மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், பாகிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் வெளியாகும் எம்கேஆர்யூ என்ற செய்தித்தாள் விமானம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசிய விமானம் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்றும், அதில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதாகவும் அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இறக்கை ஒடிந்து இருப்பதாகவும் அது தரையிறங்குகையில் சேதமைடந்திருக்கலாம் என்றும் தற்போது சின்ன சாலையில் நிற்பதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பயணிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு மண் வீடுகளில் போதிய உணவின்றி தவித்து வருகிறார்களாம். 20 ஆசியர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்களாம்
விமானம் கடத்தப்பட்டுள்ளது. அதுவும் சிலரின் உத்தரவின்பேரில் கடத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்த செய்தி கடந்த 31ம் தேதி ரஷ்யாவில் வெளிவந்துள்ளது.
மலேசிய விமானம் மாயமான உடன் அது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கத்தில் உள்ள இடத்தில் பறந்ததாகவும், அங்கு தான் தரையிறங்கியதாகவும் கடந்த மாதம் 16ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த தி இன்டிபென்டென்ட் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு தான் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Social Buttons