பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது இத்தாலி பயணத்தின் போது விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்துள்ளதாக அந்நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை சர்வதேச தீவிரவாதி என கருதப்பட்டு வரும் ஒருவரையே பாதுகாப்புச் செயலாளர் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாலிய அரச புலனாய்வுப் பிரிவின் சர்வதேச தீவிரவாத தடுப்பு திட்டமான D.I.G.O.S. என்ற திட்டம் 2008 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி அந்த நாட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் 35 முக்கியஸ்தர்களை ஒரே நேரத்தில் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த 33 பேர் பல இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர். எனினும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது இத்தாலி விஜயத்தின் போது இத்தாலி புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய முடியாது போன புலிகளின் முக்கியஸ்தரை சந்தித்துள்ளமை அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு உறுதியாகியுள்ளது.
கோத்தபாய தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ள அந்த முன்னாள் முக்கியஸ்தர் கோத்தபாயவுடன் ரகசியமான பேச்சுக்களை நடத்தியுள்ளார். எனினும் என்ன பேசப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை. அவர் கோத்தபாயவை சந்தித்து பாதுகாப்பு கெமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மூன்று முக்கியஸ்தர்களிடம் இருக்கும் பல மில்லியன் பெறுமதியான வங்கிக் கணக்கில் மேற்படி நபரும் இணை வைப்பீட்டாளர் என கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கை வைத்துள்ள மூன்று பேரும் வெவ்வேறாக பிரிந்துள்ளனர். அத்துடன் இந்த வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியவந்துள்ளதால் எவரும் பணத்தை எடுக்க முன்வரவில்லை எனப் பேசப்படுகிறது.
இதனிடையே இத்தாலி சென்றிருந்த பாதுகாப்புச் செயலாளரை சென்ட் மரினோ நாட்டின் ரகசிய வங்கி ஒன்றின் வங்கியாளர்கள் சிலர், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
இத்தாலி நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கோத்தபாய சந்தித்தமை தொடர்பில் இத்தாலிய புலனாய்வுப் பிரிவினர் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அரசசார்பற்ற சிங்கள இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment