நாட்டில் இந்துக் கோயில்களையும் தெய்வச் சிலைகளையும் சேதப்படுத்தும் இனியொரு சம்பவம் இடம்பெறுமானால் இந்து மக்களை ஓரணியில் திரட்டி நாடு தழுவிய ரீதியில் புரட்சிகரமான போராட்டத்தை முன்னெடுப்போம். இதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி தலைமைத்துவத்தை வழங்கும் என அதன் உதவிப் பொதுச் செயலாளர் சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் சர்வதேச இந்து அமைப்புக்களிடம் கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்தவும் பின் நிற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் பொதுவசதிகள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவருமான சண். குகவரதன் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கொழும்பில் பூமாரி அம்மன் கோயில் இடிக்கப்பட்டது, தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், யாழ்ப்பாணத்தில் விநாயகர், அம்மன் என மூன்று கோயில்களும் கிழக்கிலும் கோயில் சிலைகள், சொத்துக்கள் திருடப்பட்டன. இவ்வாறு கோயில் உடைப்பு கலாசாரமாக மாறி இறுதியாக ஹாலி – எலவில் காளியம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
பொறுமைக்கும் எல்லை உண்டு. தான் சார்ந்த சமூகத்துக்கு அழிவு ஏற்படுவதை எந்தவொரு மதக் குழுமமும் பார்த்துக் கொண்டிருக்காது.
இலங்கைக்கு பௌத்த மதம் வருவதற்கு முன்பு, சிவ வழிபாடுகள் தான் காணப்பட்டது. இராவண மன்னன் ஒரு சிவ பக்தன். இதன் காரணமாக இலங்கைக்கு 'சிவபூமி' என்ற பெயர் வந்தது. புராணக் கதைகளில் இலங்கையின் சிவ வழிபாடு தொடர்பில் எடுத்தியம்பப்பட்டுள்ளன. திருகோணமலைக்கு வந்த அகஷ்தியர்கள் பஞ்ச ஈஸ்வரங்களில் வழிபாடு செய்துள்ளனர்.
திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் நாயன்மார்களினால் பாடல் பெற்ற திருத்தலங்களாகும். சிவபுராணம், கந்தபுராணம், மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் கதைகளோடும் இலங்கைக்கு தொடர்புபட்டுள்ளது.
உதாரணமாக, இராவணன் சீதையைத் தங்க வைத்த இடம் இன்னும் 'சீதா எலிய' என்று அழைக்கப்படுகின்றது. அதே போன்று இராவண எல்ல என்ற பெயர்களும் உண்டு.
வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தில் இங்கிருந்த மக்கள் நாகத்தையும் மரங்களையுமே வழிபட்டு வந்துள்ளனர். இதற்குச் சிறந்த உதாரணமாக இன்றும் நைனாதீவு, திருக்கேதீஸ்வரம் சான்று பகர்கின்றது.
இது மகாவம்சத்திலும் பதியப்பட்டுள்ளது. முன்னேச்சரமும் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். மட்டுமன்றி விநாயகர், இராமர் தெய்வ வழிபாடு செய்தது, இராவணனை வதம் செய்த இராமனின் பிரமஹஷ்தி தோஷம் நீங்கியதும் முன்னேச்சரத்திலே ஆகும்.
இவையெல்லாம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பானதாகும். வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொள்ளுவோமானால், பண்டுகாயப மன்னன் அநுராதபுர இராட்சியத்தில் சிவனுக்குக் கோயில்களை அமைத்தான். எனவே, பண்டுகாபய மன்னன் (மூத்த சிவன்) என அழைப்பட்டார்.
சோழ மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட காலத்திலும் சிவன், விஷ்ணு கோயில்கள் கட்டப்பட்ட வரலாறு உள்ளது. முன்னேச்சரத்தை நான்காம் பராக்கிரமபாகு, ஐந்தாம் பராக்கிரமபாகு அரசர்கள் பராமரித்தார்கள். கோயில்களுக்காக வயல்களை வழங்கினார்கள்.
இது இலங்கையின் இந்து மதத்தின் புராண கால வரலாற்றுக் காலத் தொடர்புகள் ஆகும். இன்னும் பௌத்த விகாரைகளில் அம்மன், முருகன், விநாயகர் என இந்துக் கடவுள்களுக்கு தனியான கோயில்கள் கட்டப்பட்டு சிங்கள மக்கள் வழிபடுகின்றார்கள்.
நவகமுவவில் (பத்தினி) தோவாலயம் அதாவது கண்ணகிக்கென்று தனித் தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? பௌத்தர்களின் உயரிய புனிதஸ்தலமான கண்டித் தலதா மாளிகையிலும் விஷ்ணு, நாக கோயில்கள் உள்ளன. இவ்வாறு புராண காலம், வரலாற்றுக் காலம், கற்காலம் என இந்து மதத்திற்கு என இலங்கையில் ஒரு வரலாறு உள்ளது. இந்தப் பிணைப்பு தற்போது இடம்பெறும் கோயில்கள், சிலைகள் உடைப்பால் விரிசல் அடைந்துவிடக்கூடாது. இந்துக் கடவுள்களின் சாபத்துக்கு ஆளாவது என்பது ஒரு மனிதனின் கடைசிக் காலம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் என சண். குகவரதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments
Post a Comment