புதிய மகசீன் சிறையின் குளியல் அறையில் விழுந்து மரணமானதாக கூறப்படும் பிரித்தானிய தமிழரான விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர், சிறைச்சாலையின் புலனாய்வு அதிகாரியின் தாக்கியதன் காரணமாகவே இறந்தாக சிறைச்சாலையின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புலனாய்வு பிரிவானது சிறைச்சாலை அத்தியட்சகர்களாக பாதுகாப்பு பிரிவினருக்கு உதவுவதற்காக அதிகாரபூர்வமற்ற வகையில் ஏற்படுத்தப்பட்ட பிரிவு எனவும் அதில் பணியாற்றும் அதிகாரிகள் சீருடை அணிவதில்லை என்பதுடன் சாதாரண உடையில் பணிப்புரிந்து வருபவர்கள் எனவும் கூறப்படுகிறது.
உயிரிழந்த விஸ்வலிங்கம் கோபிதாஸின் மரணத்திற்கு சிறைச்சாலையின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றும் ஜெயிலர் இந்திக்க என்பவரே பொறுப்புக் கூறவேண்டும்.
இந்த அதிகாரி கோபிலிங்கம் மீது இதற்கு முன்னரும் பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சிறைச்சாலையில் இனவாதத்தை தூண்டிவிட்டு கைதிகளை பயனபடுத்தி கோபிலிங்கம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனை கோபிதாஸ் தனது தந்தையாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தி அவரது தந்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடந்த 23 ஆம் திகதி கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட ஜெயிலர் இந்திக்க, கடந்த 24 ஆம் திகதி சிறையில் வைத்து கோபிதாஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அவரின் உடலுக்குள் இரத்த போக்கு ஏற்பட்டு இந்த மரணம் சம்பவித்துள்ளது.
கோபிலிங்கம் மரணமடைந்ததை அடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மூலையில் நரம்பு ஒன்று வெடித்ததில் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாக மரணம் சம்பவத்து்ளளதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்ற மரண விசாரணை அதிகாரி சடலத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டுப்பிடித்த காயங்கள் தொடர்பில் அடுத்த சில தினங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கையில் மேலதிக தகவல்களை வழங்க காலஅவகாசம் கேட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் வசித்து வரும் மரணமடைந்தவரின், தந்தை அண்மையில் அவரை பார்க்க சென்றிருந்த போது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் மேலும் இருவருக்கு எழுதிய கடிதங்களை அனுப்பி வைக்குமாறு கொடுத்துள்ளார்.
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் போது புலனாய்வு அதிகாரி கைதிகளுக்கு அருகில் காவலில் இருப்பது வழக்கம்.
இந்த நிலையில், கோபிதாஸ் தந்தையிடம் வழங்கிய மூன்று கடிதங்களை அங்கிருந்த புலனாய்வு அதிகாரி பலவந்தமாக பறித்தெடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த கடிதங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கடந்த 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளின் புலனாய்வு அதிகாரி கோபிலிங்கத்திடம் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளார். விசாரணைகளின் போதே கோபிதாஸ், இந்திக என்ற அதிகாரியினால் தாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக அங்கு பல பிரதேசங்களில் உள்ள தமிழர்களை லண்டனுக்கு வரவழைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமிழர்களை பயன்படுத்தி ஜனாதிபதி மீது அழுகிய முட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்த ஏற்பாடுகளை கோபிதாஸே செய்ததாக கூறி இந்திக்க என்ற அதிகாரி ஏனைய சிங்கள கைதிகளை தூண்டி வந்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் போர் வெற்றிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2007 ஆம் ஆண்டே கோபிதாஸ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் எந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில், கடந்த 8 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.
பாதாள உலக குழு ஒன்றுடன் நடந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கு கப்பம் கொடுக்க மறுத்த காரணத்தினாலேயே கோபிதாஸ் கைது செய்யப்பட்டார் என்பது பகிரங்கமான விடயமாகும்.
விஸ்வநாதன் கோபிதாஸின் புதல்வரான குமார் விஸ்வலிங்கம் என்பவர் அண்மையில் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்துள்ளதுடன் தனது தந்தையை சிறையில் கொலை செய்யும் திட்டமொன்று இருப்பதாக முறைப்பாடு செய்திருந்தார்.
அவரது முறைப்பாடு தொடர்பில் பதிலளித்துள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகள், இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கையின் அடிப்படையில் விஸ்வநாதன் கோபிதாஸை கூடிய விரைவில் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
கோபிதாஸின் மரணம் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் ஜெயிலர் இந்திக்க என்பவர் சிறையில் ஏற்கனவே இடம்பெற்ற கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என எமக்கு தகவல் வழங்கிய வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கண்ணீருடன் கோபிதாஸின் தந்தை கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் எனது மகன் கொலை செய்யப்பட்டார். அதற்கு பல சான்றுகள் உள்ளன என கோபிதாஸ் தந்தை விஸ்வலிங்கமும், அரசு செய்ததற்கு வாய்ப்புள்ளது என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் சுரேஸ் எம்.பி ஆகியோர் தெரிவித்தனர்.
இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் கைதிகளை பாதுகாப்பது மிக பிரதானம் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியவர்கள் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்கள்.
No comments
Post a Comment