விவசாயிகள் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்தவதற்கு வங்கிகள் கால நீடிப்பினை வழங்கவேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமாகாணத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் கடன் சுமை தொடர்பான வங்கி முகாமையாளர்களுடனான கலந்துரையாடலிலேயே அமைச்சர் இவ்வேண்டுகோளை முன்வைத்தார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், போருக்குப் பின்னரான சூழலில் தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். வட மாகாண சபை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் எமக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. விவசாயிகள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளனர். இந்த வகையில் வங்கிகள் விவசாயிகளுடைய கடன்களை இரத்துச் செய்யவேண்டும் எனக் கூறுவது பிழையான முன்னுதாரணமாக போய்விடும். எனவே கடன் பெற்ற விவசாயிகள் உண்மையாகவே பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிந்து விவசாய போதனாசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனை பரிசீலித்து
கடனை மீளளிப்பதற்கான கால நீடிப்பை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். இதனை பயன்படுத்தி நாங்கள் அவர்களுடன் தொடர்ச்சியாக உறவாடி வங்கிகள் தரப்பில் தெரிவிக்கும் கருத்துக்களை முன்வைத்து வெவ்வேறு வகையான கடன் திட்டங்களை விளங்கப்படுத்த முடியும்.
நாம் பல திட்டங்களை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவது மட்டுமல்லாது அவர்களுடைய சந்தைப்படுத்தல் வசதிகள், பொருட்களை களஞ்சியப்படுத்தல், உற்பத்திப் பொருட்களை வேறு பயனாக மாற்றுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தல் என்பன எமது திட்டமாகவுள்ளது. இதற்காக வங்கிகளின் உதவிகள் தேவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
No comments
Post a Comment