Latest News

April 27, 2014

ஆமிக்கு ஆட்பிடிப்பு தோல்வியில்! விழிப்படைந்த தமிழ் மக்கள்!!
by admin - 0

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இலங்கை இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கென இன்று நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வு தோல்வியினில் முடிவுற்றுள்ளது. மக்களிடையே இவ்வாட்சேர்ப்பு சதி முயற்சியென்ற விழிப்புணர்வு ஏறபட்டமையினால் நூற்றிற்கும் குறைவானவர்களே குறித்த ஆள்சேர்ப்பினில் பங்கெடுத்திருந்தனர்.
இதனிடையே முறையான வர்த்தமானி அறிவித்தலோ, அரச இலச்சினையுடன் கூடிய விளம்பரமோ, எவர் கோருகிறார் என்ற அடிக்குறிப்போ இல்லாமல் அநாமதேயப் பிரசுரங்களின் மூலம் இராணுவம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரச சேவைக்கு ஆட்சேர்ப்பதற்குச் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இருக்கும்போது எமது இளைஞர்களை இப்படித் தந்திரமாக ஆட்சேர்ப்பதற்கு இராணுவத்துக்கு அருகதை இல்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை விழாவொன்றினில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பது உலகம் முழுவதும் உள்ள ஒன்று. அதற்கெனச் சில வரைமுறைகள் உண்டு. ஆனால், இலங்கையில், அதுவும் வடக்கில் மாத்திரம் கவர்ச்சிகரமான சலுகைகளையும் சம்பளங்களையும் தருவதாக வீடுவீடாகச் சென்று சொல்லியும் தெருத்தெருவாக ஒலிபெருக்கியில் அறிவித்தும் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் இராணுவத்துக்கு உள்வாங்கும் தந்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எமது மக்கள் விழித்துக் கொண்டதால் இந்த முயற்சி இராணுவம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை.
இதனாலேயே, அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு என்று இப்போது மாறுவேடம் போட்டிருக்கிறது. வடக்கில் மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்களில் பல நூற்றுக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அதேபோன்று மத்திய அரசுப் பணியகங்களிலும் ஏராளமான வெற்றிடங்கள் உள்ளன. வேலையற்றிருக்கும் எமது இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கரிசனையை அரசு உண்மையாகவே கொண்டிருந்தால் முறையாக விண்ணப்பங்களைக் கோரி அவர்களை இங்கு நியமித்திருக்க முடியும்.
ஆனால், அதைச் செய்ய விரும்பவில்லை. வேலைதேடி அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் எமது இளைய தலைமுறையை ஏமாற்றி இராணுவத்துக்குள் உள்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இராணுவத்தின் மூலம் அரச சேவைக்கு ஆட்சேர்த்தல் என்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. அரசு இந்தப் புதிய நாடகத்தின் மூலம் எமது இளைஞர்களையும் யுவதிகளையும் தொடர்ச்சியாக இராணுவத்தின் கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருக்கும் கபடத்தனமான ஒரு நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு என்ற போர்வைக்குள் அரசு விரித்து வைத்திருக்கும் இந்த வலைக்குள் சிக்காது எமது இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »