அடுத்த வருடம் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையொன்றுக்கு இணை அனுசரணை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவிக்கையில், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானியா ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பொதுநலவாய மற்றும் சர்வதேசபங்காளித்துவ நாடுகளுடன் கிரமமான முறையில் கலந்துரையாடி வருகின்றது. அத்தகைய கலந்துரையாடல்களின்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையொன்றின் உள்ளடக்கம் அடங்கலான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு மார்ச் அமர்வுக்கு முன்னரே இறுதி வடிவம் கொடுப்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவை மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை அரசை கடந்த மார்ச்சில் வலியுறுத்தியிருந்த ஐ. நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு பிரித்தானியா இதற்கு முன்னர் இணை அனுசரணை வழங்கியிருந்ததை நினைவுறுத்திய ஸ்வயர் இலங்கை மீதான தகுந்த தீர்மானமொன்றுக்கான ஆதரவைத் திரட்டுவதற்கென தாங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுடன் நெருங்கிய முறையில் ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணைகளை நடத்துமாறு பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இத்தகைய விசாரணைகள் எதிர்வரும் மார்ச் அளவில் ஆரம்பிக்கப்படாவிடின் சர்வதேச விசாரணையொன்றிற்்கான அறை கூவலை விடுப்பதற்கு பிரித்தானியா ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் உள்ள தனது ஆசனத்தை பாவித்துக்கொள்ளப் போவதனையும் பிரித்தானியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை அரசு மனித உரிமைகள் பேணப்படுவதில் இற்றைவரை காண்பித்துள்ள முன்னேற்றம் குறித்த மதிப்பீடொன்றை ஐ. நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மேற்கொள்வதில் சர்வதேச ஆதரவை திரட்டும் பணியில் பிரித்தானியா தீவிர வகிபாகமொன்றை கொண்டிருக்கப் போகின்றது என்றும் அவர் விபரித்தார்.
No comments
Post a Comment