இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, சர்வதேச சுயாதீன
விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டால், என்ன நடக்கும் என்பதனை மிகத் தெளிவாக காட்டுகிறது ஜெர்மனியில் நடை பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் ( The Permanent Peoples 'Tribunal )அமர்வுகள். இத்தாலிய ரோமில் தலைமையகத்தைக் கொண்ட ' நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்', இலங்கையில் நடைபெற்றபோர்க்குற்றங்கள் குறித்தான முதற்கட்ட விசாரணைகளை 2010 ஜனவரியில் மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, அனைத்துலக மனித உரிமைகள் ஒன்றியம்- ப்ரீமென் மற்றும் இலங்கையில் சமாதானத்திற்கான ஐரிஸ் பேரவை ஆகியவை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய , ஜெர்மனியின் ப்ரீமனில் இரண்டாவது கட்ட அமர்வினை நடாத்தியுள்ளது. அயர்லாந்தில் நடைபெற்ற முதற்கட்ட அமர்வில், போர்க்குற்றம், மானுட குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதனடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ப்ரீமனில் வழங்கப்பட்ட தீர்ப்பில், இலங்கையில் நடைபெற்றது 'இனப்படுகொலை'என்றும், அந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக, அமெரிக்காவும், பிரித்தானியாவும், இந்தியாவும் செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தியா மீதான குற்றச் சாட்டுக்குத் தேவையான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்கிற கருத்தினையும் அத்தீர்ப்பில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பர்மா, ஆமேனியா, ஆஜெண்டீனா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள்,
மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள், சிங்களத் தோழர்கள் பலர் இந்த அமர்வில் கலந்து கொண்டுள்ளனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன், உமர், மற்றும் தமிழ் தேசிய மக்கள்
முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , வடமாகாணசபைத் தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்ற அனந்தி.எழிலன், சனல் 4 தொலைக்காட்சியின்
ஆவணப்படத் தயாரிப்பாளர் கலம் மக்ரே ,Dr .என்.மாலதி ஆகியோர் இங்கு சாட்சியமளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அத்தோடு, 30 இற்கு மேற்பட்ட நேரடிச் சாட்சியங்களும் இந்தத் தீர்பாயத்தின் முன்னால்
பிரசன்னமாகியிருந்தனர். இன்னும் இரு வாரங்களில் இத்தீர்பாயத்தின் முழுமையான அறிக்கை வெளிவருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் இந்தியா குறித்த, விடுபட்டுப்போன விடயங்களும் உள்ளடக்கப்படுமென நம்பப்படுகிறது. இலங்கை தொடர்பாக இரண்டாவது தடவையாக கூட்டப்பட்ட அமர்வில், பூகோள அரசியல்
நகர்வுகளை அதிரவைக்கும் விடயமாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா மீது சுமத்தப்பட்ட 'இனப்படுகொலைக்கு அனுசரணை' வழங்கிய விவகாரம் மிக ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தீர்ப்பாயத்தின் இறுதி அறிக்கை சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்படும்போது, இலங்கை அரசின்
மீது இந்த வல்லரசுகள் வழுவழுத்த அழுத்தங்களைப் பிரயோகிக்காமல், உறுதியான
நிலைப்பாட்டினை எடுக்கத் தூண்டுமென எதிர்பார்க்கலாம்.
இதனை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
அதேவேளை கடந்த இரண்டு தடவைகளும், 'உள்நாட்டிலேயே விசாரணைகளை மேற்கொள்ளுங்கள்'
என்று அமெரிக்கா, ஐ.நா.வில் கொண்டுவந்த தீர்மானங்களின் பின்புலத்தை நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவுகள் அம்பலமாக்கியுள்ளது கவனிக்கத்தக்கது . 'நவிபிள்ளை அம்மையார் முன்மொழியும் சர்வதேச விசாரணையை நாம் ஆதரிப்போம் '
என்று முழங்கிய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரனின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி,
இவர்களாகவே தீர்மானத்தை முன்மொழியவேண்டிய நிர்பந்தத்தினை இந்தத் தீர்ப்பாயம்
உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிவடைந்த பின்னர், இலங்கை அரசின் மீது தொடர்ச்சியாக
மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரிப்பதைக் காணலாம். ஐரோப்பிய ஒன்றியமும்
ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அது என்ன தீர்மானமென்று எவருக்கும் தெரியாது. நாம் விரும்பியவாறே அது இருக்குமென்று,
சுயதிருப்தி கொள்ளும் செய்திகள்தான் வருகின்றன. மேற்குலகம் எமக்குச் சார்பாக ,மனித உரிமைப்பேரவையில் தீர்மானங்களைக் கொண்டுவர உத்தேசித்துள்ள
நிலையில், இனப்படுகொலையின் பங்காளிகளாக மேற்குலகைச் சேர்த்துவிட்டதே இந்த 'இத்தாலியத்
தீர்ப்பாயம்' என்று கரித்துக் கொட்டுபவர்களும் இருக்கின்றார்கள்.
ஆனால், இனிமேலும் இரட்டை வேடம் போடமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள், இந்த
மகா வல்லரசுகளை நிறுத்தியிருக்கிறது இத்தாலியத் தீர்ப்பாயம் என்பதை உணர்ந்தாலே போதும். இருப்பினும், ஐ.நா வின் தீர்மானங்களுக்கே அசையாத, அல்லது அதனை பொருட்படுத்தாத வல்லரசுகள்,
இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவுகளுக்கா பயப்படப் போகிறது என்கின்ற
கேள்வி எழுவது நியாயமானது. ஒரு தேசிய இனமானது, இனஅழிவிற்கு உள்ளாக்கப்படுகிறது என்கிற பிரக்ஞை அல்லது அது குறித்தான
விழிப்புணர்வு இந்த வல்லரசுகளுக்கு இருக்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பதும், அவர்களால்
அது புரிந்து கொள்ளப்பட முடியாததால் நாமே அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைப்போம் என்று அவர்களை அணுகுவதுமே, தற்போது ' இராஜதந்திரம்' என்கிற பெயரில் நடைபெறும் போராட்ட அரசியல் கோட்பாடாக நிறுவப்பட்டுள்ளது. இலங்கையின் அமைவிடம், இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கடல்வழித் தலைவாசலில் இருக்கின்றது.
இதுதான் சர்வதேச அரங்கில், இலங்கை பெறும் மூலோபாய கேந்திர முக்கியத்திற்கான காரணியாக அமைகின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினை, இந்த வல்லரசாளர்களின் பிராந்திய நலன்களை தீர்மானிக்கும் நகர்வில், ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக இங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வல்லரசுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரதிநிதித்துவம் செய்யும் ஆசியான், சாங்காய் ஒத்துழைப்பு ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றோடு, அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி, நேட்டோ என்பன, இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் தமது வர்த்தக நலன்களையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவினையும் பார்க்கின்றார்கள். இதேபோன்று, ஆசியாவுக்கு இன்னுமொரு முக்கியமான கடல்வாசல் உண்டு. வடதுருவ பனிப்பாறைகள் உருகினால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது சர்வதேச ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படும் கிழக்கு சீனக்கடல்தான் அது. இக்கடல் வானில், ' வான் பாதுகாப்பு இனங்காணும் வலயம்' என்கிற ( Air Defense Identification Zone )
முன்னெச்சரிக்கை வான் பிரதேசத்தை சீனா பிரகடனம் செய்ததால் அப்பிராந்தியத்தில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. சீனாவுடன் மோதிக்கொள்பவர்கள், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருண்மியப் பங்காளிகளான ஜப்பானும், தென் கொரியாவுமே. போர்விமானங்களும், நாசகாரிக்கப்பல்களும் இக்கடலை ஆக்கிரமிக்கத்தொடங்கியுள்ளன. இப்பிரகடனம் புதிய விடயமல்ல. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உட்பட 20 நாடுகள்,இவ்வாறான வான்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வலயங்களை உருவாக்கியுள்ளதாக படைத்துறை நிபுணர் yin zhuo அவர்கள் வாதிடுகின்றார். ஆனால் பிரச்சினை இதுவல்ல. இதனூடாக சீனாவிற்கு எதிராக, நேட்டோ போன்றதொரு இரானுவக்கூட்டமைப்பினை ஆசியாவில் நிறுவிட அமெரிக்கா அடித்தளமிடுகிறது என்கிற கணிப்பும் உண்டு, முரண்பாடுகளை உருவாக்கி, அதனூடாக நட்புச் சக்திகளை இணைத்துக்கொள்ளும் தந்திரோபாயங்கள் பழைய அணுகுமுறையாக இருந்தாலும், அமெரிக்காவின் இந் நகர்வினை, சீனா எவ்வாறு முறியடிக்க முயலும் என்று பார்ப்போம். தென்சீனக் கடலில் ஏற்பட்ட பிராந்திய முறுகல்நிலையை இடம் மாற்றுவதால், அதாவது கிழக்கு சீனக் கடலில் அக்களத்தினை திறந்து கொள்வதால், சீனாவிற்கு என்ன இலாபம் என்கிற ஐயமும் ஏற்படுகிறது. ஆனால் இலங்கை விவகாரத்தில் மேற்குலகம் காட்டும் சடுதியான அக்கறைக்கும், சீனாவின் கிழக்கு சீனக்கடல் வான்கள திறப்பிற்கும் ஏதாவது தந்திரோபாய இணைவு உள்ளதாவென்பதை கவனிக்க வேண்டும். திசை திருப்பலுக்கு திறக்கப்படும் புதிய களமுனைகள், சிலவேளைகளில் உணர்திறன்மிக்க கொந்தளிப்புக் களமாக மாறக்கூடிய சாத்தியப்பாடுகளும் உண்டு. தென்சீனக்கடலிற்குள் சீனாவின் ஆசியக்கனவினை முடக்கிவிடலாம் என்கிற அமெரிக்காவின் 10ஆண்டு ஆசிய-பசிபிக் திட்டம் வலுவிழந்து போவது போல் தெரிகிறது.
No comments
Post a Comment