கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. எனவே, கிழக்குப் பல்கலையின் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கும் அதனை ஆராய்ந்து விசாரிப்பதற்கும் ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம். பி. யான பொன். செல்வராசா நேற்று பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, சிறுவர்களின் மனநிலையை பாதிப்படையச் செய்கிறதான ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கல்வி அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஐந்தாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.
கல்வி உயர் கல்வி அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பேசிய பொன் செல்வராசா எம். பி. இங்கு மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கல்விக்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கென 80 பில்லியன் ரூபாவும் 10 பில்லியன் ரூபா பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைக்கெனவும் மிகுதியான 35 பில்லியன் ரூபா ஏனைய தேவைகளுக்கெனவும் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.
எனினும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் கல்வியியற் கல்லூரி தொடர்பில் இங்கு குறிப்பிடப்படவில்லை. ஆனால் மகரகமையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்கு மாத்திரம் 750 மில்லியன் ரூபா பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. இது இங்கு ஓதுக்கப்பட்டுள்ள நிதியில் தான் ஏனையப்பகுதிகளைச் சேர்ந்த கலாசாலைகளும் அடங்குகின்றன.
மட்டக்களப்பில் இயங்கி வருகின்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை எவ்வாறான நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் வந்து பார்வையிட வேண்டும். அந்த கட்டிடங்கள் தற்போது தூர்ந்து போன நிலையில் காணப்படுகின்றன.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் கூற வேண்டியுள்ளது. இந்தப் பரீட்சையானது சிறுவர்களுக்கு ஒருவித சுமையை ஏற்றி வைக்கின்ற திட்டமாகவே அமைந்திருக்கின்றது. இம்முறை இந்தப் பரீட்சைகளின் பெறுபேறுகள் சர்வதேச சிறுவர் தினத்தில் தான் வெளியாகியிருந்தது. எனினும் அன்றைய தினத்தில் பல சிறுவர்கள் பெற்றோரின் தாக்குதல்களுக்கு இலக்கான சந்தர்ப்பங்களும் அமைந்தன.
இத்திட்டம் தொடர்பிலான மாற்று நடவடிக்கை குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் வரவேற்றிருக்கின்றது. ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் திட்டமானது குழந்தைப் பருவம் என்பதால் இதனை மாற்றியமைக்கும் பட்சத்தில் சிறுவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவர்.
மேலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளி தொடர்பில் சிக்கல் நிலை ஒன்று காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆம் ஆண்டுக்கான வெட்டுப்புள்ளியாக 155 என இறுதி செய்யப்பட்டிருக்கின்றது எனினும் 154 புள்ளிகளைப் பெறும் சிறுவன் ஒருவன் இந்த வெட்டுப் புள்ளிக்குள் உள்வாங்கப்படுவதில்லை. ஒரு பாடத்தில் 75 புள்ளிகள் பெற்றிருந்தாலும் அது அதி திறமைச் சித்தியாகும் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
நாடு முழுவதிலும் தற்போது 149 பாடசாலைகள் வன். ஏ. பி. தரப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. எனினும் கிழக்கில் இரண்டே பாடசாலைகள் மாத்திரமே இவ்வாறு வன். ஏ. பி. தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தரமுயர்த்தப்பட்ட மேற்படி இரண்டு பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. கோட்டைக்கல்லாறு பாடசாலையில் கணிதம் மற் றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.எனவே, பாடசாலைகள் தரமுயர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதன் குறைபாடுகளும் நிவர்த்திக்கப்பட வேண்டும்.
இதே போன்று கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மிருக வைத்திய பீடம் மற்றும் விவசாய பீடம் சட்ட பீடம் ஆகிய பீடங்கள் இல்லாத நிலை காணப்பட்டு வருகின்றது. சட்ட பீடம் இங்கு இல்லாததால் அங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திலேயோ அல்லது கொழும்பு பல்கலைக்கழகத்தையோ நாட வேண்டியுள்ளது.
இவற்றைக் கருத்திற்கொண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவி வருகின்ற மேற்படி குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதேவேளை கிழக்குப்பல்கலைக்கழகமானது வெளிநாட்டுப் பிரஜையான உபவேந்தர் ஒருவரின் கீழேயே இயங்கி வருகின்றது. இங்கு பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற போது பிரதி அமைச்சர் ஒருவரும் இந்த விடயத்தை முன் வைத்திருந்தார்.
எனவே கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கும் விசாரிப்பதற்குமென ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மட்டக்களப்பில் வைத்திய பீடம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு வருடத்துக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் அந்த வேலைத்திட்டம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்னதாக அடிக்கல் நாட்டப்பட்ட வேலைத்திட்டத்திற்கு தற்போது தான் இரண்டு லோட் மணல் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகமானது நோர் வே பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த போதிலும் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கிழக்குப்பல்கலைக்கழகம் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய ற்படுவதற்கான நடவடிக்கைகளையும் முன் னெடுக்குமாறு கேட்கிறேன் என்றார்.
No comments
Post a Comment