இரணைமடு திட்டத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பரவலான கருத்துக்கள் எழுகின்றன. இது உண்மையில் இத்திட்டம் பற்றி அறியாமையினால் ஏற்படும் விளைவேயாகும். இத்திட்டமானது உண்மையில் கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் போனால் இன்னும் ஓரிரு தசாப்த காலத்துக்குள் இரணைமடுக்குளம் மோசமான பாதிப்பை எதிர்நோக்கும். இது கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். எனவே, தூர நோக்குடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி சுகாதார திட்டத்துக்கான ஆசிய அபிவிருத்தி வங்கி ஆலோசகரும் முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருமான எஸ்.எம்.குரூஸ் தெரிவித்தார்.
இரணைமடு திட்டம் குறித்து வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கேள்வி: இரணைமடுக் குளம் தற்போது புனரமைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
பதில்: இரணைமடுக்குளம், அதன் கட்டுக்கள் மற்றும் நீர் வழங்கல் வாய்க்கால்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பல வருடங்களாக திருத்தப்படாததால் அதன் நீர் கொள்ளளவு மிகவும் குறைவாக இருக்கிறது. இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டின் உயரம் 34 அடியாக இருந்த போதிலும் தற்போது 28 – 30 அடி உயரம் வரையே நீரை சேமிக்கக்கூடியதாக இருக்கிறது. 34 அடி உயரமான அக்குளத்தின் கொள்திறன் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து ஐந்நூறு ஏக்கர் அடியாக இருந்தாலும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையின் படி வருடாந்தம் சாதாரணமாக 82 ஆயிரம் ஏக்கர் கொள்ளளவையே கிளிநொச்சிப் பிரதேச மக்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே அதன் முழுமையான கொள்ளளவிலிருந்து 24 ஆயிரம் ஏக்கர் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். கிளிநொச்சி விவசாயிகள் ஒரு ஏக்கர் பயிர் செய்ய 9 ஏக்கர் அடி தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, பயன்படுத்தாதிருக்கும் இந்த 24 ஆயிரம் அடி ஏக்கர் தண்ணீரையும் அவர்கள் முழுமையாக பயிர்ச் செய்கைக்கென உபயோகித்தால் தற்போது இருப்பதைவிட 26 ஆயிரம் ஏக்கர் மேலதிகமாக பயிர் செய்ய முடியும். இது வருடாந்தம் வீணாகிப் போகின்றது.
இரணைமடுக் குளத்தின் கீழ்வாய்க்கால்கள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. இது புனரமைக்கப்பட்டால் நீர் விரயமாவது தடுக்கப்பட்டு 1 ஏக்கர் அடி நீரில் 7 ஏக்கர் பயிர் செய்யக் கூடியதாக இருக்கும். அதேவேளை விவசாயிகள் மேலும் கவனமாக நீரைப் பாவித்தால் 1 ஏக்கர் பயிர்செய்ய 5 ஏக்கர் அடி நீர் போதுமாக இருக்கும்.
இரணைமடுக் குளத்தின் முழுமையான 34 அடியிலும் நீரைத் தேக்குவதற்கு அணைக்கட்டு பலப்படுத்தப்பட வேண்டியிருக்கிறன. அதேபோல் நீர் விரயமாவதைத் தடுப்பதற்கு கீழ்வாய்க்கால்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டியுள்ளன. அத்தோடு மக்களும் இத்திட்டத்துடன் இணைந்து நீர் முகாமைத்துவத்தை சரியாகக் கடைப்பிடித்தால் ஒரு சிறுபோகத்திற்கு 16 ஆயிரம் ஏக்கர் பயிர் செய்ய 80 ஆயிரம் ஏக்கர் அடி நீர் போதுமானதாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழேயே குளக்கட்டு பலப் படுத்தப்பட்டு 36 அடி வரை உயர்த் தப்படவுள்ளது. இவ்வாறு செய்யும் சந்தர்ப்பத்தில் இரணைமடுக் குளத்தின் கொள்திறன் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 அடியில் இருந்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் அடியாக அதிகரிக்கப்படும். அதாவது 13500 ஏக்கர் அடி கூடுதலாக பெறப்பட இருக்கிறது. இவ்வாறு இந்தக் கட்டு உயர்த்தப்படுவதன் மூலம் கிளிநொச்சி, பழை, பூநகரி, யாழ்ப்பாணம் உட்பட பிரதேசங்களுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் அடி நீர் பெறப்படும்.
ஒரு இலட்சத்துக்கு 20 ஆயிரம் ஏக்கர் அடி மொத்தக் கொள்திறனில் 10 வீதம் மாத்திரமே யாழ்ப்பாணத்துக்கு குடிநீருக்காக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 12 ஆயிரம் ஏக்கர் அடி நீரைப் பெறுவதற்கு 20 வருட காலம் செல்லும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த 12 ஆயிரம் ஏக்கர் அடி தண்ணீர் 90 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும். முதலாவது வருடத்தில் 10 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும். இரண்டாவது வருடத்தில் 18 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும். மேலும் வருடாந்தம் 4 ஆயிரம் வீடுகள் வீதம் அதிகரிக்கப்பட்டு 20 வருடத்தில் அதாவது 2036 ஆம் ஆண்டு 90 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும். ஆகவே இந்த 12 ஆயிரம் அடி ஏக்கர் தண்ணீர் முழுமையாக வழங்கப்பட 20 வருட காலம் செல்லும். இது விவசாயிகளுக்கு கூடுதலான நன்மையளிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இத்திட்டத்தோடு இணைந்த இவாட் (IFAD Down System) திட்டத்தின் மூலம் 29 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கீழ்வாய்க்கால்கள் திருத்தப்பட்டு வருகின்றன. இக்கீழ்வாய்க்கால்கள் அனைத்தும் திருத்தப்பட்டால் நீர் வசதிகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் கூடுதலான நிலத்தில் விவசாயம் செய்யக் கூடியதாக இருக் கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் இரணைமடுக் குளக்கட்டு 100 வருடத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. மேலும் கலிங்குப் புனரமைப்பும் (Head System) செய்யப்படும். அத்தோடு 185 மீற்றர் நீளமான புதிய பாலம் அமைக்கப்படும். அது திருவையாறு, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கக் கூடியதாக இருக்கும். மற்றும் திருவையாறு ஏற்று நிர்ப்பாசனத் திட்டம் உருவாக்கப்படும்.
இரணைமடுத் திட்டம் யாழ்ப்பாணத்துக்கு நீர் வழங்கும் திட்டம் மாத்திரம் அல்ல. இதனால் யாழ்.மக்களுக்கு குடிநீருக்காக 10 சதவீதம் மாத்திரமே எடுக்கப்படுகிறது. ஆனால் இது இரணைமடுக்குளத்தை மீளக் கட்டியெழுப்பும் பாரியதொரு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: ஆரம்பகாலத்தில் வட பகுதியில் இத்திட்டத்திற்கு ஆதரவு இருந்தபோதும் தற்போது முட்டுக் கட்டைகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணங்கள் யாவை?
பதில்: இத்திட்டத்துக்கான முதற்பேச்சுவார்த்தை 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்.மக்களுக்கு குடி
நீர் தேவையிருப்பதால் இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட ௨௦௦௬ ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் நிதி உதவி கோரப்பட்டது. இதற்கு சம்மதித்த ஆசிய அபிவிருத்தி வங்கியானது சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து அவர்களின் முழுச் சம்மதத்தோடு தான் இத் திட்டத்திற்கு உதவி வழங்க முன் வந்தது. இதற்கிணங்க 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரும், அப்போதைய விவசாய நீர்ப்பாசன அமைச்சும், கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ஆகியோருடன் இத்திட்டத்திற்குரிய உடன்படிக்கை செய்யப்பட்டது. இதற்கு முன்னர் ஏறக்குறைய 60 க்கு மேற்பட்ட கூட்டங்கள் இவ்விவசாயிகளுக்கு நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
கேள்வி: ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் இத்திட்டத்திற்காக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது? மற்றும் இத்திட்டம் பற்றி விரிவாகக் கூறமுடியுமா?
பதில்: ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த உடன்படிக்கையை நம்பிக்கையின் அடிப்படையிலேயே செய்தது. எனவே அந்த நம்பிக்கை பேணப்பட வேண்டும்.
இத்திட்டம் மூன்று பிரிவுகளாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1. கட்டுமான வேலை
2. யாழ்.நீர் வள முகாமைத்துவம்
3. வலுவூட்டல்
இதில் கட்டுமான வேலைகளுக்கே பாரிய அளவில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது மேலும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1. இரணைமடு குளக் கட்டுமான வேலைகள் மற்றும் மேற்கூறப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்தல்.
