Latest News

January 16, 2014

மன்னார் மனித புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள்
by admin - 0

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி 7 ஆவது தடவையாக மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை தோண்டப்பட்ட போது மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள.


இதனை அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் கடந்த  7 ஆம் திகதி வரை 6 தடவைகள் மன்னார் நீதிவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்பட்ட போது  32 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பல முழுமையாகவும்,சில மனித எலும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக மீண்டும் இன்று வியாழக்கிழமை (16-01-2013)   மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் 7 ஆவது தடவையாக மனித புதை குழி தோண்டப்பட்டது.

இதன் போது புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. முதலில் மண்டையோடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. பின் அதன் ஏனைய பாகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ள எழும்புக்கூடுகளில் ஒரு மண்டையோட்டின் வாய் முழுமையாக திறந்திருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த மண்டையோட்டின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள அடையாளங்களும் காணப்படுகின்றமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை இன்று மதியம் குறித்த மனித புதை குழி காணப்படுகின்ற இடத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலன் அப்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

இன்று வியாழக்கிழமை மதியம் 1.30 மணிவரை புதைகுழி தோண்டும் பணி இடம் பெற்றது. மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை புதை குழி தோண்டும் பணி இடம்பெறவுள்ளது .
« PREV
NEXT »

No comments