Latest News

December 07, 2013

மலையக இளையர்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் மேம்படுத்த வேண்டும்
by admin - 0

ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர் சக்தி மற்றும் பங்களிப்பு என்பன மிகவும் இன்றியமையாததாகும். இளைஞர் சக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலமாக பல்வேறு காரியங்களை சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. உலக வரலாறுகளும் கடந்த காலத்தில் இதனை நிரூபித்துள்ளன. இந்த வகையில் மலையக இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களின் சக்தி பிழையான வழிகளில் திசை திருப்பப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமலும் இல்லை. மலையக இளைஞர்களின் சக்தி பிழையான வழிகளில் திசை திருப்பப்படுவதன் காரணமாக மேலெழும்பும் விபரீதங்களை வலியுறுத்தியுள்ள புத்திஜீவிகள் மலையக இளைஞர்களின் சமகால போக்குகள் மற்றும் அவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்தும் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் தமது இளவயது அனுபவங்களும் நினைவுகளும் வாழ்க்கையில் மறக்க முடியாதவையாக விளங்குகின்றன. சிறுவர் கால அனுபவங்கள் இளம் ஆட்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துகின்றன. அத்தோடு வளர்ந்தோர் கால அனுபவங்களுக்கு ஓர் அத்திவாரமாகவும் அமைகின்றது. இளம் வயதில் உரியவாறு வாழ்க்கை நடத்தாமல் பிழையான வாழ்க்கையை கடைபிடிப்பதன் காரணமாக சுகமான முதுமையை பலர் சுமையாக்கிக் கொள்கின்றனர். இளமையில் நெறியோடு வாழும் வாழ்க்கையை தொலைத்துவிட்டு முதுமையில் கண்ணீர் சிந்துவதன் காரணமாக எவ்விதமான சாதக விளைவுகளும் ஏற்படப்போவதில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
2010 ஆம் ஆண்டுக்கான வருட மத்திய சனத்தொகை மதிப்பீட்டின் படி இளம் ஆட்களின் எண்ணிக்கை 5.8 மில்லியன்களாகும். இது இலங்கையின் பொதுவான சனத்தொகையில் 28 சதவீதமாகும். இதில் 2.7 மில்லியன் தொகையினர் பாடசாலைக்கு செல்வதாக மதிப்பீடு தெரிவித்தது. இலங்கையில் இளம் பருவத்தினரிடையே எழக்கூடிய பிரச்சினைகள் பற்றிய தேசிய மதிப்பீட்டின் படி (2004) சராசரியாக பெரும்பாலான இளம் பருவத்தினர் புகைத்தல், மதுபானம் மற்றும் துர்ப்பழக்கத்திற்கான பொருட்களை சுமார் 14 தொடக்கம் 15 வரையான வயதினிலேயே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இளைஞர்கள், யுவதிகளிடையே புகை பிடித்தல் முறையே 18 வீதமாகவும் 06 வீதமாகவும் இருந்துள்ளது. 24 வீதமான இளைஞர்களும் பத்து வீதமான யுவதிகளும் மதுபானம் பாவித்துள்ளனர்.
ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. ஒரு நாட்டின் இளைஞர்களை போதைப் பொருளில் மாட்டிவிட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும். பெளதீக அழிவுகளின் சிதைவுகளில் இருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்பலாம். ஆயின் உளரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு எவ்விதத்திலும் விமோசனம் கிடைக்க மாட்டாது என்பது ஆர்.எம்.கல்றாலின் கருத்தாக உள்ளது. போதைப்பொருள் என்பது அத்துணைத் தீமையானதாக உள்ளது.
இந்த வகையில் இலங்கை இளைஞர்களின் போதைப்பொருள் நாட்டமும் அதிகரித்தே காணப்படுகின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை. இலங்கையில் 2005 ஆம் ஆண்டில் ஐந்து கோடியே 15 இலட்சம் லீற்றர் பியர் உற்பத்தி இடம் பெற்றுள்ளது. 2009 இல் ஐந்து கோடியே 54 இலட்சம் லீற்றர் பியர் உற்பத்தி இடம்பெற்றுள்ளதுோடு அதே ஆண்டில் ஏழு கோடியே 52 இலட்சம் லீற்றர் வன்மதுபான உற்பத்தி இடம்பெற்றுள்ளது. 2001 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 57 இலட்சத்து 36 ஆயிரத்து 495 லீற்றர் பியர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே வேளை இக்காலப்பகுதியில் ஒரு கோடியே மூன்று இலட்சத்து 39 ஆயிரத்து 771 லீற்றர் வன்மதுபானம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்களில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
மதுவகைகளின் பாவனை குறித்து நோக்குகின்றபோது 2000 ஆம் ஆண்டில் ஐந்து கோடியே ஆறு இலட்சம் லீற்றர் பியர் பாவனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலை 2009 ஆம் ஆண்டு ஐந்து கோடியே 24 இலட்சம் லீற்றர் என்றும் நிலையை ஏட்டியது. 2008 ஆம் ஆண்டில் 05 கோடியே 34 இலட்சம் லீற்றர் பியர் பாவனை செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் 07 கோடியே 51 இலட்சம் வன்மது பாவனை இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வலியுறுத்துகின்றன. 2000-2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்த மது பாவனையானது 121 கோடியே 61 இலட்சம் லீற்றர்களாகும். மது பாவனையில் இன்னும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினைக் காண முடியவில்லை. மது பாவனை விடயத்தில் இளைஞர்கள் முன் நிற்பது தெரிந்த விடயமே.
