யாழ்ப்பாணத்திற்கான இரணைமடு குடிநீர்த்திட்டம் முக்கியமான ஓர் அபிவிருத்தித் திட்டமாக இருந்த போதிலும், அது அரசியலாகிவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் அப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவையும் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆயினும் யுத்தச் சூழல் காரணமாகத் தாமதமடைந்திருந்த இந்தத் திட்டத்தின் செயற்பாடுகள், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் துரிதமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், பல்வேறு தடைகளினால் அது மேலும் தாமதமடைந்துள்ளது. பல்வேறு காhணங்களினால் ஏற்பட்டிருந்த அந்தத் தாமதம் இப்போது, அரசியலாகிவிட்டதாகவே தோன்றுகின்றது.
இரணைமடு என்பது கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியமான பாரிய நீர்த்தேக்கமாகும். இது அந்த மாவட்டத்து விவசாயத்தின் உயிர்நாடியாகும். இந்தக் குளத்திற்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் பிறப்பெடுத்துள்ள கனகராயன் ஆறே தண்ணீரைக் கொண்டு சேர்க்கின்றது. இந்தக் குளத்தின் கீழ் 21 ஆயிரம் ஏக்கர் காணிகளில் காலபோகத்திலும், சாதாரணமாக சிறுபோகத்தில் எண்ணாயிரம் ஏக்கர் வயற்காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நெற்செய்கையே கிளிநொச்சி மாவட்டத்து விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாகும்;. இங்கு விளைகின்ற நெல்லையே, யாழ்ப்பாண மாவட்டமும் தனது அரிசி உணவுத் தேவைக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது.
இந்தக் குளத்தில் இருந்துதான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீரைப் பெறுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு, குடிநீருக்காகத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு இப்போது, பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது என்று கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமாக் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார்கள்.
'உயிர் போனாலும் அனுமதிக்க மாட்டோம்'
இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கமக்காரர்களுக்கு 22 அமைப்புக்கள் இருக்கின்றன. இவற்றை உள்ளடக்கிய விவசாய சம்மேளனத்தின் தலைவராகிய செ.சிவப்பிரகாசம் தலைமையில் கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இந்த எதிர்ப்பு வலியுறுத்தி தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு முன்னதாக திங்களன்று பௌர்ணமி தினத்தையொட்டி, சாவகச்சேரியில் நடைபெற்ற ஒரு கலாசார விழாவில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகள் மட்டுமல்லாமல் தானும் இதனை விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.
'இரணைமடு நீர் யாழ்ப்பாணத்திற்குக் குடி நீர் என்ற போர்வையில் கொண்டு வரப்படுவதை, கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அல்லது அவர்களோடு இருக்கின்ற யாழ்;ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறப்பினராகிய – சிறிதரன் ஆகிய நான் பகிரங்கமாக விரும்பவில்லை என்பதை இந்த இடத்தில் பிரகடனம் செய்கிறேன். அதற்காக என்னுடைய உயிரோ, பதவியோ எது போனாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றேன்' என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருக்கின்றார்.
இரணைமடு நீர் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டால் கிளிநொச்சி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், அவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இரணைமடு குளத்து நீர் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் விவசாயத் தேவைக்கே போதாமல் இருக்கும்போது, அங்கிருந்து தண்ணீரை நாங்கள் வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்பது விவசாய அமைப்புக்களின் நிலைப்பாடாகும். இதுபற்றி வடமாகாண சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பாக அவர்கள் தங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் சிவப்பிரகாசத்தின் குற்றச்சாட்டாகும்.
