யாழ். மாவட்டத்தில் மழையை நம்பி காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் உரிய காலத்தில் மழை கிடைக்காமையினால் நெற்பயிர் கருகி நட்டமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
யாழில் கடந்த மாதம் மழை ஆரம்பித்திருந்த நிலையில் விவசாயிகள் காலபோக நெல் விதைப்பில் ஈடுபட்டனர். இந்த வயல்களில் நெற்பயிர் முளைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் உரிய காலத்தில் மழை கிடைக்காமையினால் நீரின்றி நெற்பயிர் கருக ஆரம்பித்துள்ளது. மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்ற இந்த வயல்களுக்கு தற்பொழுது நீர் கிடைக்காவிடின் முழுமையாக கருகி அழிவடையும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வயல் நிலங்களில் நீரின்மையால் உரத்தினைப் போடமுடியாத நிலையில் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் சில விவசாயிகள் கிணறுகள், குளங்கள், கேணிகள், நீர்நிலைகளிலிருந்து வயல்களுக்கு நீரிறைத்து வருகின்றனர். நீர் பெறக்கூடிய வசதியில்லாத வயல்களில் உள்ள நெற்பயிர் கருகி அழிவடைந்துள்ளது.
வயல்களில் காணப்படுகின்ற கிணறுகளும் கேணிகளும் துப்புரவு செய்து பராமரிக்கப்படாமையால் சிலர் செய்வதறியாத நிலையில் மழைக்காக காத்திருக்கின்றனர். இதேவேளை சில விவசாயிகள் அதிக பணச் செலவுடன் பவுசர்களை வாடகைக்குப் பெற்று நீர் இறைக்கின்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இது இவ்வாறிருக்க ஓரிரு தினங்களுக்குள் நீர் கிடைக்காவிடின் யாழ். மாவட்டத்தில் காலபோகத்தில் நெல் விதைத்த விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் என விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப் பிடத்தக்கது.
No comments
Post a Comment