வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், வரப்புக்களை மறைத்து இருக்கும். ‘தை’யில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும். அதுமாத்திரமன்றி அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயியின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும். இதைத்தான் பெரியவர்கள் கூறுவார்கள் ‘ தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று. வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல்,மேய்ச்சல் நிலம் அல்லது தரிசுநிலத்தில் கால்நடைகளை மேய்த்தல் ஆகியவையே விவசாயத்தின் அடிப்படையாகும்.
ஆனால், இப்போதெல்லாம் தை பிறந்தால் வழி பிறப்பதே இல்லை…. ஏனென்று கேக்கிறீங்களா? இயற்கை அன்னை எமக்கு வழங்கிய கொடைகள் பல… அதில் காடும் காடு சார்ந்த பிரதேசமும் மிக மிக முக்கியமானது. மனிதர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றமானது அவனது தேவைகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த அதிகரித்த தேவையே காடுகளை வெட்டி குடியிருப்புகள் அமைக்கவும் களனிகளாக்கவும் வழிசெய்கின்றது. நாங்களே எங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போலவே இந்த காடழிப்புச் செயற்பாடுகளுமாகும். இச் செயற்பாட்டினால் இயற்கையில் ஏற்படும் மாற்றமே உரிய நேரத்தில் மழைகிடைக்காமல் போவதற்கும் வழிசமைக்கின்றது. சரியான தருணத்தில் கிடைக்காத மழை, விவசாயிகளின் வாழ்க்கைலும் மாற்றத்தை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் நாட்டில் பெரும் உணவுத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும் என்பதை யாருமே மறுக்க முடியாது?
கிழக்கு மாகாணத்தை அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்துக்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என பல்லின கலப்பு மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். இந்த இடத்தில் பெரும்பான்மை இனத்தைப் பற்றிக் கதைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை இனத்தவர் சொற்பமே… ஆனால் இந்துக்களினதும் முஸ்லிம்களின் உறவு என்பது தொப்புள்கொடி உறவைப் போன்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஒருவரில் ஒருவர் தங்கியே வாழவேண்டிய நிலை… தமிழர்கள் மேசன், தச்சு போன்ற தொழில்களுக்காக அங்கு செல்வதும் முஸ்லிம்கள் வியாபாரம், விவசாயம் போன்றவற்றுக்காக இங்கு வருவதும் சாதாரண நிகழ்வு… கடந்த காலங்களில் இந்த உறவில் அவ்வப்போது விரிசல்கள் பல விழுந்திருந்தாலும் அவை தொடர்கதையாக முடியாது. ஏனெனில் இரு இனங்களுக்கிடையிலான பின்னிப் பிணைந்துள்ள வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாகும். மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் இன்றும் நன்றியுடன் நினைவுகூரத்தக்கது. அதே போன்று மறைந்த தலைவர் தந்தை செல்வா அவர்களை நாங்கள் ஏன் இவரைப் போய் தந்தை என விழிக்க வேண்டும் என எந்தவொரு முஸ்லிமும் பிரித்துப்பார்த்து கதைப்பதில்லை. ஆனால் ஒரு சில சுயநல அரசியல் வாதிகளின் தவறான வழிநடத்தலில் சிக்கித தவிக்கும் விவசாயிகளும் (இந்து/முஸ்லிம்), கால்நடையாளர்களுக்கும் (இந்து/முஸ்லிம்) இடையில் நடந்துவரும் ஒரு பனிப்போரே அண்மையில் வட்டை மடு பிரதேசத்தில் நடந்தேறியது….
வட்டை மடு என்பதன்
அர்த்தம் என்ன
வட்டை என்பது வேளாண்மை காணிகளை குறிக்கப் பயன்படும் ஒரு பிரதேச வழக்காகும். மடு என்பது சாதாரண நிலத்திலிருந்து சற்று விலகி பள்ளமாகக் காணப்படுவதைக் குறிப்பது. ஆகவே வட்டை மடு என்பது வயல்காணிகளை உள்ளடக்கிய பிரதேசமாகவே ஆரம்பத்தில் காணப்பட்டுள்ளது என்பது பிரதேச வழக்கின் மூலம் எமக்கு அறியக் கிடைக்கின்ற உண்மையாகும். இதுவே திரிபடைந்து நாளடைவில் வட்டமாடுவாகிவிட்டது....
