இலங்கையில் ஊடக சுதந்திரம் உரிய வகையில் பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் நிலவிவருகின்றன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் மறுத்துவரும் அரசாங்கம் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு தான் அனுமதித்துள்ளதாக அடிக்கடி தெரிவித்து வருகின்றது. யுத்த காலத்தில் எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் என்பது பெரும் கேள்விக்குறியான விடயமாகவே மாறியிருந்தது.
யுத்தம் தொடர்பான செய்திகளுக்கு தடைகள், தணிக்கைகள் விதிக்கப்பட்டன. ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் செய்தித்தணிக்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து இறுதி யுத்தகாலத்தின் போதும் யுத்த செய்திகளுக்கு தடைகளும் தணிக்கைகளும் விதிக்கப்பட்டன. ஊடக சுதந்திரம் என்பது ஒட்டுமொத்தமாக நசுக்கப்படும் நிலை காணப்பட்டது.
2000ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நிமலராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களான ஜி. நடேசன், டி. சிவராம், சுகிர்தராஜன், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க உட்பட பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய படுகொலைகள் ஊடக சுதந்திரத்தை பெரும் கேள்விக்குறியாக மாற்றியிருந்தது.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையும் அச்சுறுத்தப்பட்டமையும் காரணமாக பெருமளவான தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டு புலம் பெயர்ந்தனர். இத்தகைய சம்பவங்கள் நாட்டில் ஊடக சுதந்திரத்தை வெகுவாகப் பாதித்தது. அச்சுறுத்தல்கள் காரணமாக ஊடகவியலாளர்களே தமக்கு சுயதணிக்கை விதிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இந்த நிலையில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் சுய தணிக்கை என்பது அமுலிலேயே இருந்து வருகின்றது.
இந்த நிலையில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு ‘பத்திரிகைத்துறையில் சுய கட்டுப்பாட்டு ஒழுக்கக்கோவையும் ஒழுக்க நெறி அடிப்படையிலான அறிக்கையிடலும்’ எனும் தலைப்பில் சர்வதேச ஊடக மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து 14 ஆம், 15 ஆம் திகதிகளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இரண்டு நாள் மாநாடு இடம் பெற்றது.
இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளின் ஊடகப்பிரமுகர்கள், உள்நாட்டு ஊடகவியலாளர்கள், சர்வதேச ஊடக அமைப்புக்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் சாவித்திரி குணசேகர, யுனஸ்கோ நிறுவனத்தின் தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்ட விசேட நிபுணர் இஸ்க்ரா பனெவ்ஸ்கா, பிரித்தானியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளர் இயன் பில்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் சாவித்திரி குணசே கர பத்திரிகைத் துறையில் சுய கட்டுப்பாடு என்பது ஊடகத்துறையின் சமூகப்பொறுப்பை எடுத்துக்காட்டுகின்றது. அதாவது ஊடகங்கள் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை பல நாடுகளில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் தகவல் அறியும் சட்டமூலம் இல்லாத சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டில் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து பேராளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுயகட்டுப்பாட்டு ஒழுக்கவியல் பற்றி ஆராய்கின்ற இந்த தருணத்தில் அரசாங்கத்தினால் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதைவிட சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதே சிறந்தது என்று இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானியாவின் சிரேஷ்ட பத்திரிகையாளர் இயன் பீல்ஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். பிரித்தானியாவில் இவ்வாறான சுய கட்டுப்பாடு கடந்த 300 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் என்பது வித்தியாசமான முறையிலேயே கையாளப்படுகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்குலகநாடுகளுடன் ஒப்பிடும் அளவிற்கு இங்கு முழுமையான ஊடக சுதந்திர நடைமுறை இன்னமும் உருவாகவில்லை. மேற்குலகநாடுகளில் ஊடகங்கள் ஒருவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதை தடுப்பதற்காகவே சுய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. எனவே, இங்கு சுய கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது என்பது வேறு விடயமாகவும் மேற்குலகநாடுகளில் சுய கட்டுப்பாடு என்பது மற்றொரு விடயமாகவுமே அமைந்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற பத்திரிகைப் பேரவையின் சர்வதேச மாநாட்டின் முடிவில் பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஊடக சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது, ஊடகங்கள் ஒழுக்கநெறிக்கோவையை கடைப்பிடிப்பது அவசியமாகும். தகவல் அறியும் சட்டமூலத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும், அரசாங்கம் ஒழுக்கக் கோவையை உருவாக்க இடமளிக்கக்கூடாது. செய்திகளில் உரிமையாளர்கள் தலையிடக்கூடாது. மக்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கின் ஊடக நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படவேண்டும் என்ற பரிந்துரைகள் மாநாட்டின் முடிவில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகளில் முக்கிய விடயங்களாக நாட்டின் ஊடக சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பதுவும் இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.
நாட்டின் ஊடக சுதந்திரத்தில் அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடக்கூடாது என்ற விடயமானது ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான விடயமாகும். யுத்தகாலத்தில் ஊடக சுதந்திரத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் அதிகமாகவே காணப்பட்டன. அத்துடன் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், ஊடகங்கள் தற்போதும் சுயதணிக்கையினையே பின்பற்றி வருகின்றன. எனவே, இத்தகைய நிலையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இதேபோல் தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரையிலான ஐக்கியதேசிய முன்னணியின் ஆட்சியில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து இம்முயற்சி கைகூடவில்லை. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இதற்கான சட்டவரைபு கொண்டுவரப்பட்டபோதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவினால் தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டது. எனினும் அந்தப் பிரேரணை விவாதிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
உலகில் 97 நாடுகளில் தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறையில் உள்ளது. எனவே இதன் அவசியம் கருதி இந்த சட்டமூலத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஊடக மாநாடானது ஊடகவியலாளர்களின் செயற்பாட்டிற்கு உந்து சக்தியான விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளானது நாட்டின் ஊடக சுதந்திரத்தை கட்டிவளர்ப்பதற்கான படிக்கற்களாக அமைந்திருக்கின்றன.
எனவே, இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கமும் ஊடக நிறுவனங்களும் முன்வரவேண்டும். இதன் மூலமே எமது நாட்டில் சிறந்ததொரு ஊடகத்துறையை கட்டியெழுப்ப முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்
No comments
Post a Comment