“அபிவிருத்தி அபிவிருத்தி என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் வன்னிப் பக்கம் வந்து எமது மக்கள் படும் அவஸ்தைகளைப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக் கஞ்சிக்கே வழியில்லாது குடும்பங்கள் மண்ணில் பரிதவித்துக் கொண்டிருக்கும்போது, இந்த சபையில் பேசா மடந்தைகளாக எம்மால் இருக்க முடியாது. எனவே எமது கருத்துக்களுக்கு செவிமடுங்கள். எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். எமக்குப் புலி முத்திரை குத்த எண்ணாதீர்கள். எமது நியாயங்களுக்கு எதிர்வாதம் புரியாதீர்கள்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வியாழனன்று சபையில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
புலிகளைப் பாவிக்காது உங்களால் மக்களிடத்தில் சென்று வாக்குக் கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., இராணுவத்திற்கு அதிகமான நிதியினை ஒதுக்கீடு செய்வதன் மூலம் மீண்டுமொரு யுத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாணத்தைப் பொறுத்தமட்டில் யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அடிப்படைப் பிரச்சினைகள் எந்த வகையிலும் தீர்ந்தபாடற்ற நிலைமைகளே தொடர்ந்து வருகின்றன. மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, இளைஞர்கள் உரிய தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவோ முடியாதவர்களாக இருந்து வரும் நிலையில் பொருளாதார ரீதியாகவும் எந்தவித முன்னேற்றமுமின்றிக் காணப்படுகின்றனர்.
இதனை நன்கு உணர்ந்த வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் கூட பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அணுகுவதில் அரசியல்வாதிகள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பது மிகவும் அவசியமாகும். பொதுவாகவே நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏதாவது குரல் எழுப்பும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராகப் புலி முத்திரை குத்தப்படுவது சர்வ சாதாரணமாகத் தொடர்ந்து வருகிறது. இது இன்று நேற்றன்றி கடந்த பல தசாப்த காலமாக நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசப்படாத ஒன்றாகவும், தீர்க்கப்படாத ஒன்றாகவும் மாறிவிடுவதையும் காண முடிகின்றது.
யுத்தம் முடிந்த பின்னரும் ஒருசில அரசியல்வாதிகள் புலிகளின் பேரிலேயே தங்களின் அரசியலை முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுவதுடன், இந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தமிழ் மக்கள் கோருகின்றனர். வெறுமனே சந்தேகத்தின் பேரில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பார்க்கப்பட்டதுடன், பல்வேறு இன்னல்களுக்கும் அவர்கள் ஆளானார்கள். ஆனால், அந்த நிலைமை மீண்டும் தொடர எவரும் இடமளிக்கக் கூடாது.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளையும் சீர்தூக்கிப் பார்த்து அவர்களையும் இணைத்துக் கொண்டு செல்வதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த அபிவிருத்தியை அடையக் கூடியதாக இருக்கும். எனினும் அதனை நன்கு உணராத வகையில் ஒருசில அரசியல்வாதிகளும் கடும் போக்காளர்களும் மற்றும் ஒருசில இனவாத அமைப்புக்களும் சிறுபான்மை மக்களை அடிமைகளைப் போல் நடத்த முற்படுவதாகத் தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவதன் மூலமும் அவர்களின் உரிமைகளை நசுக்குவதன் மூலமும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தங்களை வீரர்களாகக் காட்டிக் கொள்ள முடியும் என ஒருசில பேரினவாத அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இதனால் நாட்டில் இனவாதமே மேலோங்குவதுடன் இனவாத சக்திகளின் செயற்பாடுகளே முன்னிலை பெறுகின்றன.
அரசியல்வாதிகளே மக்களைப் பிரித்தா ளும் தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்து வருவதுடன், அதன் விளைவாக தங்கள் அரசியல் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்கின்றனர். இதனால் இனங்களுக்கி டையே, சமூகங்களுக்கிடையே பிரிவினைகளும் புரிந்துணர்வற்ற தன்மைகளும் மேலோ ங்குகின்றன. இந்த நாடு சுமார் மூன்று தசா ப்த காலம் மிக இருண்ட யுகத்தை சந்தித்தமைக்குக் கூட இந்த இனவாத ரீதியான போக் குகளே அடிப்படைக் காரணமாக இருந்தன என்ற யதார்த்தத்தையும் மறந்துவிடக் கூடாது.
கடந்த கால அனுபவங்களில் இருந்து அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளத் தவறுவார்களேயானால் அது மிகவும் வருந்தத்ததக்க ஒன்றாகவே இருப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு விமோசனத்தையும் அளிக்காத ஒன்றாகவே போய்விடும் என்பதை யும் மனதில் கொள்ள வேண்டும்.
வட பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டிய பாரிய பொறுப்பு அனைத்துத் தரப்பினரையும் சார்ந்ததாகும். வெறுமனே அரசியல் பேதங்கள் காரணமாக அந்த மக்களைப் புறந்தள்ள எவரும் முனையக் கூடாது. அது ஒருபோதும் தார்மீக செயலாகவும் அமைய மாட்டாது.
குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும். அந்தவகையில் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமரவும், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், பொருளாதார ரீதியாக தங்களை அபிவிருத்தி செய்து கொள்ளவும் ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதனைவிடுத்து அவர்கள் மீது அநாவசிய அழுத்தங்கள் அதிகரிக்குமானாலோ அன்றேல் தொடர்ந்தும் அகதிகளைப் போல் வாழும் நிலை நீடித்தாலோ அவர்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தையும் காணமுடியாத நிலைமையே மிஞ்சுவதாக இருக்கும்.
இதனிடையே யுத்தம் முடிந்த கையோடு மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று எதிர்பார்த்த மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றங்களையே சந்தித்து வருகின்றனர். அதிபாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அவர்களின் வாழ்விடங்கள் கடந்த மூன்று தசாப்த காலமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளதுடன், தற்பொழுது அங்குள்ள ஆலயங்கள், வீடுகள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இந்த விதமான சூழல் தமிழ் மக்கள் மனதில் மிகுந்த வேதனையை உருவாக்குவதாகவே அமையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தமது அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழ் மக்கள், இன்று தமது அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டும் பெற முடியாதவர்களாக மாறியுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களும் வகை தொகையின்றி அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ் மக்களின் துயரங்களைத் துடைக்க அனைத்து சக்திகளும் மனிதாபிமான அடிப்படையில் முன்வர வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களின் உள்ளங்களை வெல்லக் கூடியதாக இருப்பதுடன், நாட்டின் உண்மையான புரிந்து ணர்வையும் சகோதர உணர்வையும் கட்டியெழுப்பக் கூடியதாக இருக் கும். அன்றேல் தமிழ் மக்களின் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments
Post a Comment