இப்ப விசயத்துக்கு வருவோம்…
திருக்கோவில், வட்டமடு பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை பிரதேசத்தில் அத்துமீறி விவசாயத்தை மேற்கொண்டது மாத்திரமல்லாமல் சட்டவிரோதமாக காடுகளை அழித்து நிலத்தை விஸ்தரித்து நெற்செய்கை மேற்கொள்கின்றார்கள் என விவசாயிகளின் மீது குற்றம் சுமத்தும் கால்நடையாளர்கள் விவசாயிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே கடந்தவாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர். அம்பாறையில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக 1976 ஆம் ஆண்டு திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வட்டமடு பிரதேசம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைக்காக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரிசுரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய போர்ச்சூழலால் பொதுமக்கள் வட்டமடு பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலை காப்பட்டதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய சிலர் சட்டத்துக்கு விரோதமாக மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்தது மாத்திரமல்லாமல் காணி உரிமைப் பத்திரங்களையும் தங்களுடைய பெயர்களில் பதிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிக காணி உரிமை
பத்திரம் பெறல்
அம்பாறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக 1976 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வட்டமடு பிரதேசத்தில் 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மேய்ச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் கால்நடையாளர்கள் அங்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்படவே இதனை பயன்படுத்தி காணிச் சட்டத்திற்கு முரணாக போலி தற்காலிக காணிப்பத்திரத்தை பெற்று கடந்த பல வருடங்களாக விவசாயிகள் அத்துமீறி வேளாண்மை செய்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்ட சமாதான சூழலின் பின்னர் கால்நடையாளர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு சென்றபோது அங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடமுடியாத சூழலே காணப்பட்டது. ஏனெனில் விவசாயிகள் அக்காணிகளில் வேளாண்மை செய்து வந்ததே அதற்கு காரணமாகும்.
இதனையடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், மேய்ச்சல் தரையாளர்களின் .செல்வாக்கற்ற தன்மை விவசாயிகள் அரசியல் செல்வாக்கிற்கு முன்னால் தடுமாறியது. இதன் பின்னரே மேய்ச்சல் தரையாளர்கள் இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் அமைச்சர்களான அதாவுல்லா, ரவூப்ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் , உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இங்கு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ‘’இது ஒரு கலந்துரையாடல் மாத்திரமே தவிர தீர்வுகள் எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.” தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வட்டமடு மேய்ச்சல் தரை தொடர்பாக இரு சமூகம் சார்ந்த குழு அமைக்கப்படும். அந்த குழுவானது கள நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் அம்பாறை கச்சேரியில் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் அறிக்கையிடலின் பின்னரே மேய்ச்சல் தரை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் வட்டைமடு மேய்ச்சல் தரை பிரதேசத்தில் உள் 4 கண்டங்கள் உள்¬ளிட்ட 1380 ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்வதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அனுமதிவழங்குமாறு வனபரிபாலன சபையின் தலைவருக்கு பணிக்கப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டது.
இவ் அனுமதியானது ஒருதலைப்பட்சமானது என கண்டித்து ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் இதனை மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் இல்லாவிடில் 40 ஆயிரம் கால்நடைகளை அரசுபொறுப்பேற்று கால்நடையாளர்களுக்கு நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தே சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை சங்க
ஆலோசகரின் கருத்து
வட்டமடு மேய்ச்சல் தரை தொடர்பில் திருக்கோவில் பிரதேச கால்நடை சங்க ஆலோசகரும் ஆலையடி வேம்பு பிரதேசசபை உறுப்பினருமான தங்கராசா பூபாலபிள்ளையிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
கிழக்குமாகாணத்தில் 1 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகின்றபோதும் மேய்ச்சல் தரைக்கென வெறும் 4741 ஏக்கர் காணி மட்டுமே வட்டமடு பிரதேசத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்காணியானது 1972 – 1975 ஆம் ஆண்டு காணிச் சட்டத்தின் கீழ் அளக்கப்பட்டு வரைபடமாக்கப்பட்டதன் (வரைபட இல. 205AM) பின்னர் 1976.09.17 ஆம் திகதிய 231ஆம் இலக்க வர்த்தமானியில் மேய்ச்சல் தரையாக பிரசுரிக்கப்பட்டது. இவ்வாறு வர்த்தமானிப் பிரசுரம் இடம்பெறுவதற்கும் விவசாயிகளின் அத்துமீறிய செயற்பாடே காரணம் என்கின்றார் இவர். ஏனெனில் இதற்கு முன்னரும் விவசாயிகள் அத்துமீறி நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டமையினாலேயே 1974.08.27ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த டி. ஜயசிங்க மேய்ச்சல் தரைக்கென வழங்கப்பட்ட காணிகளில் அத்துமீறி விவசாயம் மேற்கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு அத்துமீறும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தாக குறிப்பிடுகின்றார்.
இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் அதாவது 1983இற்குப் பின்னர் நாட்டில் காணப்பட்ட போரின் அசாதாரண சூழலினால் அப்பகுதிக்கு பொதுமக்கள் சென்றுவருவதில் இருந்த சிக்கல்கள் காரணமாக அங்கு செல்வதை நிறுத்தியிருந்தோம். இந்தக் காலகட்டத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய விவசாயிகள் காணிச் சட்டத்திற்கு முரணான வகையில் காணி அனுமதிப் பத்திரம் பெற்றது மட்டுமல்லாமல் காடுகளை வெட்டி காணியின் விஸ்தீரணத்தையும் அதிகப்படுத்தியிருப்பதாகவும் கூறுகின்றார்.
இதற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சாதாரண சூழ்நிலையால் குறித்த பிரதேசத்திற்கு சென்றுவரும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அப்போது கால்நடைகளுடன் அங்கு சென்ற நாம் அதிர்ச்சியடைந்தோம் என்றே கூறலாம். ஏனெனில் மேய்ச்சல் தரை அனைத்தும் விவசாயக் காணிகளாக்கப்பட்டு கால்நடை வளர்ப்பிற்கு சாதகமற்ற தன்மை காணப்பட்டதே இதற்குக் காரணமாகும். இது தொடர்பில் அப்போது திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த தவராசாவின் கவனத்திற்கு கொண்டுவந்ததைத் தொடர்ந்து அவர் கால்நடை மற்றும் விவசாய சங்க உறுப்பினர்களின் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
2004.10.18ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அப்போதைய அரசாங்க அதிபர் தலைமை வகித்ததுடன் கிழக்குமாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் பிரதேச செயலாளர்கள் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர். இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் போதே விவசாயிகளால் காண்பிக்கப்பட்ட காணி உரிமப் பத்திரங்கள் போலியானவை எனவும் அவை 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து 300 ஏக்கர் காணிகளை விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கென தற்காலிகமாக வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் விவசாயிகளை அங்கிருந்து முற்றாக வெளியேறுமாறு 2005.03.05ஆம் திகதி மீண்டும் அரசாங்க அதிபரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து சிறிது காலம் (4 போகம்) நெற்செய்கையை இடைநிறுத்தியிருந்த விவசாயிகள் மீண்டும் அத்துமீற முற்படுகையிலேயே கால்நடை சங்கமாகிய நாங்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசாவின் உதவியுடன் கடந்த 2008ஆம் ஆண்டு அப்போது கால்நடை அமைச்சராக இருந்த ஆர்.எம்.சி. ரத்நாயக்கவிடம் முறையிட்டோம். எமது முறைப்பாட்டை கருத்தில் கொண்ட அமைச்சர் விவசாயிகளை தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தார்.
வனப்பாதுகாப்பு திணைக்களம்
பொறுப்பேற்பு
இதன் பின்னர் கடந்த 2010ஆண்டு இப் பிரதேசம் வனப்பாதுகாப்பு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டது. கால்நடையாளர்களாகிய எங்களின் ஏற்ற இறக்கங்களையும், கால்நடை பராமரிப்பின் கஷ்டங்களையும் கருத்தில் கொண்ட வனவளப் பாதுகாப்பு திணைக்களம் தொடர்ந்தும் விவசாயத்திற்கு காணிகளை நிராகரித்தே வந்தது. இருந்தும் சொற்ப காலத்தில் விவசாயிகளின் அதிகரி்த்த செல்வாக்கினால் மீண்டும் பயிர்செய்கை ஆரம்பமாகியது. எப்படியாவது இதனை நிறுத்திவிட வேண்டுமென்ற உறுதிப்பாட்டுடன் இருந்த கால்டை சங்கமானது எங்கள் பகுதி மதகுருமர்களுடனான சந்திப்பொன்றை (2013.09.23) மேற்கொண்டது. இதன் பின்னர் இதனை யாரிடம் போய் தெரிவித்து இதற்கான நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வது என்பது புரியாமல் தவித்த எங்களுக்கு இப்பிரச்சினை தொடர்பில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைக்கக் கிடைத்த ஒரே ஆயுதம் ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ இருப்பது என்பதாகும்.
