Latest News

December 24, 2013

உண்மையான நட்பு
by admin - 0

அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களில் ஒருவரான கார்லோஸ் சான்டனா தனது ஆரம்பக் கால இசைக்குழுவின் அங்கத்தவரும் நெருங்கிய நண்பருமான ஒருவரை 40 வருடங்களின்பின்  சந்தித்து மீண்டும் இணைந்த உணர்ச்சிகரமான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கார்லோஸ் சாண்டனாவின் மேற்படி முன்னாள் சகாவானா மார்கஸ் மெலோன், பல தசாப்தங்களாக பிச்சைக்காரராக வாழ்ந்த நிலையில் கலிபோர்னியா வீதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மெக்ஸிகோவில் 1947 ஆம் ஆண்டு பிறந்தவர் கார்லோஸ் சான்டனா.  கார்லோஸும் அவரின் இளைய சகோதரரும் இளம் வயதிலேயே வயலின், கிட்டார் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டனர்.  பின்னர் இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தது. அதன்பின் 'சான்டனா' எனும் இசைக்குழுவை உருவாக்கினார் கார்லோஸ் சான்டனா. 1960களில் ஆரம்பித்த இந்த இசைக்குழு அமெரிக்காவிலும் லத்தீன்
அமெரிக்காவிலும் பெரும் புகழ்பெறத் தொடங்கியது. அந்த இசைக்குழுவில் டரம்ஸ் கலைஞராக விளங்கியவர்தான் மார்கஸ் மெலோன். ஆனால் 1969 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் மார்கஸ் மெலோன் சிறைச்செல்ல நேர்ந்தது. சிறைவாசத்தின்போது தனது இசைக்குழுவினருடனான தொடர்பை மார்கஸ் மெலோன் இழந்தார்.

மறுபுறம் கார்லோஸ் சான்டனா இசையுலகில் கொடி கட்டி பறக்கத் தொடங்கினார். பல்வேறு விருதுகளையும் அவர் வென்றார். 

சிறையிலிருந்து விடுதலையான மார்கஸ் மெலோன் வாழ்க்கையை நடத்த பெரும் சிரமப்பட்டார். பழைய நண்பர்களுடன் தொடர்பை இழந்த அவர் பிச்சைக்காரராக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில் மெலோனும் சான்டனாவும் மீண்டும் இணைவதற்கு சட்டவிரோதமாக குப்பை கொட்டுதல் தொடர்பான செய்தியொன்றே வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியாவின் KRON4  எனும் தொலைக்காட்சியைச் சேர்ந்த  ஊடகவியலாளலரான  ஸ்டான்லி ரொபர்ட்ஸ், கலிபோர்னியாவின் ஒக்லன்ட்ட நகரில் சட்டவிரோதமாக குப்பைகொட்டப்படுவது தொடர்பான   செய்தியொன்றை தனது தொலைக்காட்சிக்காக தயாரித்தார். 

அப்போது அங்கிருந்த மார்கஸ் மெலோனுடனும் ஊடகவியலாளர் ஸ்டான்லி ரொபர்ட்ஸ் உரையாடினார். தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் அச்செய்தியாளருடன் பேசிய மார்கஸ் மெலோன், 


'ஒரு காலத்தில் நான் சான்டனா இசைக்குழுவில், அதாவது ஒரிஜினல் சான்டனா புஸ் இசைக்குழுவில் நான் அங்கம் வகித்தேன். இப்போது வசிப்பதற்கு வீடில்லாமல் வீதியில் தங்குகிறேன்' எனவும் தெரிவித்தார்.

அழுக்கான ஆடைகள், நீண்டகாலமாக செப்பனிடப்படாத தாடி என அலங்கோலமாக காணப்பட்ட மார்கஸ் மெலோனின் கூற்று  செய்தியாளர் ஸ்டான்லி ரொபர்ட்ஸுக்கு நம்பகமாக தோன்றவில்லை.

ஏனெனில் இசையுலகில் பெரும் புகழ்பெற்ற ஒருவராக மாத்திரம் கார்லோஸ் சான்டனா இருக்கவில்லை.  சர்வதேச மன்னிப்புச் சபை, கிறீன் பீஸ், ஐக்கயி பண்ணைத் தொழிலாளர்கள் சங்கம், சேவ் த சில்ரன் உட்பட பல தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வழங்குபவராகவும் கார்லோஸ் சான்டனா விளங்கினார். 
 எனவே, தனது ஆரம்பக் கால இசைக்குழு அங்கத்தவர் ஒருவர் வசிக்க வீடின்றி வீதியில் இருப்பதை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார் என அச்செய்தியாளர் கருதினார். 

ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மார்கஸ் மெலோனின் கருத்துக்களும் ஒளிபரப்பப்பட்டன. 

அதன்பின் நிகழ்ந்தவை திரைப்படங்களில் வருவதைப் போன்று ஆச்சரியகரமானது. இந்நிகழ்ச்சியை பார்த்த கார்லோஸ் சான்டனா பல தடவை தனது வாகனத்தில் குறித்த வீதிக்குச் சென்று தனது ஆரம்ப கால நண்பரை தேடியிருக்கிறார். ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இறுதியில் பேஸ் புக் மூலம் செய்தியாளர் ஸ்டான்லி ரொபர்ட்ஸை தொடர்புகொண்டு, மார்கஸ் மெலோனை கண்டறிய உதவுமாறு சான்டனா கோரினார். 

அதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வீதியொன்றில் கார்லோஸ் சான்டனாவும் மார்கஸ் மெலோனும் சந்தித்த உணர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றது. 

'உன்னை காண்பதற்காக நான் எவ்வளவு பிரார்த்தித்தேன் என உனக்குத் தெரியாது' என  சான்டனாவிடம் மெலோன்  கூறினார். 

உனக்கு முன்னால் நான் இருப்பது பெருமயாக இருக்கிறது என்றார் சான்டனா. இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். 

மார்கஸ் மெலோனுக்கு சாண்டனா எதிர்காலத்தில் எப்படி உதவப் போகிறார் என்பது தெரியவில்லை. 


« PREV
NEXT »

No comments