முஸ்லிம் மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை தெஹிவளைப் பிரதேசத்திலுள்ள அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெஹிவளை தாருல் அர்கம் ஆகிய மூன்று பள்ளிவாசல்களிலும், தொழுகைகளை நடத்தவேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் உள்ள சில பௌத்த மதகுருமாரும், பௌத்தர்களும் இணைந்து இந்த மூன்று பள்ளிவாசல்களும் சட்டவிரோதமானவை என பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதை அடுத்து இந்தப் பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இந்த பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்தப்படும் பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இங்கு தொழுகைகளை நடத்த வேண்டாம் என்று பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்ததுடன் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண முயல்வது என்றும் தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வர இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.
தெஹிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது முஸ்லிம் மக்களின் மத உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறுகின்ற செயற்பாடாகவே அமைந்துள்ளது. அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதன் ஒரு கட்டமாகவே தற்போது மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பமான இந்த தாக்குதல் சம்பவம் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை நீடித்தது. இதுவரை 25 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் மக்களின் ஹலால் சான்றிதழ் விவகாரமும் சிங்கள இனவாத கட்சிகள் மற்றும் அமைப்புக்களினால் பெரும் பூதாகரமாக மாற்றப்பட்டு அந்த விடயத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையும் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைச்சம்பவங்களும் அடக்குமுறைகளும் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன. தெஹிவளைப் பகுதியில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
நேற்று முன்தினம் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்துப் பேசிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும், விசனத்தையும் உண்டு பண்ணியுள்ளது. பள்ளிவாசல்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றன. இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறிய போது இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கூறும் வரை அது பற்றி தான் அறிந்திருக்கவில்லையெனவும் வேறு எவரும் இதுகுறித்து தனது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கவில்லை என்றும் கூறிய ஜனாதிபதி இவ்விடயத்தில் . உரிய கவனம் செலுத்தப்படும் என்று கூறியிருக்கின்றார்.
விசம சக்திகளால் உந்தப்பட்டு அரசாங்க உயர் மட்டத்திற்கு தெரியாத விதத்தில் பொலிஸார் தான்தோன்றித்தனமாக இவ்வாறான இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய சமய விரோத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது கண்டிக்கப்படவேண்டியதொன்றாகும் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம்கள் நாள்தோறும் ஐவேளைகள் தொழுகைகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்று என்ற காரணத்தினால் மத்ரஸாக்களில் தொழுவதைக் கூட தடுக்கக்கூடாது என்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் ஹக்கீம் கொண்டுவந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமை அரசாங்க உயர் மட்டத்திற்கு அதுவும் குறிப்பாக ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இத்தகைய உத்தரவுகளையும் அரசாங்கத்தின் உயர்பீடத்தின் அனுமதியின்றி பொலிஸாரினால் விடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது.
இந்த மூன்று பள்ளிவாசல்கள் விடயத்திலும், தொழுகைகள் நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளபோதிலும், அவ்வாறு தடை விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார்.
எந்த பள்ளிவாசல்களிலும் பொலிஸார் தொழுகையை தடை செய்யவில்லை. தெஹிவளைப் பிரதேசத்தில் அவ்வாறு எந்தச் சம்பவமும் இடம் பெறவில்லை. எனினும் கொஹுவளை பிரதேசத்தில் குர்ஆன் மத்ரஸாவாக நடத்தி வரப்பட்ட இடம் ஒன்று தற்போது தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்ய பௌத்த, முஸ்லிம் பிரதிநிதிகளை புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சிற்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தனது பக்க நியாயத்தை தெரிவித்துள்ளார்.
சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்த நாடானது பௌத்த சிங்கள நாடு என்று கூறிவருகின்றன. இங்கு வாழும் சிறுபான்மை மக்கள் வந்தேறு குடிகள் என்ற எண்ணப்பாடே அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இத்தகைய எண்ணத்தைக் கொண்டுள்ள அமைப்புக்கள் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மீதான தமது வன்முறைக்கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றன. இத்தகைய அமைப்பினர் தான் தெஹிவளையில் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை தடை செய்வதற்கு உரிய முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரிகின்றது.
இந்தப் பள்ளிவாசல் விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார். எனவே காலதாமதமின்றி இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.
மனம் நொந்துபோயுள்ள முஸ்லிம் மக்களுக்கு இனியும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும்.
மதங்களிடையே இத்தகைய முரண்பாடுகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சர்வ மத அமைப்புக்களைக் கொண்ட புதியதொரு கட்டமைப்பை மத விவகார அமைச்சும் உருவாக்கவேண்டும். மதங்களுக்கு எதிராக எங்காவது ஒரு சம்பவம் நடைபெற்றால் இந்த அமைப்பு தலையிட்டு முரண்பாடுகள் அதிகரிக்காத வகையில் அவற்றுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்குவதற்கு உடனடியாக மதவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாத விடயமாக உள்ளது.
ஏனெனில் தொடர்ந்தும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளும் அடக்கு முறைகளும் தொடர்வதானது நாட்டிற்கு நன்மைபயக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments
Post a Comment