Latest News

February 12, 2014

'உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம்": யாழில் 15ஆம் திகதி ஆர்ப்பாட்டம்
by admin - 0

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீன்பிடி மற்றும் விவசாயம் என்பவற்றில் மக்களின் உரிமைகளை உறுதிசெய்ய ஒன்றிணைந்து போராடுவோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
 
அதன்படி கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் மீள்குடியேறாத மக்களை விரைவில் மீள்குடியேற்ற கோரியும், காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதனை நிறுத்தி உண்மை நிலையினை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த வேண்டும் , விவசாயிகளின் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார மேம்பாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் குறித்த போராட்டம் 15ஆம் திகதி காலை 9மணிக்கு யாழ் நகரில் நடைபெறும் என்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்துடன் இணைந்து யாழ். மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் அரசியற்கட்சிகளும் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை சிலாபத்தில் நடைபெற்ற மீனவர்கள் போராட்டத்தின் போது கடந்த ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட அன்ரனி பெர்ணாந்து அவர்களின் நினைவுநாள் எதிர்வரும் 15ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
 
அந்தநாளினை நினைவு கூரும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனினும்  யாழ்ப்பாணம் மட்டும் அல்லது பொத்துவில் , சிலாபம் மற்றும் காலி ஆகிய இடங்களிலும் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள்  மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தினை மேற்கொள்ள உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments