மாவிலாறு விவகாரத்தை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு ஆர்வமோ அக்கறையோ கொண்டிருக்கவில்லை. இதுவே பிரச்சினை முற்றுவதற்கு காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் யஹன் றிசன் குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றி சொல்வதாகத் தெரிவித்துள்ள திருமதி அனந்தி சசிதரன் இதன்மூலம் தனது கணவர் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகள் மாவிலாறை பூட்டியமையே மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்ததாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களில் தொடர்புபட்டவராக எனது கணவரும் அப்போதைய திருமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவருமான எழிலனின் செயற்பாடுகளை சிலர் அண்மைக்காலமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று விமர்சித்து வருகின்றனர். இத்தகைய அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களுக்கும் பதிலளிப்பதாகவே, இலங்கையின் முன்னாள் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் தலைவர் உல்ப் யஹன் றிசன், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி அமைந்துள்ளது. மாவிலாறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க அப்போது எனது கணவர் விடுதலைப்புலிகளது தலைமையின் பணிப்புரைக்கு ஏற்ப முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். அந்தக் காலப் பகுதியில் இரு தரப்புகளிடையேயும் இணக்க நிலையை ஏற்படுத்த கடுமையாகப் பாடுபட்டவர் போர் நிறுத்தக்கண் காணிப்பு குழு தலைவர் உல்ப் யஹன் றிசன்.
உண்மையில் இலங்கை அரசு தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினை களைக் கூடத் தீர்த்து வைக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. அதனாலேயே மாவிலாறு பிரச்சினையை தீர்த்து வைக்காது கைவிட்டதுடன், வீணான சீண்டல்களிலும் ஈடுபட்டு போரை மீள ஆரம்பிக்க இலங்கை அரசே காரணமென்பது தெளிவுபட அம்பலமாகியுள்ளது.
எனது கணவர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் இதன் மூலம் அம்பலப்படுத்தப்படுகின்றன. சுமார் எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதும் தனது மனச்சாட்சிப்படி உண்மைகளை கூறிய இலங்கையின் முன்னாள் போர் நிறுத்தக்கண் காணிப்பு குழுத் தலைவர் உல்ப் யஹன்றிசனுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment