சுழல் பந்து வீச்சாளர்" என்று பெருமை கொள்ளும் நீங்கள் அண்மையில் வடபகுதியில் காணாமல் போனோர் தொடர்பாக தெரிவித்த கூற்று மிகுந்த கண்டனத்தையும் வெறுப்பையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனித உரிமை தொடர்பான போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்து ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். பிரித்தானிய பிரதமர் கமரூனுக்கு உள்ள நன்றி உணர்வு கூட தங்களுக்கு இல்லாதிருப்பது வியப்பை அளிக்கின்றது என்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் வேலணை வேணியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது கொழும்பில் எனது இல்லத்தில் ஒரு துரும்பு கூட இல்லாது உடுக்கும் துணிமணி தொடக்கம் வீட்டினுள் இருந்த அனைத்து பொருட்களும் எரித்தொழிக்கப்பட்டன. கப்பலிலே அகதியாக யாழ்ப்பாணம் சென்றவன் நான் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்களும் அடங்குவர். இவர்களுள் எங்கள் உடன் பிறப்புகளான மலையகச் சகோதர சகோதரிகளும் அடங்குவர் என்பதனை நீங்கள் அறிவீர்களா? வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் அலை அலையாக மக்கள் யாழ். நோக்கி கப்பல்களில் சென்றனர். அந்த வடுக்கள் இன்னும் பாதிக்கப்பட்ட எம்மவர்கள் மத்தியிலிருந்து இன்னும் அழியவுமில்லை. அழியவும் மாட்டாது. இந்தக் கண்ணீர் கதைகளை அறியாத ஒரு குழந்தையல்ல நீங்கள் என்பதனை ஏற்றுக்கொள்வீர்கள். ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களின் கண்ணீர் வெள்ளத்தை கண்டும் காணாதது போல் நீங்கள் கூறியுள்ள கருத்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இன்றைய வடபகுதித் தமிழ் மக்களின் பரிதாப நிலையை அறிந்து அம் மக்களுக்காகப் பலரும் குரல் கொடுத்து வருவதோடு மட்டுமல்ல, தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் தூய உணர்ச்சிகரமான உள்ளத்துடன் கலந்து கொண்டும் வருகின்றனர்.
வீடு எரியும்போது சுருட்டுப்பிடிக்க நெரு ப்புக் கொள்ளி கேட்டவன் கதை போல் உங்கள் விசித்திரமான செய்திகளை பத்திரிகைகளில் பார்த்து தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிகின்றோம்.
உங்களைப் பெற்றெடுத்தது போன்றே அந்த தாய்மாரும் தங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து இன்று அவர்களைக் காணாது தனித்து நின்று கண்ணீர் சிந்துகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்கள மற்றும் தமிழ் பேசும் சகோதரிகளும் இன்று உறவுகளைக் காணாது தெருத்தெருவாய் மனித உரிமை பேரவைகளை நாடிச் சென்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் செய்திகளை நீங்கள் வாசிப்பதோ கேட்பதோ இல்லையா? மலையகமும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்கிருந்தும் ஓலக் குரல்கள் வருவது தங்களுக்குத் தெரியாதா?
மனித உரிமைகளைக் காத்துவரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அக்கறை ஏன் உங்களுக்கு இல்லாமல் போனது என்பதனை எண்ணி எங்கள் உள்ளங்கள் வெதும்புகின்றன. இன்று பிரித்தானியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, சீனா கூட மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கு உரக்கக் குரல் கொடுத்து வருவதனைக் கூட நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
நீங்கள் இன்றைய அரசின் போக்குகளை தனித்து நின்று வானளாவ உயர்த்திப் பேசுவதில் தமிழ் மக்களுக்கு எந்தவித கவலையும் இல்லை. உங்கள் வழியில் இன்னும் பல தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் உங்களுக்கு முன்பாக அரசாங்கத்தையும், அரச தலைவர்களையும் புகழார மாலைகள் சூட்டி வாழ்த்துகிறார்கள்.
ஆனால், தமிழ் மக்களின் உண்மையான மனித உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் தங்களது கருத்தை ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் ஜீரணிக்கவே முடியாது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கு இருக்கும் தமிழ் மக்கள் மீதான பற்றுக் கூட உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது என்பதனை அறிந்து தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிந்து கவலையில் ஆழ்ந்து நிற்கிறார்கள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
No comments
Post a Comment