விவசாயிகள் தமது உற்பத்தி விளை பொருட்களைப் பல இடங்களிலிருந்தும் விற்பனைக்காக சங்கானை மரக்கறிச் சந்தைக்குத் தினமும் கொண்டு வருகின்றனர். இவர்களது விளைபொருட்களை தமக்கு நட்டம் ஏற்படாத வகையில் விற்பதற்கு இச் சந்தையில் தரகர் போல் நடப்பவர்களால் பல இடையூறுகளைத் தினமும் சந்தித்து வருகின்றனர்.
அண்மையில் அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி ஒரு தொகை மரவள்ளிக் கிழங்கை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்துள்ளார். 59 கிலோ உள்ளதாகவும் அதில் 9 கிலோ கழிவு எனத் தரகர் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ 22 ரூபா வீதம் விலை பேசப்பட்டுள்ளது. விற்பனை முடிவில் விவசாயிக்கு ஒரு கிலோ 20 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில்லறை விலைக்கு ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கு 40 ரூபா வீதம் விற்பனை செய்யப்படுகின்றது.
விவசாயிகளின் உழைப்பை விட இரண்டு மடங்கு ஆதாயத்துடன் வியாபாரிகள் லாபம் ஈட்டுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தினமும் இச் சந்தையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
காலை நேரம் விவசாயிகள் தமது விளை பொருட்களை விற்றுவிட்டு தோட்ட வேலைகள் இருப்பதால் விரைவில் செல்ல வேண்டும் என்பதால் தமக்குக் கிடைப்பதை வாங்கிக்கொண்டு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனைச் சம்பந்தப்பட்ட பிரதேச சபை தமது கவனத்தில் எடுத்து இத் தரகர் தொல்லையைத் தீர்க்க உதவுவார்கள் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments
Post a Comment