Latest News

April 06, 2014

அயரசின் நடவடிக்கையால் கிளர்ந்தெழுகின்றன புலம்பெயர் தமிழர் அமைப்புகள்
by admin - 0

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர் அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புகளாகச் சித்தரித்து அவற்றைத் தடை செய்திருக்கும் இலங்கை அரசின் போக்குக்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் துறைகள் ஊடாகப் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்த அமைப்புகள் சூளுரைத்திருக்கின்றன.
இலங்கையில் கூறப்படுவது போன்ற ‘ஜனநாயகம்’ அல்லது உண்மையான ஜனநாயகம் நிலவும் நாடுகளில், பேச்சுச் சுதந்திரம் மற்றும் முழுமையான ஜனநாயக உரிமைகளுடன் நிரந்தர, வெளிப்படையான சமூகத்தின் மத்தியில் தாங்கள் வாழ்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ள உலகத் தமிழர் பேரவை, அந்த சமூகத்துக்கு மத்தியில் இலங்கையின் இந்த ‘பயங்கரவாத’ தந்திரோபாயம் செல்லுபடியானது என்றும் தெரிவித்திருக்கின்றது.
அந்தச் செய்தியை இலங்கைக்குத் தெளிவாகத் தெரிவிப்பதற்காக உலகத் தமிழர் பேரவை தனது சட்ட மற்றும் அரசியல் அங்கங்களை முழுமையாக பயன்படுத்தும் என்றும் அந்த அமைப்பின் சார்பில் கூறப்பட்டது.
இந்தத் தடைக்கு எதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் பல ஏற்கனவே குரல் எழுப்பியுள்ள நிலையில், இவ்விடயத்தில் தலையிடுமாறு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் தலைவர், கனடா அரசாங்கம், பல்வேறு சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஆகிய தரப்புக்களைக் கோரப் போவதாக கனேடிய தமிழ்க் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை சர்வதேச சமூகம் கண்டித்து நிராகரிக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தமிழர் அமைப்புக்களைத் தடைசெய்யும் இலங்கை அரசின் இந்த உத்தரவு, அது ஜனநாயகக் கருத்துக்கள் மற்றும் சிந்தனை விருப்பமின்றியும், அதற்குத் தயார் இல்லாத சித்தப் பிரமையிலும் இருப்பதையே வெளிக்காட்டுகின்றது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வாதன் உருத்திரகுமார் தெரிவித்தார்.
தாயகத்தில் உள்ள தமிழர்கள் வெளிநாட்டில் உள்ள தமிழர்களுடன் தொடர்பாடல் கொண்டு, கூட்டுச் சேர்ந்து இயங்குவதைத் தடுப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பலவீனப்படுத்துகிறது இந்த உத்தரவு என்றார் அவர்.
பெரும்பாலான அமைப்புகள் அந்தந்த ஜனநாயக நாடுகளில் சட்டரீதியாகப் பதிவுசெய்யப்பட்டு, செயற்படுகின்ற நிலையில் இத்தடை உத்தரவு அந்த நாடுகளின் சட்டமுறைமையையும் கேவலப்படுத்தி அவமரியாதையும் செய்கின்றன என்பது கவனித்தக்கது என்றும் அவர் கூறினார்.
தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஆணி வேராக அமைந்த காரணிகளைத் தேடிக் கண்டு பிடித்து தீர்க்கும் முயற்சியில் கூட ஈடுபட முடியாத அளவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசியல் உறுதிப்பாடு இல்லாத வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிட்டார் என்பதையே இந்த உத்தரவு வெளிப்படுத்துவதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
“இலங்கையில் இத்தகைய தடையை விதிப்பதன் மூலம், உலகத் தமிழர் பேரவை போன்ற சர்வதேச அமைப்புக்களின் உறுப்பினர்களை தமது ‘பயங்கரவாத’ உத்தி மூலம் வழிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார் மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் அவரது கட்சிக்குக் கிடைத்த வாக்கு வீதச் சரிவு, உள்நாட்டிலும் அவரது செல்வாக்கு பலவீனமடைந்து வருவதையே காடடுகின்றது. இதேசமயம், இலங்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணையை ஆரம்பிப்பதற்கான அதிகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கியுள்ளது. இத்தகைய இணைந்த காரணங்களால் கிளம்பிய பீதியே வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களை தடை செய்யும் யோசனையை அவருக்குதத் தந்துள்ளது. இது சர்வாதிகளின் வழக்கமான எதிர்வினைப் பண்பியல்புதான்” – என்கிறார் சுரேன் சுரேந்திரன்.
கனேடிய தமிழ்க் காங்கிரஸின் தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தமது அமைப்பு, இத்தகைய அச்சத்தை ஏற்படுத்தும் தந்திரோபாயங்கள் எமக்கு வழிகாட்ட இடமளிக்கப்பட மாட்டாது என்றும், இலங்கையர் எல்லோருக்கும் மனித உரிமைகள் கிட்டவும் தமிழர்களுக்கு உண்மை, நீதி, அமைதி கிட்டவும் உறுதியுடன் தொடர்ந்து உழைக்கும் என்றும் கூறினார்.
« PREV
NEXT »