Latest News

February 01, 2014

சந்திரிக்கா ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட மன்னார் மனிதப் புதைகுழி!
by admin - 0

தமிழர் தாயகத்தில் சந்திரிக்கா ஆட்சியில் அரங்கேற்றப்பட்ட மனித படுகொலைகளை எண்ணிவிட முடியாதவை. 
அதிகாரத்தில் சந்திரிக்காவும், பாதுகாப்பு அமைச்சராக அவரது மாமனார் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையும் இருந்தபோது தமிழினத்தை அழிப்பதில் கங்கணம் கட்டி, அன்றைய இன அழிப்பின் முதன்மை கதாநாயகர்களாக இவர்கள் விளங்கினார்கள்.

மன்னாரின் திருக்கேதீஸ்வரம் என்ற பகுதி கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருந்துள்ளது. தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதப் புதைகுழியின் எச்சங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் புதைக்கப்பட்ட மனித உடல்களின் எச்சங்களாக கணிக்கப்படுகின்றது. எனவே, இது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்பது உறுதியாகின்றது.

1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ம் நாள் சிறீலங்காவின் பிரதமராக பொறுப்பேற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்கா, அந்த ஆண்டே சிறீலங்காவின் ஐந்தாவது சனாதிபதியாகவும் பதவி ஏற்றார். பதவியேற்ற அடுத்த கணம் அவர் மேற்கொண்ட நடவடிக்கையே தமிழின அழிப்புத்தான். குறிப்பாக வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்பினை துண்டாடுவதில் முனைப்புடன் ஈடுபட்டார்.

இந்த மன்னார் மனிதப் புதைகுழிக்கும் தற்போது சந்திரிக்கா குமாரதுங்காவிற்கும் மற்றும் இறந்தும், உயிருடன் இருக்கும் பல படைத் தளபதிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை எடுத்துக்காட்டவேண்டிய தேவை இன்று தமிழ்த் தலைவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உண்டு. சிங்கள ஆட்சியாளர்களும் படைத்தளபதிகளும் இனப்படுகொலையாளிகள் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிட முடியாது. அந்தவகையில் சந்திரிக்கா ஆட்சியில் இருந்தபோது உருவாக்கப்பட்ட மன்னார் மனித புதைகுழி தொடர்பிலான சில தகவல்களை இங்கு ஆதாரமாக முன்வைக்கின்றோம்.

1996 தொடக்கம் 1998 வரை சிறீலங்காவின் படைத்தளபதியாக ஜெனரல் றொகான் தழுவத்தை இருந்தார். அப்போது சிறீலங்காவின் படைத்துறையில் சரத்பொன்சேகா சிங்க றெஜிமன்ட் படைத்தளபதியாகவும், பின்பு வன்னி கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க துடித்த சந்திரிக்கா, தன் ஆட்சியினை தக்கவைத்துக்கொள்வதற்காக படை வெற்றியே ஆதாரம் என்பதை உணர்ந்து பல படை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

‘சமாதானத்துக்கான போர்’ என்ற பெயரில் சந்திரிக்கா அரசு அன்று மேற்கொண்ட இன அழிப்பிற்கு அளவே இல்லை. உலக நாடுகளை ஏமாற்றும் பரப்புரையில் லக்ஸ்மன் கதிர்காமர் இறக்கிவிடப்பட்டார். தமிழர் என்ற முகமூடியுடன் களமிறக்கிவிடப்பட்ட இவர் தமிழர்களை அழிப்பதற்காக விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தும் நடவடிக்கையில் தீவிரமாக இறக்கியிருந்தார். அதேவேளை, சமாதானத்திற்கான போருக்கு நிதிதிரட்டும் நடவடிக்கையிலும், படைபொருட்கள் திரட்டும் நடவடிக்கையிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டது.

1997 ஆம் ஆண்டு மே மாதம் வடக்கினை துண்டாடுவதற்காக ஜெயசிக்குறு படைநடவடிக்கையினை சந்திரிக்கா அரசு மேற்கொண்டது. வவுனியாவினையும் மன்னாரினையும் துண்டாட எடிபல நடவடிக்கையினை படையினர் மேற்கொண்டார்கள். சந்திரிக்காவின் ஆட்சியில் நடத்தப்பட்ட படை நடவடிக்கை அனைத்து அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தை தலைமையில் நேரடி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது. அன்று சிறீலங்காப் படையின் வன்னிக் களமுனையில் கட்டளை தளபதியாக ஜெனரல் சரத் பொன்சேகா பணியாற்றிக்கொண்டிருந்ததுடன், சிங்கறெஜிமன்ட் படை தளபதியாகவும் காணப்பட்டார்.

சமாதானத்திற்கான போர் என்ற சந்திரிக்காவின் இந்தப் படை நடவடிக்கை மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். பல ஆயிரம் மக்கள் காயமடைந்தார்கள். ஏராளமான மக்கள் உயிரிழந்தார்கள். அன்று வன்னிக்கான தொடர்புப் பாதையாக அதாவது பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் ஊடாக பள்ளமடு ஊடான ஒரு தடைமுகாம் பாதையும், ஒமந்தை ஊடான ஒரு தடைமுகாம் பாதையும் காணப்பட்டது. இது இரண்டும் இடையிடை படையினரின் நடவடிக்கையினால் மூடப்பட்டுவிடும்.

இவ்வாறான நிலையில் அன்று பூநகரியினை கைப்பற்றும் நோக்கில் மன்னார் பூநகரி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நகர்ந்து செல்லலாம் என்ற செயற்பாட்டின் ஊடாக சிறீலங்கா படையினர் ரணகோச என்ற பெயரிலான படை நடவடிக்கையை முன்னெடுத்தனர். இந்த ரணகோச 1, 2, 3, 4 என்று தொடரான படைநடவடிக்கையாக இடம்பெற்றது.

சிறீலங்காவின் 55வது டிவிசனும், 53வது டிவிசன் படையினரும் மன்னார் களமுனையில் இறக்கப்பட்டார்கள். இந்தப் படையினருடன் ஏர் மொபைல் பிரிகேட் படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர். மன்னார் ஊடான இந்தப் படை நடவடிக்கையின் மூலம், மன்னார் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகள் படையினரின் வசமானது. இதன்போது மன்னாரின் சிராட்டிகுளம் தொடக்கம் பெரியமடு வரையிலும் படையினர் நகர்வினை மேற்கொண்டதுடன், குறிப்பிட்ட பகுதியில் சிலகிராம மக்கள் படையினரின் வல்வளைப்பில் முழுமையாகக் கைது செய்யப்பட்டார்கள். இதன்போது இரணைஇலுப்பைகுளம் தொடக்கம் பாலம்பிட்டிவரையிலும் படையினரின் வல்வளைப்பு இடம்பெற்றது.

படையினரின் இந்த படைநடவடிக்கையில் பள்ளமடு, பெரியமடு, சன்னார், அடம்பன், ஆட்காட்டிவெளி, பரப்பு கடந்தான், கட்டையடம்பன் போன்ற பகுதிகளில் உள்ள பலகுடும்பங்கள் குடும்பம், குடும்பமாக படையினரிடம் அகப்பட்டுகொண்டார்கள். படையினரால் கைதுசெய்யப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையம் தான் பூந்தோட்டம் நலன்புரி முகாம். அதேவேளை, படையினரால் கைதுசெய்யப்பட்ட பலர் குடும்பம் குடும்பமாக காணாமல்போயிருந்தார்கள். இவ்வாறு படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த மக்கள், படுகொலை செய்யப்பட்டுள்ளமையையே இந்த மன்னார் மனிதப்புதைகுழி எடுத்துக்காட்டுகின்றது.

மறுபுறத்தில் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலம் மாங்குளம் தொடக்கம் ஒட்டிசுட்டான் வரை படையினர் படைநகர்வினை மேற்கொண்டார்கள். அப்போது மேற்குக் களமுனை மடு, அடம்பன், ஆண்டான்குளம், விடத்தல்தீவு வரையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்டது. ஆனால், திருக்கேதீஸ்வரம் சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டிலேயே அப்போதும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் திருக்கேதீஸ்வரம் கோவில், பாலாவி தீர்த்தம் போன்ற பகுதிகளுக்கு சிவராத்திரிக்கு வழிபாடு நடத்தக்கூட மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, சிறீலங்கா ஆட்சியாளர்களின் இனப்படுகொலையின் ஆதாரமே இந்த மன்னார்ப் புதைகுழி. தமிழினத்தை அழித்த இனப்படுகொலையளிகள் வரிசையில் சந்திரிக்கா பண்டாரநாயக்காவும் மிகமுக்கியமானவர். இவரொரு இனப்படுகொலையாளி என்பதை இந்த மன்னார் மனித புதைகுழி ஊடாக உலகிற்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்தவேண்டிய கட்டாயம் தமிழர்களின் கடமையாகும்.

சுபன்
நன்றி: ஈழமுரசு
« PREV
NEXT »

No comments