இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்து, உண்மையிலேயே இந்திய அரசாங்கத்தின் கருத்தா என்பது தெரியவில்லை.
இலங்கைத் தமிழர்களின் நலன்களில் அவர்களுடைய வாழ்வுரிமைகளில் இந்திய அரசு உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமேயானால், எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க முடியும். தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. எனவே, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையில் இந்திய அரசு அக்கறை கொண்டிருக்கின்றது என்ற கூற்றானது, இந்திய அராசங்கத்தின் கொள்கையளவிலான கருத்தா, அல்லது செயல்முறை சார்ந்த கருத்தா என்பதற்கு விளக்கம் அவசியமாகியிருக்கின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா நெடுங்காலமாகவே தொடர்பு கொண்டிருக்கின்றது. அத்துடன் தலையீட்டு நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டிருக்கின்றது. இலங்கையின் வரலாற்று வடுவாக அமைந்துவிட்ட 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது, இந்தியா நேரடியாகத் தலையிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் நாட்டிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் கப்பல்களில் ஏற்றிச் சென்றுவிட்டது. தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் சார்பில் இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான கர்ண கடூரமான இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியதுடன், இந்திய அமைதிப்படையை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
இவைகள் இந்திய அரசாங்கத்தின் செயன்முறை சார்ந்த நடவடிக்கைகளாக அன்று அமைந்திருந்தன. நெருக்கடியான காலத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாக அமைந்திருந்தன.
ஆனால், இறுதி யுத்தம் நடைபெற்றபோது, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில், அரசாங்கத்தினால் பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் இராணுவம் நடத்திய அகோர ஷெல் வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றினால் எண்ணற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த நேரம் விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ என்னவோ இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ தளபாடங்களை வழங்கி உதவியிருந்தது. இராணுவ தொழில்நுட்ப அதிகாரிகளையும் நேரடியாக யுத்த களத்திற்கு அனுப்பியிருந்தது என்றுகூட சொல்லப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்காலைச் சூழ்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இலங்கை அரச படைகளினால் கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, அங்கிருந்த பங்கர்களுக்குள் இருந்து, (கடும் யுத்தமோதல்களுக்கு முன்பே, வன்னிப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கென, செய்மதித் தொலைபேசி சேவை வசதியை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். இதன் ஊடாக வெளிநாடுகளில் இருந்த தமது உறவினர்களுடன் வன்னியில் இருந்த மக்கள் தொடர்பு கொண்டு தேவையான பண உதவிகளைப் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பெற்று வந்தார்கள்.) செய்மதித் தொலைபேசியின் ஊடாக தமிழகத் தலைவர்களுடன் தொடர்புகொண்டு தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். தாங்கள் நாளாந்தம் பெரும் எண்ணிக்கையில் மடிந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்து, தங்களுடைய உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவலக்குரல் எழுப்பினார்கள். உயிர்ப்பிச்சை கேட்டிருந்தார்கள். ஆனால், அந்த மக்கள் அப்போது கொண்டிருந்த தமிழக அரசியல் தொடர்புகளின் ஊடாக அவர்களுக்கு விமோசனம் கிடைக்கவே இல்லை.
'உண்மையான அக்கறைதானா?'
பல்வேறு வழிகளிலும் இந்தியாவை தங்களுடைய இரட்சகனாக நோக்கியிருந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கு அந்த நேரத்தில் உதவுவதற்கு இந்தியா முன்வரவே இல்லை. இந்தியா நினைத்திருந்தால், அப்போது தலையிட்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றிருந்த மனிதப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று அந்த மக்கள் உறுதியாக நம்பியிருந்தார்கள். அப்போது இந்தியா மனம் வைத்துச் செயற்பட்டிருந்தால் அங்கு இடம்பெற்ற அநியாயமான உயிரிழப்புக்கள் பலவற்றைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று, எண்ணற்றவர்கள் செத்து மடிந்ததை நேரில் பார்த்து, தெய்வாதீனமாக உயிர் தப்பி வந்துள்ள மக்கள் இப்பொழுதும் கவலையோடு கூறுகின்றார்கள். மரணத்தின் வாயிலிருந்து கொண்டு, தங்களைக் காப்பாற்றுமாறு விடுத்த வேண்டுகோளை இந்தியா ஏற்கவில்லையே என்று அவர்கள் கொண்டிருந்த தார்மீகக் கோபம் இன்னும் ஆறாமல் இருப்பதைக் காண முடிகின்றது. முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் பற்றி பேசும்போது, அவர்களிடம் இந்தக் கோபம் கொப்பளிப்பதை உணரமுடிகின்றது.
பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளின் காரணமாக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான அந்த இறுதி யுத்தத்தில் இந்தியா தலையிட முடியாமல் போயிருக்கலாம். ஏனெனில் இப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் ஷ கூறுவதைப்போன்று, விடுதலைப்புலிகளைக் கொன்றொழிக்க வேண்டும் என்ற அரசியல் தேவை அன்று இந்தியாவுக்கு அதி முக்கியத்துவம் மிக்கதாக, முதன்மை மிக்கதாக இருந்திருக்கலாம்.
ஆனால் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகப் போகின்ற நிலையில் யுத்தத்தில் வெற்றி பெற்ற இலங்கை அரச படைகளின் கைகளில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் என்பவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குக்கூட, இந்தியா இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே, இந்த நிலையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமை தொடர்பில் இந்தியா உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? – என்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றது. ஆனால் அந்த உதவிகள் சரியான முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்திய வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது பொதுவாகவும் தெளிவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். ஆனால், அந்த உதவித்திட்டம் அரசியல் நன்மைகளுக்காக அதிகாரிகளினாலும். அரச சார்பு அரசியல்வாதிகளினாலும் பயன்படுத்தப்படுவதுபற்றி எத்தனையோ முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகளின் கவனத்திற்கும் இது கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் சரியான முறையில் அந்த முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்ற மனக்குறையும் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இலங்கையின் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொதுவான ஒரு தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு அது பல்வேறு வழிகளில் உதவிகள் செய்திருக்கலாம். இத்தகைய உதவிகள் வழங்க வேண்டிய தேவை தவிர்க்கமுடியாதவைகளாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால், யுத்தத்தில் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதையும். பொதுமக்களின் குடியிருப்பு காணிகள் பாதுகாப்புப் படையினரின் தேவைக்காக அபகரிக்கப்படுவதையும் இந்தியா அறிந்தும், அறியாத வகையில் அமைதியாக இருப்பது குறித்தும், கவனம் செலுத்தாமல் இருப்பதுபற்றி, இந்தியா மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அதிருப்தியடைந்திருக்கின்றார்கள்.
இத்தகைய பின்னணியில்தான், இந்தியா இலங்கைத் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கின்றது என்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து வெளிப்பாட்டை உள்ளூர் மக்கள் நோக்குகின்றார்கள்.
கருத்தரங்கத்தில் வெளிப்படுத்திய கருத்து
சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இந்திய அரசின் நிலைப்பாடு என்ற கருத்தரங்கில் கருத்து வெளியிட்டபோதே, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவின் அக்கறையைப் பற்றிய கருத்தை வெளியிட்டிருக்கின்றார். இந்தக் கருத்து, இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தா அல்லது அமைச்சர் சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்தா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தாக இருந்தால், அது, அதிகாரபூர்வமாக புதுடில்லியில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இந்தக் கருத்து வெளியிடப்படவில்லை.
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில், இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது, இந்தியாவே கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் இருந்து பலரும் ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். அப்போது, இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயற்படும் என்று கூறியிருந்தது. பொதுநலவாய மாநாட்டிற்குப் போவதா விடுவதா என்பது, அப்போது, இந்திய அரசாங்கத்திற்குக் குறிப்பாக இந்தியப் பிரதமருக்கு சிக்கல் நிறைந்த பிரச்சினையாக மாறியிருந்தது. இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இறுதியில் இலங்கைத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த தரப்பினருடைய கருத்தையொட்டி, பிரதமர் மாநாட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்.
ஆயினும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனும் இத்தகைய ஒரு சிக்கலான நிலையில் இருந்து, மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவெடுத்து, கொழும்புக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் மூலம், மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, ஜனநாயக உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை வெளியில் கொண்டு வந்ததுடன், போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் வெளிப்படையான – நியாயமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதைக் கர்ண கடூரமாக வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் இலங்கை அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு நேரடியாகவே, இதற்காக ஒரு கால எல்லையையும் நிர்ணயித்து அதற்குள் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையேல் ஐ.நா.வின் மனித உரிமை பேரவையுடன் இணைந்து சர்வதேச விசாரணையொன்றுக்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கையும் செய்திருந்தார்.
