பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஷரத்துகளை சேர்க்க அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இலங்கை மீது போர் தொடுத்தாவது ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற ரீதியில் தேர்தல் அறிக்கை இருக்கலாமா என்று ஈழத் தமிழ் தலைவர் ஒருவரிடம் பாஜக தலைவர்கள் ஆலோசனை கேட்டதாகதி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் தேதியும் கூட்டணி களும் இன்னும் இறுதியாகவில்லை என்றாலும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் மும் முரமாய் இருக்கின்றன. பாஜக தரப்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, உள்நாட்டுப் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடனான உறவு, மாநில அரசுகளுக்கு உரிய முக்கியத்துவம், வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற வற்றை மையப்படுத்திப் பேசி வருகிறார்.
அவர்களின் தேர்தல் அறிக்கையிலும் இந்த அம்சங்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்றாலும், ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா திடமான நடவடிக்கை எடுக்கும் என்பதற்கான உத்தரவாதத்தையும் அறிக்கையில் சேர்க்க வைக்க தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பாஜக-வின் மூத்த தலைவர்கள் இருவர் இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அண்மையில் சென்னையில் ரகசி யமாக சந்தித்துப் பேசினர்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களின் யோசனைகளையும் தேர்தல் அறிக்கையில் சேர்க்கத் தயாராய் இருக்கிறோம் என்று சம்பந்தனிடம் சொன்ன பாஜக தலைவர்கள், மத்தியில் அமையும் புதிய அரசு, தூதரக அளவிலான நடவடிக்கைகளின் மூலமே ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா அல்லது இந்திரா காந்தி எப்படி கிழக்கு பாகிஸ்தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதைப்போல (இலங்கை மீது இந்தியா போர் தொடுத்து) ஈழ விவகாரத்திலும் மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டார்களாம்.
இந்த சந்திப்பின்போது, “இலங்கையில் நடந்த கொடுமைகளைப் பார்த்தபோது பேசாமல் விடுதலைப்புலி ஆகி விடலாமா? என்று நான்கூட சில நேரங்களில் நினைத்தது உண்டு” என்று பாஜக தலைவர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட சம்பந்தன், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனக்குள் இருந்த சில யோசனைகளையும் சொன்னாராம்.
முடிவாக, ஈழப் பிரச்சினையில், காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை மோடி தலைமையில் அமையும் புதிய அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயம் செய்யும்’’ என்று உறுதி சொல்லி சம்பந்தனிடம் விடைபெற்றார்களாம் பாஜக தலைவர்கள். எனவே, பாஜக தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முக்கியமான வாக்குறுதி சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது எனவும் தி ஹிந்து மேலும் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment