கிழக்கு பல்கலைக்கழகத்தில் நான் உபவேந்தராக பதவியேற்றதிலிருந்து பத்து ரூபாவேனும் ஊழல் மோசடி செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் எனது உபவேந்தர் பதவியினை உடனடியாக இராஜினாமா செய்துவிடுவேன் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னண் கோபிந்தராஜா தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் உயர் கல்வி அமைச்சின் வரவு- செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெறுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த ஆணைக்குழு நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டதாக நேற்று முன்தினம் வீரகேசரி பத்திரிகையிலும் இணையத்தளங்களிலும் வெளியான செய்தியினைத் தொடர்ந்து உபவேந்தரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றபோதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,நான் இப்பல்கலைக்கழகத்திற்கு வந்த போது பல்வேறுபட்ட பிரச்சினைகளும் பின்னடைவுகளும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் படிப்படியாக நிவர்த்தி செய்து மாணவர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கற்றுக்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
சுமார் 2000 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான நிதியினைப் பெற்று இப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக செலவு செய்து வருகின்றோம்.இது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சுமார் 5000 மில்லியன் ரூபாவினைப் பெற்று பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியைப் பயன்படுத்த திட்டங்களை வரைந்து கொண்டிருக்கின்றோம். பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ளது என எல்லோராலும் பேசப்படுகின்ற இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பல்கலைக்கழகத்தின்மீது சேறு பூசுவதாக அமைந்த கருத்து மிகுந்த வேதனையினை அளிக்கிறது.
பல்கலைக்கழகத்தின் சிறந்த கட்டமைப்பினைக் குழப்பிவிட்டு கடந்த காலங்களைப்போல் செயற்படாமல் இருந்து கொண்டு ஊதியத்தினைப் பெற எத்தனிக்கும் சில நாசகார செயற்பாட்டாளர்களின் சதி வலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிக்கியிருப்பது கண்டு கவலைப்பட வேண்டியுள்ளது. பல்கலைக்கழக அபிவிருத்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் உண்மைக்குப் புறம்பான விடயங்களைச் சொல்லி சமூகத்தின் கல்வி நிறுவனமான பல்கலைக்கழகத்திற்கு சேறு பூச விளைவது கவலையளிக்கின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதுவரை இருந்த பல கட்டமைப்புகளை மாற்றம் செய்திருக்கிறோம்.கல்வி நடவடிக்கைகள்,பெளதீக வளங்கள் போன்றன பாரிய மாற்றம் பெற்றிருக்கின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சேவையாற்றுபவர்கள் மனம் விரும்பி சேவையாற்றும் வகையிலும் கற்கின்ற மாணவர்கள் துறைசார் பட்டங்களை குறிப்பிட்ட கால எல்லைக்குள் காலதாமதமின்றி பட்டங்களைப் பெற்று விரைவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக்கூடியதாய் வடிவமைத்திருக்கின்றோம்.
பல்கலைக்கழகத்திற்குள் மோசடி செய்து வாழ்க்கை நடத்த வேண்டிய தேவை எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. எமது பிராந்திய மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவுமே நான் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்து கடமைகளை பொறுப்பேற்றேன்.
எனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் கடந்த காலத்தில் பெற்று வந்த பல இலட்சம் ரூபா ஊதியத்தினைக்கூட துச்சமென உதறித் தள்ளிவிட்டே இங்கு நான் வந்தேன்.
கடந்த 30 வருட யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பின் தங்கியிருந்த எமது பல்கலைக்கழகமானது கடந்த சில வருடங்களாக எனது நிருவாகத்தின் கீழ் மிகவும் சிறப்பான முறையில் அபிவிருத்தியடைந்து வருவது யாவரும் அறிந்ததே. எமது பல்கலைக்கழக அபிவிருத்தியில் அரசாங்கமும் உயர்கல்வி அமைச்சரும் பாரபட்சமின்றி வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரின் உரையானது பல்கலைக்கழக அபிவிருத்தியினை குழப்புவதாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திகளை திட்டமிட்டு குழப்புவதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில விரிவுரையாளர்களின் பொய்ப் பிரசாரங்களை நம்பிக்கொண்டு அது விடயமாக ஆராயாமல் பாராளுமன்றத்தில் உரையாற்றியமை கவலை தருகின்றது. கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்திகள் சம்பந்தமாகவோ அல்லது நிருவாக செயற்பாடுகள் சம்பந்தமாகவோ சந்தேகங்கள் இருந்திருந்தால் பல்கலைக்கழக நிருவாகத்தினரோடு தொடர்பு கொண்டு ஆராய்ந்த பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்க வேண்டும்.
மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று அரசாங்கத்திற்கு எதிரான அறிக்கைகளை தமிழ் பத்திரிகைகளுக்கு மாத்திரம் விடுத்துக்கொண்டு பின்கதவு வழியாக அரசாங்க அமைச்சர்களை அணுகி தங்கள் பிள்ளைகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு விளங்கியிருப்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நியமனங்கள் அனைத்தும் பக்கச்சார்பற்ற முறையில் திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே.
எனக்கு முன்னர் கடமையாற்றிய ஆறு உபவேந்தர்களும் தமக்கான பதவிக்காலம் முடியும் முன்பு இங்குள்ள சிலரால் திட்டமிட்டு துரத்தப்பட்ட வரலாறுகளை மட்டக்களப்பு மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள். அந்த வகையில் ஏழாவது உபவேந்தரான என்னையும் எனது பதவிக்காலம் முடியும் முன் துரத்திவிட திட்டமிட்டு செயற்படும் சில தீய சக்திகளுடன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் இணைந்துள்ளமை மிகுந்த வேதனையளிக்கின்றது. கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட கட்டட வேலைகள் சம்பந்தமாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உபவேந்தர்கள் என்ற வகையில் எனக்குள்ளது.
கடந்த வருடத்தில் ஜூலை மாதத்தில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவினால் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டட வேலைகள் இப்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இதற்கான இரண்டு லோட் மண் மாத்திரமே வந்து சேர்ந்துள்ளது என்று கூறியிருப்பது மக்கள் மத்தியில் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. கட்டட ஒப்பந்தக்காரர்களுக்கு வேலைகளை ஒப்படைப்பதற்கு முன்பு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசங்கள் தேவைப்படுவது யாவரும் அறிந்த விடயமே. இவ் அடிப்படை நியதிகளைக்கூட விளங்கிக்கொள்ள முடியாமல் ஒரு சில விரிவுரையாளர்கள் மூலமாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வழிநடத்தப்பட்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்திலும் திருகோணமலை வளாகத்திலும் சுவாமி விபுலானந்த கற்கை நிறுவகம் மற்றும் மருத்துவ பீடத்திலும் நடைபெற்று வருகின்ற பாரிய அபிவிருத்திகளை பாராளுமன்ற உறுப்பினர் ஒரு முறையேனும் சென்று பார்ப்பாரேயானால் இது போன்ற தவறான உரையினை பாராளுமன்றத்தில் நிகழ்த்தியிருக்கமாட்டார்.
கிழக்குபல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்று வந்த ஊழல்கள் அனைத்தும் எமது நிருவாகத்தின் கீழ் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டு கல்வி சார் நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
இதுபோன்ற சேறு பூசுகின்ற உரைகளோ, அறிக்கைகளோ எமது பல்கலைக்கழக அபிவிருத்திக்கான பயணத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தினை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக மாற்றி மாணவர்களுக்கும் எமது பிராந்தியத்திற்கும் சிறந்த சேவைகளை வழங்கும் எமது உறுதியான நோக்கில் எவ் இடையூறுகள் வந்த போதிலும் தளராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழ கத்தின் பதிவாளர் கே. மகேசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி என்.லோகேஸ்வரன், செளக்கிய பராமரிப்பு பீடாதிபதி கலாநிதி ரி.சுந்தரேசன், கலைப் பீடாதிபதி கலாநிதி கே.இரா ஜேந்திரம், விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். சுத ர்சன், விஞ்ஞான பீட பதில் பீடா திபதி கலாநிதி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments
Post a Comment