ஜனாதிபதி குற்றவாளி இல்லையெனில் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொண்டிருப்பார். சித்திரவதைகளுடன் கூடிய கொடிய யுத்தத்தினையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டார் என எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அன்று பிரபாகரனும் சரி இன்று விக்கினேஸ்வரனும் சரி தமது உரிமைகளுக்காகவே போராடுகின்றனர். இன்று அரசாங்கத்தின் அடக்கு முறையில் சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் உட்பட்டு விட்டனர் எனவும் அவ் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
தேசிய ஊழியர் சங்கத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் இயக்கத்தினர் மேற்போன்று தெரிவித்தனர்.
இதில் கலந்துகொண்ட நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதனை அரசாங்கத்தின் செயற்பாடுகளே காட்டிக் கொடுக்கின்றது. அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றால் ஜனாதிபதி சர்வதேச விசாரணைகளுக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.
வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் பொதுமக்கள் மீது காட்டு மிராண்டித்தனமான சித்திரவதைகள் மற்றும் இனப் படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதே உண்மை. பேசித் தீர்த்திருக்க வேண்டிய விடயத்தினை ஜனாதிபதி யுத்தத்தின் மூலம் முடித்து வீரப்பட்டம் பெற்றுள்ளார்.
உண்மையிலேயே இவ் யுத்தத்தில் இலங்கை இராணுவத்தை விடவும் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினரின் உதவியோடே இந்த யுத்தம் முறியடிக்கப்பட்டது. இரசாயன ஆயுதங்களும் தொழில் நுட்ப கருவிகளையும் கொண்டு நேர்மையற்ற முறையிலான யுத்தத்தினையே இலங்கை இராணுவம் செய்து முடித்தது. இவற்றிற்கு ஜனாதிபதி வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும்.
மேலும் இன்று வடக்கில் இராணுவ அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகியும் இன்று ஆளுநரின் அதிகாரங்களும் இராணுவ அடக்கு முறைகளுமே காணப்படுகின்றன.
பிரபாகரன் அன்று வடக்கு மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அவர்களை விடுதலை அடையச் செய்யவே முயற்சித்தார். அதே சேவையினையே இன்று விக்கினேஸ்வரனும் செய்து வருகின்றார். இவற்றினை மறைக்க முடியாது. இலங்கையில் இடம்பெறும் அனைத்தையும் சர்வதேச நாடுகள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவிக்கையில்,
இலங்கையின் இலவசக் கல்வி இன்று பணத்துக்காக விற்கப்பட்டு விட்டது. பொருளாதாரம், சுகாதாரம், விளையாட்டு என அனைத்திலும் பணம் கொள்ளையடிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இன்று மாணவர்களின் இலவசக் கல்வியிலும் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டது. இன்று அரச பாடசாலைகளை மூடிவிட்டு தனியார் பாடசாலைகளும் தனியார் பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பணக்காரர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மட்டுமே கல்வி என்ற நிலைமை இன்று உருவாகி விட்டது.
2015 ஆம் ஆண்டில் தரம் ஐந்து மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சையினையும் இல்லாதாக்கி விடுவார்கள் என்பது உறுதியே. அதேபோல் இன்று தனியார் பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவர் 60 லட்சம் செலவழித்தே படிக்க வேண்டியுள்ளது.
கல்விப் பிரச்சினையே வடக்கில் யுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதே நிலைமை இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் இடம் பெற முன்னர் இந்த ஆட்சியினை மாற்றி மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments
Post a Comment