ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடாவும் மறுப்புத் தெரிவித்துள்ள விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவராவார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக அவரை இலங்கை அரசாங்கம் நியமித்து கௌரவித்துள்ளது. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு, அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது. அதுபோலவே, அண்மையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. இந்தநிலையிலேயே, கனடாவும் அவருக்கு வீசா வழங்க மறுத்த விவகாரம் தற்போது தெரிய வந்துள்ளது. கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு பின்னடித்துள்ளதாக, இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களுக்கு நெருக்கமான கொழும்பு ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதேவேளை, இறுதிக்கட்டப் போரில் இலங்கை இராணுவத்தின் 57வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு வீசா வழங்குவதற்கு அண்மையில் அவுஸ்திரேலியாவும் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment