கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பாதுகாப்பற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள கொல்களத்தில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டியபின் அதன் கழிவுகளை அவ்விடத்திலேயே வீசி எறிவதால் சுமார் 30இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுகின்ற கொல்களம் ஒன்று அம்பாள்குளம் பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு இன்றுவரை இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்பட்டு வருகின்றன. அதிகளவான குடும்பங்கள் நெருக்கமாக வாழுகின்ற குறித்த பகுதியில் அமைந்துள்ள கொல்களத்தை அகற்றுமாறு இப்பகுதி மக்கள் மகஜர்கள் மூலம் தெரியப்படுத்திய போதிலும் இன்னமும் குறித்த கொல்களம் அவ்விடத்திலேயே இயங்கி வருகின்றது.
குடியிருப்பு பகுதியில் மாடுகள் வெட்டப்படுவதனால் அதன் கழிவுகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் பொழுது கழிவுகள் உரியமுறையில் அகற்றப்படாமையினால் இலையான்களின் பெருக்கமும் துர்நாற்றமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இதனை உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment