கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெயர் காணிகளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக் ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள் ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கரும்புச் செய்கையை அதிகரித்து சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாடுதழுவிய ரீதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 801 ஹெக்டெயர் காணி இந்தத் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்படவுள்ளது. இதில் வடக்கில் 71ஆயிரத்து 716 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
இதற்கான பூர்வாங்க அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அமைச்சர் லக் ஷ்மன் செனவிரத்னவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இதனையடுத்தே எதிர்வரும் 3ஆம் திகதி இறுதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் கரும்பு பயிர்ச்செய்கைக்காக அரசுக்குச் சொந்தமான 109,801ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்படும். 99 வருட குத்தகையின் அடிப்படையில் இந்தக் காணிகள் அமைச்சினால் கரும்பு உற்பத்திக்காக பகிர்ந்தளிக்கப்படும். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவனியா, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராஜன் குளம், நயினமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஹெக்டெயர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஹெக்டெயர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது.
இதேபோல் மட்டக்களப்பில் செங்கலடி, வவுணதீவு பகுதிகளில் 4869 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அம்பாறையில் 450 ஹெக்டெயர்களும் அநுராதபுரத்தில் 600 ஹெக்டெயர்களும் பதுளையில் 8000 ஹெக்டெயர்களும் மொனராகலையில் 20 ஆயிரத்து 116 ஹெக்யெடர்களும் சுவீகரிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோதிலும் அந்தக் காணிகள் எப்படி யாருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற விபரம் அமைச்சரவைப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் 1 லட்சத்து 9 ஆயிரத்து 801 ஹெக்டெயர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இதில் 71 ஆயிரத்து 716 ஹெக்டெ்யர் காணி வடக்கில் மட்டும் சுவீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை இந்தக் கம்பனி கரும்புச் செய்கைக்காக பகிர்ந்தளிக்கும் என்றே அமைச்சரவைப் பத் திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment