சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 'ஐ.நா. பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்றினை செயற்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று உலகம் முழவதும் அனைத்துலக நாளையொட்டி பல்வேறு கவனயீர்ப்பு விடயங்கள் முன்னெடுகப்பட்டு வரும் நிலையில், சமகாலத்தில் தமிழீழத் தாயகப் பெண்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள், அனுப்புவதித்து வரும் துயரங்கள் தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி விவகார அமைச்சர் பாலாம்பிகை முரகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள்மீது சிறிலங்கா அரசும் அதன் கட்டமைப்பும் நடாத்திய, நடாத்திக்கொண்டிருக்கும் மனித உரிமைமீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றிற்கு சிறிலங்கா அரசை பொறுப்புகூற வைக்கும் தொடர்முயற்சியாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 25வது கூட்டத்தொடரில் அனைத்துலக பிரதிநிதிகள் கூடி விவாதித்துக் கொணடிருக்கும் இவ்வேளையில், தமிழீழத் தாயகத்தில் தமிழ் பெண்கள் முகம்கொடுத்து வரும் அவலநிலை பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றது.
சர்வதேச சமூகத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறியும், சமீபகால ஐ.நா. சபைத் தீர்மானங்களை உதாசீனம் செய்தும், சிறிலங்கா அரசு தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ந்து தனது இராணுவத்தைக் கொணடு இராணுவ ஆட்சி' நடாத்தி வருகிறது. இது பல்வேறு வழிகளில் தமிழர் வாழ்வாதாரங்களை வேரறுத்துக்கொண்டிருக்கிறது.
தமிழர்களின் வாழ்விடங்கள், விவசாய நிலங்கள் சிங்கள இராணுவத்தால் அபகரிக்கப்படுகின்றன. அரச துணையுடன் தமிழர் வாழ்விடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இன்று தமிழர் தாயகம் திட்டமிட்ட வகையில் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழர் விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்கள் செய்யமுடியாத நிலை தோன்றியுள்ளது.
ஆட்கடத்தல்கள், கொலை முயற்சிகள், கொலைப் பயமுறுத்தல்கள் நாளாந்த நிகழ்வுகளாகியுள்ளன. முன்பே குறிப்பிடப்பட்டது போல் நடந்தேறிய போர் காரணமாக தமது கணவன்மாரை இழந்த சுமார் 90,000, பெண்கள் பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு ஆகிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய நிறுவனங்கள் 2013ம் ஆண்டில் சிங்கள இராணுவத்தினர் தண்டனைப் பயமின்றி தமிழ் பெண்கள் மீது புரிந்த பாலியல் பலாத்காரம், வன்புணர்வுச் சம்பவங்கள் பலவற்றை தமது அறிக்கைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்.
மனிதப் புதைகுளிகள் பல சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு புதைகுழியினுள் காணப்பட்டவை எரியூட்டப்பட்ட பின் புதைக்கப்பட்டுள்ள பெண்களின் எலும்புக்கூடுகளாகும்.
2009 மே யுத்தம் முடிவடைந்த நிலையில் இராணுவத்தினர் பல அப்பாவி ஆண்களை (தமிழ்) விசாரணை என்ற பெயரில் அவர்களின் மனைவிமார், பிள்ளைகள் முன்நிலையில் இழுத்துச் சென்றுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக அவர்களின் விடுதலை வேண்டி அவர்களின் மனைவியர், உறவினர் தம்மாலான அனைத்தையும் செய்தும், அரசாங்கத்திடம் விண்ணப்பித்தும் எதுவித பலனும் கிட்டவில்லை.
கணவன்மார் பற்றிய எதுவித தகவலும் கிடைக்கப்பெறாது நம்பிக்கை இழந்த நிலையில் தமது கணவர்மாரைத் தேடிக் கண்டுபிடித்துத்தரும் உதவியை சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களின் பின்பும் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தங்குதடையின்றி அரங்கேறி வருவதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களும் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்படுகின்றன' என ' சிறிலங்காவில் இயங்கும் பிரச்சாரக் குழு' வினால் மிக அண்மையில் வெளியிடப்பட்டதும், ஐ.நா. நிபுணர் குழு உறுப்பினரான Ms Yasmin Sooka சித்திரவதைகளை விசாரிக்கும் பொறுப்பு வாய்ந்த ஐ.நா.வின் விஷேச அதிகாரிகளான Juan Mendez மற்றும் Manfred Nowak ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றதுமான அறிக்கை கூறுகிறது.
இராணுவத்தில் சேரும்படி தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் வற்புறுத்தப்பட்டு வருகின்றனர். தமிழர் சனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் இனஅழிப்பு நோக்கில் தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்படுவதோடு, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பப் பெண்கள் இராணுவத்தினரால் விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டும் வருகிறார்கள்.
பெண்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் நாளான மார்ச் 8 நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகை நோக்கி தமிழர் தாயகப் தமிழ் பெண்கள் முகம்கொடுத்துவரும் மேற்கூறிய ஆபத்துக்களையும், ஒடுக்கு முறைகளையும் ஒழிக்க கீழ்வரும் வேண்டுகோள்களை முன்வைக்கிறது.
1. நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரச அராஜகம், அடக்குமுறை தொடர்பில் காட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
2. சிறிலங்கா அரசினது மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், யுத்தமீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
3. தமிழ் பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்தளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வழிசெய்யும் வகையில் 'ஐ.நா. பாதுகாப்புப் பொறிமுறை' ஒன்று செயற்படுத்த ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பாலாம்பிகை முரகதாஸ் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment