அரசு விரித்து வைத்திருக்கும் இந்த வலைக்குள் சிக்காது எமது இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இவற்றை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லும்போது அரசும் அரசு சார்பானவர்களும் தவறான பாதைக்கு இளைஞர்களை நாங்கள் திசை திருப்புவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அபிவிருத்தி பற்றி மாத்திரமே பேசுவதற்கு நாங்கள் ஒன்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அல்லர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசாங்கத்தின் பிரதிநிதிகள். 

அந்தவகையில்  எமது மக்களின்  அரசியல் அபிலாஷைகள் பற்றியும், அரசியல் ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் எந்த அரங்கிலும் நாம் பேசவேண்டியவர்களாகவே  உள்ளோம். 

எச்சரிக்கையாக இருங்கள்

அதுவும், குறிப்பாக இளைய தலைமுறையால் நடாத்தப்படுகின்ற ஒரு விழாவில், இளைஞர்களும் யுவதிகளும் அதிகம் கூடியிருக்கும் ஒரு விழாவில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய விடயங்கள் பற்றிப் பேசவேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற நிலஅளவையாளர் வே.சொர்ணலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் பல்கலைக்கழகப் பிரதம தொழில்நுட்ப அலுவலர் சீ.அருணகிகிரிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
« PREV
NEXT »