நாட்டில் இந்து ஆலயங்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பதுளை ஹாலிஎல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மன்சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. மகா காளியம்மன் சிலை உடைக்கப்பட்டமை பதுளையில் மட்டுமல்ல மலையகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
150 வருடகால பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காளியம்மனை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக பூஜித்து வந்தனர். இந்த நிலையில் சில விஷம சக்திகள் இந்த காளி சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளன. அண்மைக்காலத்தில் இந்துக்கோவில்கள் இடிக்கப்படுகின்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
கடந்த மாதம் தம்புள்ளையிலுள்ள அம்மன் கோவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இடிக்கப்பட்டிருந்தது. தம்புள்ளை புனித பூமிக்குள் இந்தக் கோவில் வருவதனால் அந்தக் கோவிலை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இந்தக் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. கோவிலை இடிப்பதற்கு முன்னர் ஆலயத்திலிருந்த அம்மன் சிலை சேதமாக்கப்பட்டிருந்தது. இதன் பின்னரே கோவில் நிர்மூலமாக்கப்பட்டது. கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பூமாரி அம்மன் ஆலயமும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இடித்து நிர்மூலமாக்கப்பட்டது. இந்த இரண்டு ஆலயங்கள் இடிக்கப்பட்டபோதிலும் இதுவரை அந்த ஆலயங்களை வேறு இடங்களில் அமைப்பதற்கு மாற்று இடங்கள் கூட வழங்கப்படவில்லை. விசேட தேவைக்காக ஆலயமொன்று இடிக்கப்படுமானால் அதற்கு முன்னரே அந்த ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டு ஆலயங்களுக்கும் மாற்று இடங்கள் வழங்கப்படவேயில்லை.
தற்போது பதுளை ஹாலிஎல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்திலும் அம்மன் சிலை உடைக்கப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தை அங்கிருந்து அகற்றும் நோக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்தநிலையில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதையடுத்து ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், அந்த மாகாணத்தின் முதலமைச்சர் சுசிந்திர ராஜபக் ஷ உட்பட பலருடனும் கலந்துரையாடி இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சிலையை மீளவும் அங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரியிருக்கின்றார்.
இதேபோல் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஷும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்து உடைக்கப்பட்ட சிலையினை பார்வையிட்டதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
மலையகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இரத்தினபுரி மாவட்ட கொலன்ன பொலிஸ் பிரிவிலும் தெனியாய பொலிஸ் பிரிவிலும் நான்கு கோயில்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இதேபோல் கல்கிஸை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் கடந்த 2ஆம் திகதி அதிகாலை உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது. இத்தகைய கொள்ளைகள் திட்டமிடப்பட்ட வகையில் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகமும் தற்போது எற்பட்டுள்ளது.
மலையகம், கொழும்பில் நிலைமை இவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கிலும் இத்தகைய நிலை தொடர்ந்து வருகின்றது. யுத்தத்தின்போது பெருமளவான ஆலயங்கள் வடக்கு, கிழக்கில் சேதமாக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னரும் ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கும் செயற்பாடு தொடர்ந்து வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
அண்மையில் வலிகாமம் வடக்கு அதிபாதுகாப்பு வலயப் பகுதியில் 3 ஆலயங்கள் படையினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. காங்கேசன்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த அம்மன் கோவில், பிள்ளையார் கோவில், நாகதம்பிரான் ஆலயம் என்பன இடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவமானது இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதி பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை விடுவிக்குமாறும் அங்கு பொதுமக்களை மீள குடியமர்த்த அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆலயங்கள் இடிக்கப்பட்டமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி அகில இலங்கை இந்துமாமன்றம் அறிக்கையொன்றினையும் விடுத்திருந்தது. அதில் இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சுயாதீன குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கோரிக்கை தொடர்பிலும் இதுவரை சாதகமான பதில்கள் எதுவும் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.
கடந்த இரு வருடங்களாக முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டன. தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்த இந்த தாக்குதலானது கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தொடர்ந்து இடம்பெற்றது. இதுவரை 25 பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுபான்மை இனத்தவர்கள் மீது திட்டமிட்டவகையில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட முயலும் இனவாதக் கும்பல் இவ்வாறு இந்து, முஸ்லிம் மக்களின் ஆலயங்கள் மீதும் தாக்குதலை முன்னெடுத்து வருவது நாட்டில் மதவாத வன்முறையை வளர்ப்பதற்கான செயற்பாடாக அமையலாம் என்ற அச்சமும் தற்போது தோன்றியுள்ளது.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதையடுத்து பெரும் முறுகல் நிலை நாட்டில் ஏற்பட்டிருந்தது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல்மீது தாக்குதல் இடம்பெற்றதையடுத்து அது பெரும் வன்முறையாக வெடித்திருந்தது. 3 தினங்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இந்த வன்முறையை கட்டுப்படுத்தவேண்டிய சூழல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருந்தது.
இதேபோல் தற்போது இந்து ஆலயங்கள் விஷமிகளால் தாக்கப்பட்டு வருகின்ற சம்பவமானது இத்தகைய வன்முறைக்கு தூபமிடலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. நேற்று முன்தினம் அதிகாலை பதுளை ஹாலிஎல உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மன்சிலை உடைக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் ஆத்திரம் கொண்டனர். இத்தகைய நிலை அங்கு தொடருமானால் அது வன்முறையாக வெடிக்கும் சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. இதனை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் அரச தரப்பினருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
உடைக்கப்பட்ட சிலையை புனரமைப்பதுடன் இந்த ஆலயத்தை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறியிருக்கின்றார். இவ்வாறு அந்த ஆலயத்தை புனரமைப்பதன் மூலமே அப்பகுதியில் இந்து மக்கள் மத்தியில் மன ஆறுதலை ஏற்படுத்த முடியும்.
இந்து கோவில்களும் முஸ்லிம் பள்ளிவாசல்களும் திட்டமிட்டவகையில் சில விஷம சக்திகளால் தாக்கப்படுகின்றமை குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் மத முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலில் குளிர்காய சில சக்திகள் முயலலாம். இது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையாகக் கூட இருக்கலாம். எனவே இந்த விடயத்தில் அரசாங்கமானது உரிய விசாரணைகளை நடத்த வேண்டும்.
அத்துடன் இந்து ஆலயங்களை தகர்க்கும் செயற்பாடுகளையும் கைவிடவேண்டியது அவசியமானதாகும். அதிபாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்கள் இடிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல. இதேபோல் தம்புள்ள அம்மன் ஆலயம் மற்றும் கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் ஆலயம் ஆகியன இடிக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இந்து ஆலயங்கள் இடிக்கப்படவேண்டுமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஒரு முதுமொழியாகும். இதற்கிணங்க நாட்டில் ஆலயங்கள் அமைந்திருக்க வேண்டியது அவசியம். எனவே எதிர்காலத்திலாவது இந்துமக்களின் மனதைப் புண்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறாது தடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments
Post a Comment