எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்து சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் விசாரணைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள நீதிமன்றம், அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பான நேற்றைய நீதிமன்ற விசாரணை அறிக்கைகளை அதிகார சபையின் தலைவிக்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் வே.இராமகமலன் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்ததாவது:
எட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த தனது மகன் அங்கு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்று தாயார் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டையடுத்து, அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்த பொலிசார், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்திருந்த நேரம். அந்த விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூல அறிக்கையையும், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாகவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் நீதிமன்றத்திற்கு உறுதியளித்த வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அத்துடன், சந்தேக நபரை அவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுமில்லை. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக ஆவணங்களை அங்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடைய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், பிழையான முன்னுதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுவர்களை விசாரணை செய்து அந்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமலும், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமலும் வழக்கு விசாரணை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதி இராமகமலன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை அந்த சபையின் தலைவி அறிந்து கொள்ளும் வகையில் நீதிமன்ற விசாரணை அறிக்கையை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ள போதிலும், நேற்று நடைபெற்ற விசாரணைகளில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை என்று தெரியவந்துள்ளதாகத் தெரிவித்து, சந்தேக நபராகிய எட்டம்பகஸ்கட பௌத்த பிக்குவையும், இரண்டாவது சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்த அவருடைய உதவியாளர் ஒருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் நிர்வாகியான கல்யாண திஸ்ஸ தேரர் சார்பில் அனுராதரபுரத்தில் இருந்து வந்து ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இந்த வழக்கு தொடர்பான முடிந்துள்ளது, சந்தேக நபருடைய இல்லத்தில் இருந்த சிறுவர்கள் எல்லோரும் களுத்துறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதனால் சாட்சிகளை அவர் குறுக்கீடு செய்யமுடியாது எனவே, அவரை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினர்.
ஆயினும், இந்த வழக்கு தொடர்பில் மேலும் பல சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளனர். அந்த விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. இது தொடர்பில் இன்னும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளார்கள். எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில இருந்தபோது, பலதரப்பட்ட வழிகளில் அந்த சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள். வேலைகள் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். பிரதான சந்தேக நபரினாலும், அவருடைய உதவியாளர்களினாலும் பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக் கின்றார்கள். இந்த நிலையில் விசாரணை கள்
முற்றுப் பெறாமல் சந்தேக நபருக்குப் பிணை வழங்கக் கூடாது என பாதிக்கப்பட் டுள்ள சிறுவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான கே.எஸ்.ரட்னவேல், இராஜகுலேந்திரன், புவிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து சந்தேக நபராகிய மதகுருவையும் மற்றவரை யும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments
Post a Comment