கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் காணாமல் போன தனது அண்ணனுக்காக குரல் கொடுத்து வந்த தங்கையும் தாயும் இராணுவத்தால் கைது செய்யப்பபட்டுள்ளதாக தெரியவருகிறது.
14 வயதான விபூசிகா தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கின்றாள். என் அண்ணாவ தாங்கோ .. ‘ , ‘ என் அண்ணாவ எங்கே மறைச்சு வைச்சிருக்கிறீங்க… ‘என காணாமல் போனவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் ஒரு சிறுமி கதறி அழுவாள் .
அந்த சிறுமி மூன்று அண்ணன்களுக்கு நான்காவதாக பிறந்தவள். முதல் இரண்டு அண்ணாகளையும் பறிகொடுத்து விட்டாள் மூன்றாவது அண்ணனை தொலைத்து விட்டு தன் தாயுடன் சேர்ந்து தேடிக்கொண்டு இருக்கின்றாள்.
இவள் காணாமல் போனவர்களின் உறவுகளால் நாடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு தன் அண்ணாவை மீட்பதற்காக கதறி அழுவாள்.
தர்மபுரம் பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி திருகோணமலை செல்வநாயகபுரத்தில் மூன்று அண்ணன்களுக்கு நான்கவதாக பிறந்தவளே விபூசிகா என்னும் அந்த சிறுமி.
இவள் சிறு வயதாக இருந்த போதே தகப்பனார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் .அதன் பின்னர் இவளது தாயார் கூலி வேலை செய்தும் வீட்டில் இருந்து கடைகளுக்கு சாப்பாடு செய்து கொடுத்தும் அதன் மூலம் வரும் வருமானத்திலையே இவர்களை வளர்த்து வந்தார்.
இந் நிலையில் சிறுமியின் மூத்த அண்ணன் படித்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2006ம் ஆண்டு 10 மாதம் 20 ம் திகதி வீட்டுக்கு அருகாமையில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்ப்பட்டார்.
அதன் பின்னர் திருகோணமலையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என கருதி அந்த சிறுமியின் தாய் தன் ஏனைய மூன்று பிள்ளைகளுடனும் வன்னிப்பகுதிக்கு வந்து குடியேறினாள்.
பின்னர் யுத்தம் காரணமாக ஒவ்வொரு ஊராக இடம்பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு 5ம் மாதம் 5ம் திகதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்த போது அங்கு வீசப்பட்ட எறிகணைக்கு தனது இரண்டாவது அண்ணனையும் பறிகொடுத்தாள்.
அதன் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்ற வேளை 2009ம் ஆண்டு 5ம் மாதம் 15ம் திகதி தன் மூன்றாவது அண்ணனையும் தொலைத்து விட்டாள் .
அதன் பின்னர் தனது தாயுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டாள் . தன் மூன்றாவது அண்ணனனையும் பறிகொடுத்து விட்டதாக நினைதிருந்த வேளையில் தான் டு.டு.சு.ஊ அறிக்கை புத்தகத்தில் தன் அண்ணனின் படம் இருப்பதாக அறிந்து கொண்டாள்.
அவள் அந்த புத்தகத்தை பார்த்த போது புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் போராளிகள் என சில இளைஞர்கள் உடல் பயிற்சி செய்யும் படம் இருந்தது. அந்த இளைஞர்களுக்குள் தனது மூன்றாவது அண்ணனும் இருப்பதை கண்டாள்.
அதன் பின்னரே தன் அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில் அவனை தேடி அலைந்து கொண்டும் அண்ணனை மீட்பதற்காகவும் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்.
கணவனையும் இழந்து மூத்த இரண்டு ஆண் பிள்ளைகளையும் இழந்து மூன்றாவது ஆண் மகனையும் தொலைத்து விட்டு நான்காவது பெண் பிள்ளையுடன் சேர்ந்து தொலைந்து போன தன் மூன்றாவது மகனை பற்றிய தகவல் அறிய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு கதறி அழுது கொண்டு இருக்கிறாள் அந்த சிறுமியின் தாய்.
தொலைந்த தன் மூன்றாவது மகனை பற்றிய தவல்களை அறிய அந்த தாய் செல்லாத இடம் இல்லை எங்கும் அவனை பற்றிய தகவல்களை அந்த தாயால் அறிய முடியவில்லை.
தன் மகன் இன்றும் உயிருடன் ஏதோ ஓர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்றே அந்த தாய் நம்புகிறாள்.
தன் மகனை உடனே விடுதலை செய்யாவிட்டாலும் அவனை பற்றிய தகவல்களையாவது தெரிவியுங்கள் என்று கோரியே அனைத்து போராட்டங்களிலும் அந்த தாய் கலந்து கொண்டு கதறி அழுகிறாள்.
அதேவேளை அந்த தாய் தனது நான்காவது பிள்ளையான அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றியும் கவலையுடன் இருக்கிறாள்.
இந் நிலையிலேயே இன்று நபர் ஒருவரை துரத்திச் சென்ற இராணுவத்தினர் தர்மபுரப் பகுதியை முற்றுகையிட்டதாகவும் அதன் பின்னர் துப்பாக்கி சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு சென்ற இராணுவத்தினர் குறித்த தாயையும் மகளையும் கைது செய்து வைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
குறித்த பிரதேச மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களுக்கு அங்குள்ள நிலமைகள் தொடர்பாக தெரியப்படுத்தியதும் குறித்த பகுதிக்குச் சென்ற கஜேந்திரனை இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கூட வடகிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயாகத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. அவ்வாறான ஒரு நிலையில் இன்று ஒரு கிராமத்தை முற்றுகையிட்டு வைத்திருப்பது என்பது இன்னும் போர்க்கால துன்பங்களை மக்கள் அனுபவிக்கின்றார்கள் என்பதையும் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் அடக்கி ஆள முற்படுவதையும் வெளிப்படுத்துகின்றது.
ஒரு நபரை இராணுவம் துரத்தி வந்ததாகவும் அதன் பின் துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் எவ்வாறு ஒருவர் தப்பி ஓட முடியும் இராணுவத்தை தவிர யார் ஆயுதத்தை பயன்படுத்த முடியும்? எனவே குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை ஒரு திட்டமிட்ட செயலே என சந்தேகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
No comments
Post a Comment