இந்த உண்ணாவிரதம் கடந்த வாரம் வட்டமடுவில் மேய்ச்சல்தரையாளர் சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ( நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கோளாவில், பனங்காடு, கண்ணகிபுரம்) ஆகிய ஊர்களைச் சேர்ந்த 54 உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து 3 தினங்கள் கடந்த நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கட்டத்தை எட்டியது. இதனை கருத்திற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராசா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இந்த காலபோகத்திற்கான அனுமதியை ரத்துச் செய்வதாக தெரிவித்தே எங்களது சாகும்வரை .உண்விரதப் போராட்டத்தையும் கைவிடுமாறு வலியுறுத்தினார். அவரின் இந்த வேண்டுகோளின் பேரிலேயே எங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமானது கைவிடப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு நெற்பயிர்செய்கைக்கான அனுமதியானது மீண்டும் வழங்கப்படும் பட்சத்தில் எங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் மீண்டும் தொடரும் எனவும் ஆணித்தரமாகக் கூறுகின்றார்.
விவசாயிகளின் கருத்து
வட்டமடு விவசாயம் தொடர்பில் விவசாயிகளின் சார்பில் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஜுனைதீனிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறுகின்றார். அதாவது வட்டமடுவில் 1962ஆம் ஆண்டிலிருந்தே நாங்கள் நெற்செய்கையை மேற்கொண்டு வருகின்றோம். 1970ஆம் ஆண்டு இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அது தவிர பயங்கரவாத காலத்தில் (PLR) இல் எங்களது வயல்காணிகளை பதிவு செய்துள்ளோம். இதன் பின்னர் 1985, காலப்பகுதியில் (Annaul) உரிமைப் பத்திரத்துக்கு விண்ணப்பித்து அதனை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்து வந்த பின்னர் 1990ஆம் ஆண்டுகளில் காணி அபிவிருத்தி திணைக்களத்தினால் (LDO)காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிரந்தர காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ளோம். இந்தக் காணிகள் தொடர்பில் இது எங்களுக்கே உரித்துடையது என்பதற்கான ஆதாரமாக இனி காணி உறுதி ஒன்றை மாத்திரமே பெற வேண்டிய நிலையிலேயே தற்போது எமது வாழ்வாதாரத் தொழிலை தொடர முடியாத நிலையில் உள்ளோம். இந்த வருடம் அக்கரைப்பற்று கமநல சேவைகள் திணைக்கம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட வேண்டிய காலபோக நெற்செய்கைக்கான அனுமதி இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் சலித்துக்கொண்டார்.
விவசாயிகள் மற்றும் கால்நடையாளர்களின் மேற்போந்த அறிக்கைகளின் பின்னர் அம்பாறை வனப்பாரிபால திணைக்கள உயர் அதிகாரி முனசிங்வை தொடர்புகொண்ட போதும் அவருடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் தற்போது விடுக்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கால்நடை, பயிர்கள்
ஒருங்கிணைந்தமுறை
எனவே இதுபோன்ற நிலத்தட்டுபாடு மற்றும் வேளாண்மை செய்கையில் முன்னேற்றம் என்பவற்றை வளப்படுத்துவதற்காக அபிவிருத்தி அடைந்து வரும் பல நாடுகள் கடைப்பிடித்துவரும் ஒருங்கிணைந்த வேளாண்மைச் செய்கையானது மிகவும் பிரயோசனமாதொன்றாக அமையும் என்பதினாலேயே எமது அரசாங்கமும் தற்போது இதனைக் கடைப்பிடிக்கும் படி விவசாயிகள் மற்றும் மேய்ச்சல்தயைாளர்களிடம் இத்திட்டத்தினை பரிந்துரைத்துள்ளது.
அதாவது பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை, சக்திவலு உற்பத்தி போன்ற அனைத்து செயற்பாடுகளையும் ஒரே நிலத்தில் மேற்கொள்ளும் ஒரு பண்ணை முறையே “ஒருங்கிணைந்த பண்ணை முறை” எனப்படும்.
இங்கு ஒரே நிலத்திலேயே விவசாயப் பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மைக்கு அவசியமான தீவனங்களைச் செய்கைபண்ணல், புற்கள், அவரைப் பயிர்களைச் செய்கைபண்ணல், பண்ணை விலங்குகளை வளர்த்தல் என்பனவற்றை ஒன்றிற்கொன்று தொடர்புகள் ஏற்படக் கூடியவாறு மேற்கொள்ளல் ஆகும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையின் மூலம் விவசாயத்தின் உற்பத்தித்திறனைப் போலவே இலாபத்தையும் அதிகரிக்க முடியும். இது விசேடமாக அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற எமது நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
எனவே ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல் எல்லோரும் நன்மையடையக்கூடிய மேற்போந்த முறைகளை பின்பற்றினால் நாடும் வீடும் வளமாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் இனியாது வேறுபாடுகளை மறந்து நல்ல வியங்களை கடைப்பிடிப்பார்களா.... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments
Post a Comment