பிரிட்டிஷ் பிரதமருடைய இலங்கை – யாழ். விஜயமும் இலங்கை அரசுக்கான அவருடைய பகிரங்கமான எச்சரிக்கையும், இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம், இந்திய அரசாங்கத்தின் பிடியில் இருந்து மேற்கத்தைய நாடுகளின் பிடிக்கு நழுவிச் செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. ஆனால் இலங்கை இனப்பிரச்சினை மீதான இந்தியாவின் பிடி அவ்வாறு கைநழுவிப் போகவில்லை என்று இந்திய அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனப்பிரச்சினையின் முக்கிய அம்சமாகவே இறுதிப்போர் நடைபெற்றிருந்தது. அந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் காரணமாக இலங்கை அரசு மீது போர்க்குற்றத்தை பிரிட்டிஷ் பிரதமர் சுமத்தியிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான தனது அக்கறையையும், அது தொடர்பிலான கொள்கையையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய கருத்துக்கள் அப்போது வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக இப்போது மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இலங்கைத் தமிழ் மக்கள் மீதான அக்கறையைப் பற்றி கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து, சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வெளிப்படையான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலைதான் என்றும் அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கும், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் பாடுபடும் என்றும் அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கின்றார்.
இந்திய அரசாங்கத்தின் தரப்பில், முதற் தடவையாக, இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற அழுத்தமான கருத்து வெளிவந்திருக்கின்றது. இந்தக் கருத்தானது, இலங்கை இந்திய நாடுகளில் மட்டுமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் பலருடைய அவதானத்தையும் பற்றிப் பிடித்து இழுத்திருக்கின்றது. அத்துடன் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் (போர்க்குற்றச்சாட்டுக்கள்), உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதும் முக்கிய விடயமாக நோக்கப்படுகின்றது.
மத்திய அமைச்சர் ப..சிதம்பரம், இந்திய அரசாங்கத்தின் கருத்து என்ற வகையில் தொனி செய்திருக்கின்ற இந்தக் கருத்துக்கள், இலங்கை மீதான இந்தியாவின் பிடி கைநழுவிச் செல்லவில்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதாக அவதானிகள் கருதுகின்றார்கள். இத்தகைய கருத்துக்கள் உருவாகுவதற்காகவே இவ்வாறு அழுத்தமான கருத்துக்களை அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டிருக்கலாமோ என்ற கேள்வியும் பலருடைய மனங்களில் எழுந்திருக்கின்றது.
இலங்கை மீதான பிடியா, இனப்பிரச்சினை மீதான பிடியா?
யாழ்ப்பாணத்தில், கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஒப்பரேஷன் லிபரரேஷன் நடவடிக்கை நடைபெற்றபோது, இந்தியா நேரடியாகத் தலையிட்டு அங்கு இடம்பெற்ற உயிர்ச்சேதங்களைத் தடுத்து நிறுத்தியதுடன், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைச் செய்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அதிகாரப் பரவலாக்கலுக்காக மாகாண சபை முறைமையைக் கொண்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் ஏற்பட்டிருந்த இராணுவ அரசியல் மாற்றங்களின்போது, பாரதத்தையே பெருமளவில் பாதித்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைச்சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் கையைச் சுட்டுக்கொண்ட நிலையில் இந்திய அரசாங்கத்தை இலங்கை விவகாரங்களில் இருந்து விலகியிருக்கச் செய்திருந்தது என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள். இந்த நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியா அதன் பின்னர், ஒரு மென்போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது.
போருக்குப் பின்னரான இலங்கை விவகாரங்கள் குறிப்பாக மீள்கட்டமைப்பு, பொருளாதாரச் செயற்பாடுகள் என்பவற்றில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திலும் பார்க்க இலங்கை மீதான பிடியை நழுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு எழுந்திருக்கின்றது. பிராந்திய ரீதியிலான பொருளாதார, இராணுவ. அரசியல் ரீதியான தேவைகள் இதில் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
எனவே, இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா, இலங்கை மீது சிலவேளைகளில் கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கின்ற போதிலும், இலங்கை மீதான தனது பிடியைத் தளரவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இதனால்தான் 'பாம்பை அடிக்கவும் வேண்டும், அதற்கு நோகவும் கூடாது'
என்ற வகையில் மென்போக்கிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அயல் நாடு தொடக்கம், பிராந்திய, மற்றும் ஐ.நா. சபை மட்டம் வரையிலான செயற்பாடுகளிலும், இத்தகைய நடவடிக்கையையே இந்தியா மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தப் பின்னணியில் நோக்கும்போது, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய கருத்துக்கள் கொள்கை அளவிலான கருத்துக்களாகவே கருத வேண்டியிருக்கின்றது. செயல் ரீதியான கருத்துக்களாகத் தென்படவில்லை என்றே குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
இந்தியாவின் மென்போக்கு செயற்பாட்டில், அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் செயல்வடிவம் பெறுமாக இருந்தால், பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வழிகளைத் திறந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
No comments
Post a Comment