சட்டபூர்வமான மது உற்பத்தி, இறக்குமதி பாவனை என்பன ஒரு புறமிருக்க சட்ட விரோதமான முறையிலும் மது உற்பத்தி பாவனை என்பன நாட்டில் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன. 2010 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஜுலை மாதம் வரையிலும் சட்ட விரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, கடத்தல் என்பன தொடர்பாக 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 850 இலட்சம் ரூபாய் இதன் மூலம் அபராதமாக அறவிடப்பட்டது.
இளைஞர்களை சீரழிக்கும் இன்னுமொரு வியடம் புகைப்பழக்கமாகும். 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் சிகரட் விற்பனை 23.5 சதவீதம் அதிரித்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் 36 ஆயிரத்து 557 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. 2010 இல் 29 ஆயிரத்து 589 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்தது. 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 ஆம் ஆண்டில் புற்றுநோயாளர்களின் தொகை ஐந்தாயிரத்தினால் அதிகரித்துள்ளது. இவ்வதிகரிப்பிற்கு புகைத்தல் பழக்கமும் உந்துசக்தியாக அமைகின்றது.
நவீன தொழில்நுட்பவிருத்தியும் இளைஞர்களை பிழையான வழிகளில் செல்லத் தூண்டியுள்ளது. உலகில் சுமார் ஆறு பில்லியனுக்கும் அதிகமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி வருவதாக 2011 ஆம் ஆண்டில் வெளியான தகவல் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டுக்கும் முன்னர் கையடக்க தொலைபேசியின் பாவனை குறைந்து காணப்பட்டது எனினும் இதன் பின்னரான காலப்பகுதியில் கையடக்கத் தொலைப்பேசியின் பாவனை மிகவும் வேகமாக அதிகரித்து காணப்படுகின்றது.
சம கால இளைஞர்களை மது மற்றும் புகைத்தல் பழக்கவழக்கம், கையடக்க தொலைபேசியின் பாவனை என்பன அதிகமாக ஆட்கொண்டு வருகின்ற நிலையில் மலையக இளைஞர்கள் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை. இவர்களிடமும் இத்தகைய பழக்கங்கள் அதிகமாக காணப்படுகி்றன. மலையக இளைஞர்களின் மதுப்பழக்கம் பல குடும்பங்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. கையடக்க தொலைபேசி பாவனை பெரும்பாலான மலையக இளைஞர், யுவதிகளின் வாழ்க்கைப் பாதையினை திசைமாற்றி இருக்கின்றது என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மலையக இளைஞர்களின் சம கால போக்குகள் குறித்து கொத்மலை வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆர்.விஜேந்திரனிடம் கருத்து வினவினென். இதன் பொது விஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
நவீன தொழிநுட்ப விருத்தியின் சாதக விளைவுகளைக் காட்டிலும் பாதக விளைவுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பிழையானவற்றை மாணவர்கள் உடனடியாகக் கிரகித்துக் கொள்கின்றனர். பாடசாலை காலத்திலேயே மாணவர்கள் நெறி பிறழ்வதற்கு அநேகமான ஏதுநிலைகள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கல்வி சமூகத்தவர்கள் பொறுப்புடன் செயற்பட்டு நேர்வழி காட்ட வேண்டியுள்ளது. பெரும்பாலான இளைஞர்களும் யுவதிகளும் வழிதவறுவதற்கு குடும்ப சூழல் காரணமாக அமைந்துள்ளது. சில குடும்பங்களில் உறவு முறை ரீதியான தார்ப்பரியங்கள் பின்பற்றப்படுவது குறைவாகவே உள்ளது. தகவல் புரட்சியின் கையாளுகை பிழையான வழியில் செல்கின்றது. மனித பலவீனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. பாலியல் கல்வி என்பது சில நாடுகளின் கல்வித்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை போன்ற நாடுகளில் இந்நிலைமையை காணமுடிவதில்லை. பாலியல் குற்றங்கள் இளைஞர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்று விஜேந்திரன் வலியுறுத்துகின்றார்.
விஜேந்திரன் தெரிவித்துள்ளதைப் போன்று மலையகத்தவர்களின் குடும்பச் சூழல் இளைஞர், யுவதிகளின் நெறி, பிறழ்வுக்கு உந்து சக்தியாகும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய முக்கிய விடயமாக உள்ளது. இம்மக்களின் லயத்து வாழ்க்கை முறை கலாசார சீரழிவுகளுக்கும் நெறி பிறழ்வுகளுக்கும் உந்து சக்தியாக இருந்து வருவதாக நீண்ட காலமாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இந்நிலையில் தனிவீட்டு குடும்பச் சூழல் இளைஞர் நெறிபிறழ்வை குறைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் சக்தி என்பது மிகவும் பெறுமதியானது. இந்த வகையில் இளைஞர் சக்தி நேர்மையான வழியில் பயன்படுத்தப்படல் வேண்டும். எனினும் இளைஞர், யுவதிகளுக்கு அற்ப சலுகைகளை வழங்கி சில அரசியல் தொழிற்சங்கவாதிகள் இவர்களின் சக்தியை திசை திருப்புவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். தேர்தல் காலங்கள் மற்றும் தொழிற்சங்களுக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் இளைஞர், யுவதிகள் பிழையாக வழிநடத்தப்படுவதாக விமர்சனங்கள் மேலெழுந்து வருகின்றன. இளைஞர் சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நோக்கிலான செயற்பாடுகளை பலரும் கண்டித்துப் பேசி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க மலையக இளைஞர், யுவதிகள் பொருளாதார நிலைமைகள் குறித்த விமர்சனங்களும் ஆழமாக எடுத்தியம்ப்பட்டு வருகின்றன. இளைஞர் வெளியேற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். இதன்போது நுவரெலியா, பதுளை போன்ற மாவட்ட இளைஞர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச் சென்று கூலி வேலை செய்கின்றார்கள். காரணம் இன்று இவர்கள் தங்களுடைய தொழிலை பெருக்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாலும் விவசாயத்தில் நட்டமடைவதாலும் தான். ஆனால் பொதுவாக இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் தொழிலில்லாத பிரச்சினை இல்லாமைக்கு காரணம் முன்னர் அங்கு இளைஞர்கள் தாமாக விவசாயம் செய்து ஏதாவது ஒரு வருமானத்தைப் பெற்று அதன் மூலம் தமது வாழ்க்கையை நடத்த முடிந்தமையாகும். ஆனால் இன்று விவசாயத்தில் நட்டம் ஏற்படுவதால் தான் இந்த நிலைமை மாறி இருக்கின்றது. இதனால் தான் அவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு சென்று சாதாரண தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் தோட்டத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. தோட்டங்களிலே சரியான முறையில் பெயர் பதிவு செய்யப்படுவதில்லை. ஒழுங்காக வேலை கொடுப்பதில்லை. இது போல் பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுப்பதால் வேலையற்ற சூழ்நிலை காணப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் நுவரெலியா பிரதேச இளைஞர் அதிருப்தியை குறிப்பாக சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
மலையக இளைஞர் வெளியேற்றம் குறித்து பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் பின்வருமாறு எடுத்துக் கூறிஇருக்கின்றார். இவ்வாறான வெளியேற்றங்களை நாம் பத்து வருடங்களுக்கு முன்னதாகவே அவதானித்திருந்தோம். இன்று மத்திய மாகாணத்தின் பல தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலைமை அதிகமாக காணப்படுகின்றது. சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உள்ள சில தோட்டங்களிலும் வேலைக்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால் சிங்கள மக்கள் தொழிலுக்காக வந்து இந்த இடங்களில் குடியேறுகின்றார்கள். இதுவொரு ஆபத்தான சூழ்நிலையாகும். மலையக இளைஞர்,யுவதிகள் தலை நகரத்தின் வேலை செய்திருந்தாலும் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். இது குறித்து எம்மிடம் பலர் வந்து முறைப்பாடுகளை தெரிவித்த வண்ணமே உள்ளனர்.
ஆகவே பெற்ற தாய், தந்தையரை சொந்த ஊரை, சொந்தபந்தங்களை விட்டுவிட்டு தனியாக வந்து பல கஷ்டங்களை அனுபவித்து தொழில் செய்வதை விட்டுவிட்டு தமது சொந்த ஊரிலேயே சுயதொழில்களில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேலும் அதிகரிக்க முடியும். இன்று அரசு சுயதொழிலுக்காக பலகோடி ரூபாய்களை செலவு செய்கிறது. ஆனால் மலையக இளைஞர்களுக்கு சுய தொழிலில் ஆர்வமில்லாத காரணத்தினால் அவர்கள் தலைநகருக்கு வந்து தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். இதுவொரு வருத்தப்பட வேண்டிய விடயமாகும் என பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் அந்த செவ்வியில் வலியுறுத்தி இருக்கின்றார்.
