இரணைமடு குடிநீர் திட்டத்தை அன்று விடுதலைப் புலிகளே அங்கீகரித்தனர். ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இத்திட்டத்தை எதிர்ப்பது கவலைக்குரிய விடயமாகும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான முருகேசு சந்திரகுமார் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே முருகேசு சந்திரகுமார் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இத்திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென்றால் அதற்கு எதிராக முதலாவதாக களமிறங்குபவனாக நான் இருப்பேன்.
இரணைமடு குடிநீர் திட்டத்திற்காக 20000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் முன் வைக்கப்பட்ட 40 வரையிலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு திட்டத்தை ஆரம்பிக்கும் நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இத்திட்டத்தை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியினது உதவியுடன் முன் வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு அன்று விடுதலைப் புலிகளே அங்கீகாரம் வழங்கினர்.
அது மட்டுமல்லாது, இதனை ஆதரிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் புலிகள் கடிதம் எழுதினர். ஆனால், அரசியலுக்காக இதனை சிலர் எதிர்க்கின்றனர்.
விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யொருவர் சில விவசாய அமைப்புகளை பயன்படுத்தி இத்திட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றார்.
இதுபோன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தடுக்கப்படுமானால் வடக்கு மக்களுக்கே அது பாதிப்பாக அமையும்.
இரணைமடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுமானால் எதிர்க்கும் முதன்மையானவனாக நானே களம் இறங்குவேன்.
எனவே, தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் வட மாகாண சபை இந்த இரணைமடு குடிநீர் திட்டம் தொடர்பில் ஆரோக்கியமான சிந்தனையின் அடிப்படையில் செயற்பட வேண்டுமெனக் கோருகின்றோம்.
இத்திட்டத்தின் மூலம் 3 இலட்சம் மக்கள் நன்மையடையவுள்ளனர். இத்திட்டத்தை முதன்மைப்படுத்தி வேறு பல திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாலங்கள், வடிகாலமைப்பு என பல அபிவிருத்தித் திட்டங்களும் ஏற்படுத்தப்படும்.
எனவே, யாழ்ப்பாண மக்களின் தாகத்தை தீர்க்கவுள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகவுள்ள இரணைமடு குடிநீர் திட்டத்தை தடுக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
No comments
Post a Comment