2. இரணைமடு குளத்திலிருந்து பழை வரை தண்ணீர் கொண்டு செல்ல குழாய் பொருத்துதல் .
பழையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல். பின்னர் பழையிலிருந்து யாழ். நிலப்பகுதி மற்றும் பூநகரி பகுதிக்கு நீர் கொண்டு செல்லுதல். மேலும் அப்பகுதிகளில் நீர்த் தாங்கிகள் அமைத்தல்
3. யாழ். மநாநகர சபையில் ஏறக்குறைய 20 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்து கழிவகற்றும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருதல்.
இவற்றுக்கான மொத்த செலவு 164.04 மில்லியன் டொலராகும். அதாவது 21325 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும்.
இரணைமடு குளக் கீழ்வாய்க்கால் திட்டத்தின் (இவாட்) கீழ் 29.32 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது. அதாவது 3800 மில்லியன் ரூபாவாகும். எனவே மொத்த செலவு அண்ணளவாக 25 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும்.
வட மாகாணத்துக்கு 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவு 17 ஆயிரம் மில்லியன் ரூபாவாகும். இதில் 1500 மில்லியன் ரூபா இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணமாகும். எனவே இது கணிசமான தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்வி: இத்திட்டத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதிப்புக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறதோ?
பதில்: அவர்களுக்கு பாதிப்பு என்று எதுவும் இல்லை. சொல்லப்போனால் நன்மைகள் தான் அதிகம். கிளிநொச்சி விவசாயிகள் இத்திட்டம் குறித்து கேட்ட கோரிக்கை வரட்சிக் காலத்தில் தங்களது நிலைப்பாடு என்ன? என்பதுதான். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் தங்களுக்கு நஷ்டஈடு தரக் கோருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. எனவே நாங்கள் இதற்கான மாற்றுவழியைச் செய்ய இருக்கிறோம்.
முதலாவது 10 ஆயிரம் அடியை விட நீர் மட்டம் குறைவாக இருக்கையில் யாழ். குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகிக்கப்படமாட்டாது.
அல்லது 24 மணிநேர நீர் விநியோகம் தேவைக்கேற்றாற் போல் குறைக்கப்படும். விவசாயிகளின் சிறுபோகம் பாதிக்கப்படுமாக இருந்தால் அதற்கான சிறுபோக நிவாரண பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தி நஷ்டஈடு வழங்க நீர்வழங்கல் வடிகால் அமைப்பின் பொறுப்பதிகாரி சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இரணைமடுக் குளத்துக்கு அணித்தாக உள்ள வன்னேரி குளம், குடமுறட்டி ஆறு போன்ற பகுதிகளில் நீர்த் தேக்கங்கள் அமைக்கப்பட்டு வரட்சி நிலவும் அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு ஆதரவு வழங்கப்படும்.
மக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதேபோல் யாழ். விவசாயிகளுக்கு தண்ணீரை அளவாகப் பாவிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.
கேள்வி: யாழ்ப்பாணத்துக்கு ஏன் நீர் தேவை இருக்கிறது?
பதில்: ஆம், நிச்சயமாக நீர்த் தேவையிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் புவியி யல் அமைப்பு இலங்கையிலேயே தனித்துவமானது. யாழில் ஆறுகள் இல்லை. பாரிய குளங்கள் இல்லை. தரைக்கீழ் நீரை நம்பியே மக்களின் விவசாயமும் குடிநீர்த் தேவைகளும் இருக்கின்றன. யாழ். குடாநாடு மயோசின் பாறை உடன் கூடிய சுண்ணப் பாறைகளினால் அமைந்திருப்பதால் தரைக்கீழ் நீரோட்டங்கள் மாசடையும் சாத்தியம் இருக்கிறது.
கடந்த காலங்களில் தரை கீழ் நீரை சுத்தமாக வைத்திருந்த மக்கள் தற்போது நிலக்கீழ் நீரை நீர்ப்பம்பி மூலம் எடுப்பதாலும் யூரியா போன்ற பசளைகளின் அதிகபட்ச பாவனையாலும் நிலக்கீழ் நீரை மாசுபடுத்திவிட்டனர்.
ஆய்வின் படி யாழ். நிலக்கீழ் நீரில் ஒரு லீட்டருக்கு 149 மில்லிகிராம் நைட்ரேட் உள்ளது. உலக சுகாதார ஸ்தாபன நியமத்தின் படி ஒரு லீட்டருக்கு 45 மில்லிகிராம் நைட்ரேட்டே இருக்க வேண்டும். இது ஒரு இரசாயன ரீதியான பாதிப்கை நீருக்கு வழங்குகின்றது.
அது மாத்திரமன்றி யாழ்.மாநகரசபை மலசல கூடங்கள் நெருக்கமாக உள்ளன. இது சுகாதார முறைபடி அமைக்கப்படாத மலசல கூடங்களாக இருப்பதால் பக்டீரியா தொற்று நிலக்கீழ் நீரிலே நிறைந்து காணப்படுகின்றது. அதாவது உலக சுகாதார ஸ்தாபன நியமத்தைவிட பெருமளவு கிருமித்தொற்று இந்நீரில் உள்ளது.
ஒரு கட்டத்தில் யாழ்.கச்சேரியில் நடந்த கூட்டத்தில் பிரதேச சுகாதார அதிகாரி குறிப்பிடுகையில், இலங்கையில் வரும் நெருப்புக்காய்ச்சலில் 30 சதவீதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்படுவதாக கூறியிருந்தார்.
இது குறித்து சுருங்கக் கூறினால் யாழ்.மக்கள் மிகவும் அசுத்தமடைந்த நீரையே குடித்து வருகிறார்கள். விடயம் அறிந்தவர்கள் போத்தல் தண்ணீரை அருந்துகிறார்கள்.
மேலும் இத்திட்டம் குறித்து கிளிநொச்சி விவசாயிகளின் கோரிக்கைகளில் இந்த நீர் குடிநீருக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். நீர் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கக் கூடாது எனவும் கேட்டிருந்தனர்.
கேள்வி: ஏன் மாசடைந்த இந் நீர் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில் லையா?
பதில்: இல்லை என்றுதான் கூற வேண்டும். உண்மையில் சாதாரண மக்களிடம் இதற்கான விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் அறிந்தால் இந்நீரை அவர்கள் குடிக்கவே மாட்டார்கள் என்பதே உண்மையான நிலைப்பாடு.
கேள்வி: இத்திட்டத்தில் நீர் மற்றும் விவசாயம் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் ஏதாவது தொழில்வாய்ப்பு தொடர்பான நன்மைககள் இருக்கிறதா?
பதில்: நிச்சயமாக இருக்கிறது. 25 மில்லியன் ரூபா செலவில் அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்ட காலத்திலேயே திட்டம் பெருமளவு வேலைவாய்ப்புக்கள் அப்பிரதேச மக்களுக்குக் கிடைக்கும். இதன் முதற் கட்டமாக தம்புள்ளையில் இருக்கும் சந்தைத் தொகுதி போன்ற ஒரு சந்தைத் தொகுதி கிளிநொச்சியில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நெல் அல்லாத ஏனைய உணவுப் பொருட்களுக்குரிய சந்தை வாய்ப்பு அதிகரிக்கும் போது மக்கள் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளை பெருமளவு செய்ய ஆரம்பிப்பார்கள்.
இந்த அணைக்கட்டு 36 அடிக்கு உயர்த்தப்படுவதன் மூலமாக விவசாய செய்கையின் அளவு தற்போதைய அளவைவிட அதிகரிக்கும். எனவே மக் கள் பெருமளவு வருமானத்தைப் பெற் றுக் கொள்வார்கள். அது மாத்திரமல்லாது மக்களுக்கு குறிப்பாக கிளிநொச்சி விவசாயிகளுக்கு தொழில் துறைகளை ஆரம்பிப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் அப்பிரதேச மக்களுக்கு பாரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அத்தோடு சுத்தமான குடிநீரை வழங்குவதன் மூலம் யாழ். மற்றும் கிளிநொச்சி மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வார்கள்.
கேள்வி: தற்சமயம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாது போனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?
பதில்: ஒரு திட்டம் கருப் பெற்று உருவாகி செயல் முறைப்படுத்துவற்கு நீண்ட காலம் தேவைப்படும். உதாரணமாக இத்திட்டம் 2002 இல் கருப் பெற்றது. இப்போது பத்து வருடங்களுக்கு மேலாகிவிடடது. திட்டம் முன்மொழிவு தயாரித்தல், தேசிய திட்டமிடுதல், திணைக்களத்தாரின் அங்கீகாரம் பெறுதல், வெளிநாட்டு வள திணைக்களத்தின் (ERD) மூலமாக அந்நிய நிதி உதவிகளைப் பெறுதல், திட்ட ஆய்வு நடத்துதல், உதவி நிறுவன அங்கீகாரம் பெறுதல், ஒப்பந்தம் தயாரித்தல், திட்ட அமுலாக்கம் செய்தல் என்று நீண்ட செயல்முறை ஊடாகவே பெரிய திட்டங்கள் அமைக்கப்படும். எனவே இம்முயற்சிகள் வீணாவது உண்மையில் சிறந்த ஒன்றல்ல.
அதுமாத்திரமன்றி இரணைமடுக் குளமானது மாகாண சபை நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது. சாதாரணமாக வெளிநாட்டு வளங்களை மத்திய அரசாங்கத்தினூடாகத்தான் மாகாண சபைகளுக்குப் பெற முடியும். ஆகையால் இத்திட்டம் வட மாகாணத்துக்கு மிகப் பெரும் வரப்பிரசாதமான ஒன்று என்று தான் கூற வேண்டும்.
பிற்காலத்தில் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புக்கான நிதி தேவைக்கோ அல்லது இன்னொரு யாழ்ப்பாண குடிநீர் திட்டத்துக்கோ அல்லது யாழ்ப்பாண மலகூட கழிவகற்றும் ஏற்பாட்டுக்கோ புதிய திட்டம் ஒன்று அமைப்பதானால் மிக நீண்ட காலம் எடுக்கும். இக்காலப்பகுதிக்குள் இரணைமடுக் குளத்தின் மற்றும் அணைக்கட்டுகளின் நிலை மேலும் மோசமடைந்துவிடும்.
இரண்டாவது பெரிய பாதிப்பு என்ன வெனில் தற்போது இவாட் (IFAD) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக் கீழ் வாய்க்கால் திருத்தங்களானது இர ணைமடுத் திட்டத்துடன் தொடர்புடை யதாகும்.
எனவே, இரணைமடுக் குளத் திட் டம் அமுல்படுத்தப்படாது போனால் இவாட் (IFAD) திட்டமும் கேள்விக்குறி யாகிவிடும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
மூன்றாவது பாதிப்பு, மாகாண சபை யானது இதை நிறுத்திவிட்டு இனிமேல் வேறு உதவிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற முடியாது. அத் தோடு மாகாண சபையானது 2011 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இவ்விர ணைமடு திட்டத்தை உரிய காலத் தில் அமுல்படுத்தி முடிப்பதாக உடன் படிக்கை செய்துள்ளது. எனவே இத் திட்டத்தை மாகாண சபை அமுல்படுத் தாது போனால் இது நிதி வழங்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை இழக்க வேண்டி ஏற்படும்.
கேள்வி: இத்திட்டத்துக்கான ஆசிய அபிவி ருத்தி வங்கி ஆலோசகர் என்ற வகையில் உங்களது ஆலோசனை என்ன?
பதில்: வட மாகாண சபை மீதான நம்பகத்தன்மை மிக முக்கியமானது. அதேநேரம் கொடையாளி நிறுவனங்கள் உதவுவதற்கு ஆதரவாக இருக்கும் இவ் வேளையில் ஆரம்பத்திலேயே முட் டுக் கட்டைகள் போட்டு நம்பகத்த தன்மையை இழந்துவிடுவது மிகவும் ஆபத்தானது.
அதேவேளை, மக்களினதும் விவசா யிகளினதும் தேவைகள் அநேகம் இருக் கின்றன. ஆனால், இவற்றை உடன டியாக நிறைவேற்ற முடியாது. எனவே படிப்படியாகத்தான் தீர்க்க வேண்டும்.
அவற்றிற்குரிய திட்டங்கள் முத லில் தாயாரிக்கப்பட வேண்டும். இதே வேளையில் இப்பெரும் திட்டத்தை தாமதமாக்காது விரைவில் நடை முறைப்படுத்தி அந்நிதி நிறுவனங்களின் நம்பகத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு மேலும் புதிய திட்டங்களை அமுல்படுத்த வழிசமைப்பதே அறிவு சார் நடவடிக்கையாகும்.
No comments
Post a Comment