மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட உண்மைகளை வெளியிடக் கூடாது. அவர் கொலை செய்யப்பட்டதற்குரிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று தொலைபேசி வழியாக சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் உரிய அதிகாரிகளினதும், பொலிசாரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். ஆயினும் அச்சுறுத்தல்கள் ஓயவில்லை. அப்படியிருந்தும், அவர் மருத்துவ பரிசோதனையில் தான் கண்டவற்றை அறிக்கை வடிவில் தெரிவித்திருந்தார்.
அரசியல் என்பது பொதுமக்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுமக்களுடைய தேவைகள், குறைகள், நிறைகளில் மையம் கொண்டிருப்பது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இருந்து விலகியிருந்து அரசியல் நடத்துகின்ற ஒரு போக்கு தலையெடுத்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
பொதுவாகவே அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் தேர்தல் காலத்தில் மட்டுமே கிராமப்புறங்களுக்குப் படையெடுப்பார்கள். வாக்கு வேட்டையில் ஈடுபடுவார்கள். கும்பிடுவார்கள். கைநிறைய, கையில் அகப்பட்டதை அள்ளி அள்ளித் தருவார்கள். வாயில் வந்தவற்றையும், நிலைமைகளுக்கு ஏற்ற வகையிலும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுவார்கள். தலையில் அடிக்காத குறையாகவும், கற்பூரம் கொளுத்தாத வகையிலும், இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று சத்தியம் செய்வார்கள். தேர்தல் முடிந்த பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களையும் காணக்கிடைக்காது. தோல்வியடைந்தவர்களையும் காணக் கிடைக்காது. பொதுமக்களிடமிருந்து இத்தகைய முறைப்பாடுகள், குறைகள் தெரிவிக்கப்படுவதும் வழக்கம். இது பற்றி அரசியல்வாதிகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவர்கள் தேர்தல் வரும்போது மீண்டும் வருவார்கள். வழமையான வாக்குறுதிகளோடு வாக்கு வேட்டையில் ஈடுபடுவார்கள்.
இதற்கு மாறாக பொதுமக்களிடமிருந்து விலகியிருந்து அரசியல் செய்ய முடியும் என்ற வகையில் ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் ரெக்சியன் கொலை செய்யப்பட்டதையடுத்து, நெடுந்தீவில் உள்ள தனது அலுவலகத்தை அந்தக் கட்சி மூடியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தீவகப்பகுதிகளில் உள்ள அலுவலகங்களும், கிராமப்புறங்களில் உள்ள அலுவலகங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
டேனியல் ரெக்சியனின் கொலை
பொதுமக்கள் மத்தியில் நெருங்கியிருந்து செயற்பட்டு வந்த ஈ.பி.டி.பி. கடசியினர், கிராமப்புறங்களில் உள்ள தமது அலுவலகங்களை மூடிவிடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்ததாகக் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப, நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் ரெக்சியன் கொல்லப்பட்டதையடுத்து, அந்த நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேனியல் ரெக்சியன் ஈ.பி.டி.பி. கட்சியின் முக்கிய மூத்த உறுப்பினர். ஆயுதப் போராட்ட காலத்தில் இருந்து அந்த அணியின் செயற்பாடுகளில் கூடிய பங்களிப்பு செய்து வந்தவர் என கூறப்படுகின்றது. அத்துடன் ஈ.பி.டி.பி.யின் அரசியல் செயற்பாடுகளிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகளில் பல வழிகளிலும், பல நிலைகளிலும் முக்கியத்துவம் பெற்றிருந்த டேனியல் ரெக்சியன் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி படுக்கையில் இறந்து கிடந்தார்.
முன்னதாக, அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்றே அவருடைய மனைவி அனிதா பொலிசாரிடம் கூறியிருந்தார். ஆனால், நெடுந்தீவு வைத்தியசாலைக்கு டேனியலின் சடலம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியர்களினால் பரிசோதனை செய்யப்பட்டபோதுதான், அவருடைய தலையின் பின்பக்கத்தில் - பிடரியில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மை வெளிப்பட்டிருந்தது. உடனடியாக அந்த சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது,
அங்கு மருத்துவ பரிசோதனை நடத்திய யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சிவரூபன் ஐந்து தொடக்கம் எட்டு மீற்றர் தொலைவில் பின்பக்கமாக இருந்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், மூளைக்குள்ளே இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிச் சன்னத்தில் இருந்து கொலை செய்வதற்கு 9 எம் எம் மைக்ரோ பிஸ்டலே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உண்மையை மறைப்பதற்கான அச்சுறுத்தல்கள்
மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட உண்மைகளை வெளியிடக் கூடாது. அவர் கொலை செய்யப்பட்டதற்குரிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று தொலைபேசி வழியாக சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சிவரூபனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் உரிய அதிகாரிகளினதும், பொலிசாரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார். ஆயினும் அச்சுறுத்தல்கள் ஓயவில்லை. அப்படியிருந்தும், அவர் மருத்துவ பரிசோதனையில் தான் கண்டவற்றை அறிக்கை வடிவில் தெரிவித்திருந்தார்.
'நன்கு பரிச்சயமான ஒருவரிடமோ பலரிடமோ அவர் சாதாரணமாகக் கதைத்துக் கொண்ருந்த நேரம், அவருக்குத் தெரியாமல் பின்னால் இருந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட தூரத்தில் இருந்து துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனால், துப்பாக்கிக் குண்டு தலையைத் துளைத்துக் கொண்டு மறுபக்கத்தில் வெளியில்; செல்லாமல், மூளைக்குள்ளேயே வெடித்துச் சிதறியுள்ளது. இறந்த பின்னர், அவரை படுக்க வைத்திருந்ததன் காரணமாகவே சடலம் படுக்கையில் படுத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்த நிலையிலேயே சடலத்தை விட்டிருந்தால், சடலத்தின் கால்கள் மடிந்திருக்கும். ஆனால் படுக்க வைத்திருந்தபடியினால் அவருடைய கால்கள் நீட்டியிருந்தன' என்று டாக்டர் சிவரூபன் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிப்பிரயோகம் செய்து கொல்லப்பட்ட பின்னரும், அந்தக் கொலையை மறைப்பதற்காக இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இறந்தவராகிய டேனியல் ரெக்சியனின் மனைவி அனிதாவுக்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தரும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கமலேந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமை அலுவலகமாகிய யாழ் சிறிதர் தியேட்டர் கட்டிடத்தில் உள்ள கமலேந்திரனின் அலுவலக அறையில் இருந்து பொலிசார் கைப்பற்றியிருந்தார்கள். அத்துடன் கொழும்பில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்தே பொலிசார் கமலேந்திரனைக் கைது செய்திருந்தார்கள்.
முறையற்ற ஒரு காதல் உறவு தொடர்பாக உட்கட்சிக்குள் இருவருக்கிடையில் எற்பட்டிருந்த முரண்பாடு காரணமாக இடம்பெற்ற இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல் ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டமையும் கொழும்பு அலுவலகத்தில் வைத்து கமலேந்திரன் கைது செய்யப்பட்டமையும் அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.
டேனியல் ரெக்சியனின் கொலையானது, அத்துடன் முடிவடைந்ததாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் முன்னர் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான ஆழமான விசாரணைகளுக்கு இந்தச் சம்பவம் வழியேற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிசார் பல முனைகளில் விசாரணைகளை இரகசியமாக மேற்கொண்ருப்பதாகத் தெரிகின்றது. யுத்தம் முடிவடைந்தபின்னர், ஆயுதப்படைகளையும், பொலிசாரையும் தவிர வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது என்ற கடுமையான நிலைப்பாட்டிற்கு மத்தியில் கமலேந்திரன் மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இந்த விசாரணைகளுக்கு முக்கிய தூண்டுகோலாக அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியும் கடிந்து கொண்டார்
இதற்கு முன்னர் கமலேந்திரனின் உதவியாளர் ஒருவர் பிஸ்டல் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது கமலேந்திரனுடைய அலுவலகம் சோதனையிடப்படவில்லை. இது பலதரப்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷகூட, நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் ரெக்சியனின் கொலை பற்றியும் அதன் பின்னரான சம்பவங்கள் தொடர்பிலும் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாகிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடிந்து கொண்டதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதனையடுத்தே, கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவித்தலும், கொலைச்சம்பவத்திற்கு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளுக்குக் கட்சியில் இடமில்லை என்று ஈ.பி.டி.பி. அறிக்கை வெளியிட்டிருந்தது.
இத்தகைய பின்னணியில் தான் ஈ.பி.டி.பி. கட்சியின் நெடுந்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அத்துடன், யாழ் நகரில் உள்ள அலுவலகம் தவிர தீவகம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படவுள்ளதாக ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், யாழ். நகர அலுவலகம் இடம் மாற்றப்படலாம் என்றும் அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமாகிய தவராஜா தெரிவித்துள்ளார்.
'டேனியல் ரெக்சியனின் கொலையினால் மட்டும் கிராமப்புறங்களில் உள்ள எமது அலுவலகங்களை மூடிவிட உத்தேசிக்கவில்லை. இந்த அலுவலகங்களை மூடிவிட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அதனைத் துரிதப்படுத்துவதற்கு இந்தச் சம்பவம் தூண்டுகோலாக அமைந்துள்ளது' என்று ஈ.பி.டி.பி. கட்சியின் பேச்சாளர் தவராஜா தெரிவித்துள்ளார்.
தோல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற பின்வாங்கலா?
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் ரெக்சியனின் கொலை மட்டுமல்லாமல், நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு ஏற்பட்டிருந்த படுதோல்வியும் ஈ.பி.டி.பி. கட்சியை அரசியல் ரீதியாகப் பெரிதும் பாதித்துள்ளது. தீவுப்பகுதிகளில் முடிசூடா மன்னர்களாக இருந்த ஈ.பி.டி.பி. கட்சியினர், தீவகப்பகுதி மக்களால் மட்டுமல்லாமல், யாழ் மாவட்டத்தில் அவர்கள் செல்வாக்குப் பெற்றிருந்த பல இடங்களிலும்கூட மாகாண சபைத் தேர்தலில் மக்களால் புறந்தள்ளப்பட்டிருந்தார்கள்.
வடமாகாண சபைத் தேர்தலில் தாங்கள் எப்படியும் நான்கு வரையிலான இடங்களையாவது கைப்பற்றலாம் என்று ஈ.பி.டி.பி.யினர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத வகையில் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. இது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
தீவுப்பகுதிகளில் வெளியாரின் அரசியல் செல்வாக்குக்கு இடமின்றி செயற்பட்டு வந்ததனால், அது அவர்களின் அரசியல் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் அந்தக் கோட்டையையே மக்கள் சரித்துவிட்டார்கள். உண்மையிலேயே இது ஈ.பி.டி.பி.க்கு மட்டுமல்ல, பல தரப்பினருக்கும் பேரதிர்ச்சி தந்த செய்தியாகவே அமைந்திருந்தது.
மக்கள் ஈபிடிபிக்கு எதிராக ஏன் திரும்பினார்கள் என்ற கேள்வி பலதரப்பினர் மத்தியில் இருந்தும் எழுந்தது. யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த உடனேயும், தீவுப் பகுதிக்குள் வெளி அரசியல் சக்திகள் பிரவேசிக்க முடியாத அளவுக்கு நிலைமைகள் இருந்தன. அப்போது அந்த மக்களுக்குத் தேவையான அனைத்தையும் ஈ.பி.டி.பி.யினரே செய்து வந்தார்கள். பாதிப்புகள் இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இருந்த போதிலும் அந்த அரசியல் செல்வாக்கைத் தொடர்ந்து அவர்களால் அங்கு தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. இதற்கு, யுத்தத்தின் பின்னர், தமிழ் மக்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் அணுகுமுறைகள், அரசியல் கொள்கைகளே முக்கிய காரணமாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். முரண்பட்ட அல்லது தமிழ் மக்களுக்கு சாதகமில்லாத அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாகவே, மாகாண சபைத் தேர்தலில் மக்கள் ஈ.பி.டி.பி. கட்சியை நிராகரித்திருந்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
வடக்கில் எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்தத் தேர்தல்களுக்கு இல்லாத முக்கியத்துவமும், முனைப்பும் வடமாகாண சபைத் தேர்தலுக்குப் பலதரப்பினராலும் காட்டப்பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில் இந்தத் தேர்தல் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டிருந்தது. அத்தகைய முக்கியத்துமிக்க தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சி படுதோல்வியைச் சந்தித்திருந்தது. அந்தக் கட்சியினர் அரசியல் ரீதியாக மனம் உடையும் அளவிற்கு இந்தத் தோல்வி பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக அவதானிகள் கூறுகின்றனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியானது, தேசிய மட்டத்தில் குறிப்பாக அரசாங்கத்துடனான அரசியல் உறவையும் பாதிக்கத்தக்க மோசமான நிலைமையை உருவாக்கியிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
மக்கள் வெறுக்கின்றார்கள். அவர்கள் விரும்புகின்றார்களில்லை என்பதற்காக அரசாங்கத்தின் அணுகுமுறைகளையும், கொள்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, அரசாங்கத்தைக் கைவிட்டு ஈ.பி.டி.பி.யினால் மக்களிடம் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் இப்போதைய நிலையில் அவ்வாறு அவர்களால் செல்ல முடியாது என்பதையே நிலைமைகள் காட்டுகின்றன.
மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அரசியல் பலத்தைக் கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக அரசியல் ரீதியாக உறவாடுவதற்கும், மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
மாகாண சபையின் ஊடாகவே கிராம மட்டத்திலான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளும், அத்தியாவசிய தேவைகள் சார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் அதிகார பலமுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த நடவடிக்கைகளின் ஊடாக மேலும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்க முடியும்.
மாகாண சபையில் அதிகாரமில்லாத நிலையில் ஈ.பி.டி.பி. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் போட்டிபோட்டு மக்களை நெருங்குவதென்பது கடினமான காரியமாகும். மாகாணசபை வருவதற்கு முன்னர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும், அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளையும் அரசாங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அபிவிரு;த்திக் குழு கூட்டம், வடக்கின் வசந்தம் என்று பல்வேறு அமைப்புக்களின் ஊடாக மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பிரயோகிப்பதற்கு ஈ.பி.டி.பி.க்கு நிறைவான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் இருந்தன.
அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒதுக்கி வைத்துச் செயற்பட்ட ஓர் அணுகு முறையைப் பின்பற்றியிருந்ததனால், ஈ.பி.டி.பி. கட்சியுடன் போட்டியிட்டு அவர்களால் மக்களை அணுக முடியாமலிருந்தது. இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது. அதேநேரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு இடங்களை மட்டுமே ஈ.பி.டி.பி. கைப்பற்றியிருந்தது. இருப்பினும், மாகாண சபையில் பெற்றிருந்த எதிர்க்கட்சித் தலைமை நிலைமையும், நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டேனியல் ரொக்சியனின் கொலைச் சம்பவத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாகாண சபை அரசியலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நிலைமையில்தான், யாழ் நகர அலுவலகம் தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை மூடிவிடுவதற்கு ஈ.பி.டி.பி.முடிவெடுத்திருக்கின்றது. மக்கள் மத்தியில் உள்ள அலுவலகங்களை மூடிவிடுவதற்கு அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையானது, அரசாங்கத்தைக் கைவிட முடியாது, மக்களை வேண்டுமானால் கைவிடலாம் என்ற அரசியல் ரீதியான முடிவை வெளிப்படுத்துவதாகவே தோன்றுகின்றது.
இது அந்தக்கட்சியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது, அடுத்தடுத்த கட்டங்களாக அந்தக் கட்சியினர் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது பற்றிய பல கேள்விகளை எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது.
No comments
Post a Comment