கடந்த வருடம் பருவமழை பொய்த்ததால் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல குளங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இம் மாவட்டத்தில் வரட்சி ஏற்படலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருடம் இதேகாலப்பகுதியில் கிளிநொச்சியில் உள்ள பிரதான குளங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பி இரண்டு தடவைகள் வான் பாய்ந்தது. குறிப்பாக இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் வான் பாய்ந்தது. இது 12 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற நிகழ்வாகக் காணப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
ஆனால், தற்போது இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 17 அடி 06 அங்குலமாக காணப்படுகிறது. இந்த நிலைமை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் எதிர்காலத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் கிளிநொச்சியில் உள்ள குளங்களே காரணமாக காணப்படுகின்றன.
15.01.2014 அன்றைய கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் அக்கராயன் குளம் 09 அடி 10 அங்குலம், இரணைமடுக் குளம் 17 அடி 06 அங்குலம், கல்மடு குளம் 12 அடி 06 அங்குலம், பிரமந்தனாறு குளம் 04 அடி 08 அங்குலம், புதுமுறிப்பு குளம் 08 அடி 05அங்குலம், கனகாம்பிகைக்குளம் 06 அடி 01 அங்குலம், கரியாலைநாகபடுவான் குளம் 03 அடி 05 அங்குலம் ஆக நீர்மட்டம் காணப்பட்டது.
ஆனால், கடந்த காலங்களில் இக்காலப்பகுதியில் குறித்த சகல குளங்களும் முழுமையாக நிரம்பிய நிலையிலேயே காணப்பட்டுள்ளன.
இவ்வருடம் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பருவ மழையை நம்பிய விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட நெற்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இனிவரும் நாட்களில் மழை பெய்து குளங்களின் நீர் மட்டம் உயராதுவிடின் இந்த வருடம் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படுவதுடன், கிளி-நொச்சியில் நிலத்தடி நீரும் குறைவடையும் என இப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment