Latest News

January 25, 2014

ஜனாதிபதியின் புதல்வர் பரீட்சையில் தோல்வி: சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்
by Unknown - 0

இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ, வினாத்தாளில் உள்ள தெரிவு செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்க தவறியுள்ளார்.
இதனையடுத்து விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ள விமான சேவைகள் அதிகாரசபை, ராஜபக்ஷ தம்பதியினரை திருப்திப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான சேவைகள் அதிகாரசபையின் பரீட்சைகளுக்கான பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த கருணாநந்த மல்லிகாராச்சி என்பவரே இவ்வாறு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் உயிர் பாதுகாப்பு கருதி தலைமறைவாகியுள்ளார்.
விமானிகள், விமான சேவை ஊழியர்கள், விமான பொறியிலாளர்கள் ஆகியோருக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரம் இலங்கை விமான சேவைகள் அதிகாரசபைக்கே உள்ளது.
விமானியாக பணியில் சேர முயற்சித்து வரும் ரோஹித்த ராஜபக்ஷ அதற்காக ஆரம்ப பரீட்சையில் தோல்வியடைந்ததன் காரணமாக ஆத்திரமடைந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பரீட்சை சம்பந்தமான வினாத்தாள்களையும் பரீட்சை முடிவுகளையும் மல்லிகாராச்சி பணத்திற்கு விற்றுள்ளதாக தனது ஆதவான ஊடகங்கள் மூலமான பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தி இலங்கை விமான சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், தனக்கு தற்பொழுது மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருணாநந்த மல்லிகாராச்சி, விமான சேவைகள் அதிகாரச் சபையின் தலைவரிடம் கூறியுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை தலைமறைவாக இருக்குமாறு மல்லிகாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ள விமான சேவைகள் அதிகாரச் சபையின் தலைவர், ஜனாதிபதியை தேற்றுவதற்காக இணையத்தளம் ஊடாக பரீட்சை எழுத ஜனாதிபதியின் புதல்வருக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரோஹித்த ராஜபக்ஷ, இணையத்தளம் ஊடாக பரீட்சைக்கு தோற்றி 8 வினாத்தாள்களுக்கும் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளதுடன் விமானிக்கான பாடநெறியை கற்பதற்காக தற்போது ரஷ்யா சென்றுள்ளார்.
விமானியாக தெரிவாக ஒருவருக்கு இந்த விமானிக்கான அனுமதிப்பத்திரம் இருப்பது மேலதிக கல்வி தகுதியாக கருதப்படுகிறது என்பதால் ரோஹித்த ராஜபக்ஷ இந்த விமானிக்கான பாடநெறியை கற்க தீர்மானித்திருந்தார்.
« PREV
NEXT »

No comments