எமது மக்களின் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கும் ஆயுத ரீதியான போராட்டத்துக்கும் தலைமைதாங்கி வழிநடத்திய மறைந்த நெல்சன் மண்டேலாவை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான மறைந்த நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வு நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றபோது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மகாத்மா காந்தி இந்தியாவின் தலைவர். அவர் சர்வதேச ரீதியாக எவ்வாறு புகழ்பெற்று விளங்குகிறாரோ அதோபோன்று புகழ்பெற்ற ஒருவராக மறைந்த நெல்சன் மண்டோலாவும் திகழ்கிறார்.
இதேபோல் எமது மக்களின் விடுதலைக்காகவும் இவருடைய பாதையைப் பின்பற்றி இவரை வழிகாட்டியாக கொள்ளவேண்டியது கட்டாயமானதாகும். ஏனெனில் சர்வதேச ரீதியில் ஒரு ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் தலைமை தாங்கியவர் என்ற வகையில் நெல்சன் மண்டேலா உலக அங்கீகாரம் பெற்ற ஒப்பற்ற தலைவராகத் திகழ்கின்றார்.
51 நாடுகளுடன் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது இன்று 191 சுதந்திரம்பெற்ற நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகக் காணப்படுகிறது. இந்த அமைப்பினால் நெல்சன் மண்டேலாவுக்கு செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
நெல்சன் மண்டேலா, எமது மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் தனது அனுபவத்தின் அடிப்படையில் எமக்கும் அரசிற்கும் இடையில் ஒரு அரங்காக இருந்து பேச்சுவார்த்தைக்கு உதவுவதற்குத் தயார் என அறிவித்தல் விடுத்திருந்தார். இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் நாங்களும் எமது மண்ணின் விடுதலையைப் பெறுவதற்காக சர்வதேச சந்தர்ப்பங்களை நோக்கி நகர்வுகளை செய்வதற்கு நெல்சன் மண்டேலா போன்றவர்களின் வரலாறுகள் எமக்கு வழிகாட்டியாக துணைநிற்கும்.
அந்த வகையில் நெல்சன் மண்டேலாவுக்கு எமது இதயபூர்வமான விசுவாசம்மிக்க அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கை விசுவாசமான ஒரு ஜனநாயக ரீதியான ஆட்சி நாகரிகம் கொண்ட ஜனநாயகப் பாரம்பரியங்களை ஏற்றுக்கொள்ளாத ஆட்சி என்று போர்க் குற்றம் சுமத்தி, உலகத்தின் விமர்சனங்களும் விவாதங்களும் கருத்தில் எடுக்கப்பட்டு எதிர்காலத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
நாம் இந்த முனைப்போடு இருக்கின்ற நேரத்தில் மண்டேலா போன்ற மிகப் பெரிய வழிகாட்டிக்கு அவரின் வரலாற்றை முழுமையாக தெரிந்தோ அல்லது தெரியாமலோ அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட தென்னாபிரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் நாங்கள் மறைந்த தலைவருக்குச் செய்கின்ற அஞ்சலிக்கும் அவர்கள் செய்கின்ற போலித் தனமான அஞ்சலிக்கும் மாறுபட்ட வேறுபாடு உண்டு என்றார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment