இலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள் 17 பேர் 2006ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, இலங்கை பாதுகாப்புப் படைகள் மீது குற்றம் சுமத்தியிருக்கும் அந்த நிறுவனம், இந்த விவகாரத்தில் தமக்குக் கிடைத்த சாட்சியங்களை, சர்வதேச விசாரணை நடந்தால் , கையளிக்கத்
தயாராக இருப்பதாகக் கூறுகிறது. ஏசிப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்டு 4ம்
தேதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் , இவர்களைச் சுட்டவர்கள்
இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள்
இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த நிறுவனம் கூறியிருந்தது. இந்த அறிக்கை பற்றி பிபிசி தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த, இந்த
நிறுவனத்தில் மனித நேய செயல்பாட்டு ஆலோசகர், பாலின் செட்குவிட்டி,
இந்த விஷயத்தில் தங்களுக்கு கிடைத்த சாட்சியங்கள் மிகவும் எளிமையானவை, நேரானவை, இவைகளை முழுமையாக வெளியிட்டால் அது யார் இந்த சாட்சியங்களை தந்தார்கள் என்ற அடையாளத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் , அது அவர்களுக்கு பாதுகாப்புத் தராது என்று அஞ்சுகிறோம்.எனவேதான் தெளிவாக மேற்கோள் காட்டத் தேவையில்லாத எந்த ஒரு வாக்குமூலத்தையும் நாங்கள் நேரடியாக மேற்கோள் காட்டவில்லை. மாறாக , ஏற்கனவே பொது வெளியில் இருக்கும்
வாக்குமூலங்களை, இந்த வாக்குமூலங்களை வைத்து சரி பார்த்துக்
கொண்டிருக்கிறோம். இது யார் எங்களுக்கு தகவலைத் தந்தவர்கள்
என்பதை வெளியிடாமல் எங்களுக்கு வந்த தகவலை சரிபார்த்துக்கொள்ள கிடைத்திருக்கும் ஒரு வழி என்றார். இலங்கையிலேயே ஒரு உள்நாட்டு விசாரணை மூலம் இந்தப்
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்ற முடிவுக்கு ஏன் வந்தீர்கள்
என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் , "பல ஆண்டுகளாக இலங்கை அரசுடன்
நாங்கள் ஒத்துழைத்து விட்டோம். தற்போது உள்நாட்டில் நடத்தப்படக்கூடிய
எந்த ஒரு விசாரணையும் , சாட்சி அளிப்பவர்களை பாதுக்கவும்,
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தீர்வு வழங்கவும் உதவ, போதிய அளவுக்கு சுயாதீனமாகவும், பக்கசார்பற்ற முறையிலும் நடத்தப்படும் என்று நினைக்கவில்லை. எனவேதான் நாங்கள் ஒரு சர்வதேச விசாரணையைக் கோருகிறோம். இலங்கை ஆட்சியாளர்களுடன் பல ஆண்டுகள் ஒத்துழைத்த பின்னரே இந்த முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்", என்றார்.
No comments
Post a Comment