கோமாரி பிரதேசக் களப்புப் பகுதியில் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் திடீரென இறந்து வருவதால், இந்தக் கள ப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நன்னீர் மீனவ ர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கோமாரிக் களப்பில் சுமார் 200 மீனவர்கள் நன்நீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக, இந்தக் களப்பிலுள்ள மீன்கள் உட்பட தவளை, பாம்பு போன்ற உயிரினங்கள் திடீரென இறந்து வருகின்றன.
இதன் காரணமாக, கோமாரிக் களப்பின் கரை முழுவதும் இறந்த மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் கரையொதுங்கிக் காணப்படுகின்றன.
மேலும், விலாங்கு போன்ற பெரிய மீன்வகைகளும் இறந்து காணப்படுகின்றன.
இதனால், இறந்த மீன்களை உண்பதற்காக கோமாரிக் களப்பினை நோக்கி பல்லாயிரக் கணக்கான பறவையினங்கள் படையெடுத்து வருவதையும் காணக்கிடைக்கின்றது.
இந்த நிலைமை காரணமாக, கோமாரி பிரதேசத்திலுள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகப் பாதிக்க ப்பட்டுள்ளன.
இந்தக் களப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் ஒருவர் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா முதல் 1500 ரூபா வரை உழைத்து வருவதாக இங்குள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.
கோமாரிப் பிரதேசத்தில் அதிகளவானவர்கள் மீன்பிடியை தமது ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டவர்களாவர்.
இவ்வாறு மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறந்து வருவதற்கு என்ன காரணம் என்று இன்னும் அறியப்படவில்லை.
கோமாரிக் களப்பில் இவ்வாறு நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவாக இறந்து வருவது இதுவே முதல் தடவை என்றும், தனது வாழ்நாளில் இந்தக் களப்பில் இவ்வாறு உயிரினங்கள் இறப்பதை இதற்கு முன்னர் தான் கண்டிருக்கவில்லை எனவும், மூத்த மீனவத் தொழிலாளியொருவர் தெரிவித்தார்.
கோமாரி களப்பில் உயிரினங்கள் இறந்து வருகின்றமை குறித்து, பொத்துவில் பிரதேசத்துக்கான கடற்றொழில் பரிசோதகர் எம்.ரி.எம். ஜௌபர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு உயிரினங்கள் இறப்பதற்கு நீரில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் காரணமாக இருக்கலாம் என நம்புகிறோம்.
எனவே, உடனடியாக முகத்துவாரத்தினை வெட்டி களப்பிலுள்ள நீரினை கடலுக்குள் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.
No comments
Post a Comment