''இந்தத் திட்டம் பற்றி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு என்ன சொல்லப்போகின்றோம், இந்தத் திட்டத்தில் நாங்கள் உங்களுக்கு உறுதியாக இருப்போம். இதனை நாங்கள் ஏற்கவில்லை. இதனை உடனடியாக நிறுத்துவோம் என்று மாகாண சபையில் இருந்து எங்களுக்கு இன்றுவரையில் எந்த பதிலும்; வரவில்லை. மாறாக, இரணைமடு குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள். ஆகவே, எங்களுக்கு மாகாண சபையோ அரசியல்வாதிகளோ எவரும் எங்களுக்குத்தேவையில்லை. அவர்களை நாங்கள் நம்பவில்லை. நம்பக் கூடிய வகையில் அவர்கள் நடந்துகொள்ளவில்லை. இறுதியாக, உறுதியாக, தெட்டத்தெளிவாக நாங்கள் எங்களுடைய தீர்மானத்தை முன்;னெடுப்போம். இந்தத் திட்டத்தை எங்களால் நிறுத்த முடியும். அதை நாங்கள் செய்து காட்டுவோம். இதுதான் எங்களுடைய கருத்து, முடிவு' என்று கிளிநொச்சி விவசாய சம்மேளனத் தலைவர் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
உயிரைக் கொடுத்தாவது இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று வேறு சில விவசாய அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்களும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவிலான இந்தத் திட்டத்தில் தங்களுக்கு சம்பளமாகக் கிடைக்கின்ற 3 லட்சம், 4 லட்சம் ரூபா பணத்தை ஈட்டுவதே அதிகாரிகளின் நோக்கமாகும். அதனை இலக்கு வைத்தே அவர்கள் செயற்படுகின்றார்கள். இந்தத் திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உண்மையான நிலைப்பாடுபற்றி அவர்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவில்லை. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களிடமோ, தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனோ அவர்கள் பேச்சுக்கள் நடத்தவில்லை என்பது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் குற்றச்சாட்டாகும்.
ஏன் யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்?
யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து நச்சுத்தன்மையுடையதாக மாறி வருவதனாhல், அந்த நீரை அங்குள்ளவர்கள் குடிநீராகப் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாகத் தெரிவிக்க்பட்டதையடுத்தே, மாற்று ஏற்பாடாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தில் இருந்து குடிநீரைப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இரணைமடு குளத்தின் குளக்கட்டானது, 30 அடிக்கும் மேற்பட்ட உயரத்தைக் கொண்டதாகும். இந்த உயரத்தை இப்போதுள்ள அளவிலும் பார்க்க 2 அடிகள் அதிகமாக உயர்த்துவதன் மூலம், கிளிநொச்சியையும் கடந்து ஓடி கடலில் கலக்கின்ற கனகராயன்குளத்து ஆற்று நீரின் மேலும் ஒரு பகுதியை இந்தக் குளத்தில் சேமிக்க முடியும். அவ்வாறு மேலதிகமாகச் சேமிக்கப்படுகின்ற நீரை யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த்தேவைக்காகக் கொண்டு செல்ல முடியும் என்று இரணைமடு குடிநீர்த்திட்ட அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
இரணைமடு திட்டமானது, இரண்டு அம்சங்களைக் கொண்டது. அந்தக் குளத்தின் அணைக்கட்டைப் பலப்படுத்தி உயர்த்துவது, உடைந்து கிடக்கின்ற அந்தக் குளத்தின் கலிங்கு பகுதியை உறுதியானதாக செப்பனிடுவது. குளத்தில் இருந்து தண்ணீரைத் திறப்பதற்காக மேலும் இரண்டு கதவுகளை அமைப்பதுடன், அனைத்து கதவுகளையும் மின்சாரத்தில் இயங்கத்தக்க வகையில் நவீனப்படுத்துவது, உரிய பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள - குளத்தில் இருந்து வயல்களுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்கின்ற வாய்க்கால்களைத் திருத்தி அமைப்பது, நூறு வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கத்தக்க வகையில் வலுவுள்ளதாகப் புனரமைக்கப்படுகின்ற குளக்கட்டின் மீது பொதுமக்கள் போக்குவரத்து செய்யத்தக்க வீதியொன்றை அமைப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வது என்பது முதலாவது அம்சமாகும்.
கிளிநொச்சி நகரப்பகுதி, பூனகரி பிரதேசம் உள்ளிட்ட குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேசங்களுக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்துவதுடன், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீரைக் கொண்டு செல்வது என்பது இரண்டாவது அம்சமாகும்.
யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்கின்ற தண்ணீரைச் சுத்தப்படுத்தி குடிநீராக்குவதற்கு பளை பகுதியில் நீர்ச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது, யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரில் மலக்கிருமிகளும் கலந்து நீரை மாசடையச் செய்திருப்பதனால், மலக்கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்குரிய குழாய் கழிவகரற்றும் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவது என்பது போன்ற வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் யாழ் குடாநாட்டில் உள்ள நீர் வளங்களை ஆய்வு செய்து அங்கு குடிநீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதும் இரணைமடு குடிநீர்த் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இவ்வாறு பலதரப்பட்ட விடயங்களையும் கொண்டுள்ள இரணைமடு திட்டத்தின் மூலம், கிளிநொச்சி விவசாயிகளும் நன்மையடைவார்கள், யாழ் மாவட்டத்து மக்களின் குடிநீர்ப்பிரச்சினையும் தீர்க்கப்படும் என்பது அதிகாரிகளின் வாதமாகும். ஆனால், இந்த விடயங்களை ஏற்க முடியாது என்று கிளிநொச்சி விவசாயிகள் கூறுகின்றார்கள்.
ஏன் மறுக்கிறார்கள்?
இரணைமடு குளத்தின் கீழ் காலபோகத்தில் 21 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கே நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனைவிட 16 ஆயிரம் ஏக்கர் காணிகள் மானாவாரி தரையாக மழையை நம்பி விவசாயம் செய்யும் பிரதேசமாக இருந்து வருகின்றது. இந்தக் காணிகளுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து தரவேண்டும். இதற்காக இரணைமடு குளத்தை அபிவிருத்தி செய்து அதன் நீர் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என்று நெடுங்காலமாகவே தாங்கள் கோரி வருவதாக விவசாயிகள் கூறுகின்றார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் காலபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற 8 ஆயிரம் ஏக்கரை 16 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஏற்கனவே இரணைமடு குளத்தின் குளக்கட்டானது, பாதிக்கப்பட்டுள்ளது. குளத்தின் அதி உச்ச அளவிற்குத் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கு குளக்கட்டு போதிய பலம் உள்ளதாக இல்லை என்றும் சொல்லப்படுகின்றது. இதனால் 28 அல்லது 29 அடி உயரத்திலேயே தண்ணீர் மட்டம் பேணப்படுகின்றது. ஆகவே, குளத்தின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, குளக்கட்டைப் புனரமைக்க வேண்டிய அவசர தேவையும் எழுந்திருக்கின்றது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற அதேநேரம், நீர்ப்பாசனத்திற்கான காணிகளின் விஸ்தீரணத்தை அதிகரிக்கத்தக்க வகையில் நீரைச் சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
இரணைமடு குளக்கட்டைப் புனரமைக்கின்ற அதே திட்டத்தின் கீழ் குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரித்து, அதில் சேமிக்கக் கூடிய மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த்தேவைக்காகக் கொண்டு செல்ல முடியும் என்பது இரணைமடு திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளின் எதிர்பார்ப்பாகும்.
அதிகாரிகளினதும், விவசாயிகளினதும் இந்த எதிர்பார்ப்புக்கள் நல்ல மழை வீழ்ச்சியுள்ள காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் வரட்சி நிலவினால் அல்லது குளம் நிறையத்தக்க வகையில் மழைவீழ்ச்சி இல்லாத காலங்களில் இருதரப்பாரினதும் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறான விளைவுகளே ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
குளம் நிறைந்தால்தான் யாழ்ப்பாணத் திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இல்லாவிட்டால் தண்ணீர் கொண்டு செல்லப்படமாட்டாது என்று அதிகாரிகள் கூறுகின்றார்கள். ஆனால் குளம் நிறைந்து அதிகாரிகள் கூறுவதுபோல, மேலதிக நீரை எடுப்பது எப்படி என்ன அளவில் எடுப்பது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். இதற்கு அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேநேரம் இரணைமடு குளத்து நீரை மாத்திரம் நம்பியிருந்தால், வரட்சி காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படும். ஆனால் தண்ணீர் தேவையான யாழ்ப்பாணத்து மக்களுக்கு குடிப்பதற்குரிய நீருக்கு அதிகாரிகள் எங்கே போவார்கள் என்பதற்குச் சரியான பதில் இல்லை.