பிரதியமைச்சர் தெரிவித்திருப்பதைப் போல் சுயதொழில் நாட்டமில்லாத தன்மை மலையக இளைஞர், யுவதிகளிடம் காணப்படுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மலையக இளைஞர் சார்பாக பல்வேறு அபிவிருத்திப் பணிகளை அரசியல்வாதிகளும் மலையக அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் மேலெழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான பி.இராஜதுரை கருத்து தெரிவிக்கின்றார். இராஜதுரை மேலும் இது பற்றி குறிப்பிடுகையில், கல்வி, தொழில் வாய்ப்பு, கலாசாரம், பொருளாதாரம் போன்ற பலதுறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். கொழும்பு உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில் புரிகின்றார்கள். இவர்களை மலையகத்தில் இருந்து அவர்களது சேவைகளை பெற்றுக் கொள்ள விசேட பொருளாதார திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். தேசிய இளைஞர் கொள்கைகள் வகுக்கப்படும் போது மலையக இளைஞர் சார்பாக பொருத்தப்பாடுடைய கொள்கைகளை உருவாக்க மலையக அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.
மேலும் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகும். பல உலக வரலாறுகளை இளைஞர்கள் மாற்றியமைத்திருக்கின்றார்கள். இந்த வகையில் இளைஞர்களின் சக்தி சரியான வழியில் பயன்படுத்தப்படல் வேண்டும். மலையக இளைஞர்கள் பல தரப்பினர்களால் திசை திருப்பப்படுகின்றார்கள். அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் சமயத் தலைவர்கள் சில அதிபர்கள் ஆசிரியர்கள் தோட்ட நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் இளைஞர்களை பிழையான வழிகளில் திசை திருப்பி தனது காரியத்தை சாதித்துக் கொள்ள முற்படுகின்றனர். இது பிழையானதாகும்.
மலையக இளைஞர்களை குறை கூறுவது இன்னும் சிலரின் செயலாக இருக்கின்றது. இளைஞர் அபிவிருத்தி கருதி செயற்பட வேண்டியவர்களே இளைஞர்களை விமர்சிப்பதென்பது கேலிக்கூத்தாக உள்ளது. இளைஞர்களை புறக்கணிப்பதால் எதிர்காலம் சூனியமாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு சகல தரப்பினரும் செயற்படுவது அவசியமாகும் என்று இராஜதுரை மேலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
எவ்வாறெனினும் இளைஞர்களின் திசை மாற்றப் போக்குகள் காரணமாக எமது நாடும் உலக நாடுகளும் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளன. எனவெ இளைஞர் சமூகத்தை நேர்வழியில் செல்ல வைப்பதற்கு உரிய ஆலோசனை வழிகாட்டல்கள் என்பன வழங்கப்பட வேண்டும். விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்றும் மலையக இளைஞர் சார்பாக இத்தகைய நடவடிக்கைகள் எந்தளவுக்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இளைஞர் ஆரோக்கியம் தொடர்பான தேசியக் கொள்கை மற்றும் மூலோபாயம் என்ற அறிக்கையில் இளைஞர் நலன்கருதி பலவிடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சமூக உளவியல் மற்றும் மனநலன்களை மேம்படுத்துதல் ஆகக்கூடிய அளவிலான போஷாக்கு மட்டத்தையும் உடல் உறுதி நிலைமையினையும் உறுதிப்படுத்தல், பாலியல் மற்றும் மீள் உற்பத்தி உடல் நலக்கல்வி மற்றும் சேவைகளை உறுதிப்படுத்தல், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் இனம் ஆட்களை மகிழ்ச்சிகரமானதும் சுகாதார நலமானதும் திறமையானதும் மற்றும் உற்பத்தித் திறன் மிக்கதுமான வாழ்க்கையை அனுபவிக்கச் செய்வது அறிக்கையின் தூர நோக்காக உள்ளது.
இதற்கேற்ப மலையக இளைஞர் நலன் மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படல் வேண்டும். தேசிய இளைஞர் நிகழ்ச்சி நிரல்களின் போது மலையக இளைஞர்களுக்கும் கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அடிக்கடி விழிப்புணர்வு நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு, அரசசார்ப்பற்ற நிறுவனங்கள் அரசியல் தொழிற்சங்கவாதிகள், புத்திஜீவிகள் என்று பல தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு மலையக இளைஞர் மேம்பாட்டுக்கு தம்மாலான உச்சகட்ட பங்களிப்பை வழங்க வேண்டியது மிகவம் அவசியமாகும்
« PREV
NEXT »

No comments