இருபது வருடகால திட்டத்தில் இரணைமடு குளத்தில் இருந்து, யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீரைக் கொண்டு செல்கின்ற அதேநேரம், யாழ் மாவட்டத்தில் நன்னீர் வளத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இரணைமடு திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள். ஆனால் அந்தத் திட்டம் என்ன யாழ்ப்பாணத்தில் எந்த இடத்தில் இருந்து நன்னீரைப் பெற முடியும் அதற்கான முயற்சிகள் என்ன என்பது பற்றிய திட்டவட்டமான தகவல்கள் வெளியாகவில்லை. வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் விவசாயிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இரணைமடு குடிநீர்த்திட்டத்திற்கு நிதியுதவி வழங்குகின்ற ஆசிய அபிவிருத்தி வங்கியினர், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர், வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் என்ற வகையில் வடமாகாண சபையினர், இரணைமடு குளத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் என நான்கு தரப்பினர் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், இந்தத் திட்டம் பற்றிய முழுமையான விபரங்கள், திட்டத்தின் சாதக பாதகங்கள் பற்றிய விடயங்கள் என்பன தங்களிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பதனால், இதில் தங்களுக்குப் பாதகம் ஏற்படுத்தும் அம்சங்களே அதிகமாக இருக்கின்றது என்று விவசாயிகள் குறிப்பிடுகின்றார்கள் இதனால், இந்தத் திட்டத்திற்குத் தாங்கள் அனுமதியளிக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
மாகாண சபையின் நிலைமை
வடமாகாண சபைக்கான தேர்தல்
நடத்தப்படுவதற்கு முன்னர், ஆசிய அபிவிருத்தி அதிகாரிகள் அல்லது இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களை ஏமாற்றி பல விடயங்களைத் தங்களிடம் இருந்து மறைத்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சித்திருந்தார்கள் என்றும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு, மாகாண சபை பொறுப்பேற்றதன் பின்னர், மாகாண சபை இந்தத் திட்டம் குறித்து சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் விவசாயிகள்
சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
மாகாண சபை பொறுப்பேற்றதன் பின்னர், முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள், இரணைமடு திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் நிபுணத்துவ ஆலோசகர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் பல விடயங்கள் பல தரப்புக்களில் இருந்தும் எடுத்துக் கூறப்பட்டன.
அதன் பின்னர் முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. விவசாயிகளுக்கும் திட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்தத் திட்டம் தொடர்பில் ஏற்பட்டிருக்க வேண்டிய நெருக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. , அபிவிருத்தித் திட்டம் என்ற வகையில் இதில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய பரஸ்பர ஒத்துழைப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இரு தரப்பினர் மத்தியிலும் சரியான புரிந்துணர்வும் ஏற்பட்டிருக்கவில்லை. கிளிநொச்சியில் நடைபெற்ற இரணைமடு திட்டம் தொடர்பான முதலாவது கூட்டத்திலேயே இந்தக் குறைபாடு தெட்டத் தெளிவாக வெளிப்பட்டிருந்தது. இதனை முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் அதனை உரிய வகையில் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இரணைமடு திட்டம் தொடர்பாக யார் யாரெல்லாம் கருத்துக்கள் கூறுகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் பதிலளிப்பதிலேயே விவசாயிகளும் மாகாண முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் இரணைமடு திட்டமானது அரசியல் சொற்போர் ஒன்றின் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
சாவகச்சேரியி;ல் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், பாராளுமன்றத்தில் இரணைடு திட்டத்தில் தன்னைப் பற்றி பேசப்பட்ட ஒரு பேச்சுக்குப் பதிலளிப்பதற்காக அல்லது அது தொடர்பான தனது ஆதங்கங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக அந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சரை விளித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எந்த விடயத்தையும் அணுகக் கூடாது என்பதை உணர்;ச்சி வசப்பட்ட நிலையில் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இரணைமடு திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே எதிர்க்கின்றார் என்ற கருத்தை மறுத்து உரைத்த சிறிதரன் அந்த திட்டத்திற்குத் தனது முழு எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இரணைமடு திட்ட அதிகாரிகள் ஏன் பேச்சுக்கள் நடத்தவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.
ஓர் அபிவிருத்தித் திட்டம் வரும்பொழுது அதன் சாதகபாதகங்களை மக்களின் பிரதிநிதிகள் அரசியல் நிலைப்பாட்டிற்கு அப்பால் இருந்து நோக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலைப்பாட்டில் அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை முன்னெடுத:;துச் செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். இரணைமடு திட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி முதலமைச்சரும்சரி அத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை, புரிந்துணர்வற்ற நிலைiமையைப் போக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்;டிருப்பதாகத் தெரியவில்லை. இந்த திட்டம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிப்பதிலும், அவற்றில் தாங்கள் சரியாகவே இருக்கின்றோம் எனக் கூறி, தங்களுடைய நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டிருப்பதைக் காண முடிகின்றது.
பொதுமக்களின் நன்மைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டிய நிலையில் இத்தகைய அரசியல் போக்கு விரும்பத்தக்கதல்ல. அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வரக் கூடிய நன்மைகளை சரியான முறையில் அடைவதற்கு இது தடையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments
Post a Comment