ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதாக ஒப்புக்கொண்டிருக்கும் அதிகாரிக்கு தூக்குத் தண்டனை விதிக்கலாம் என தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ``ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை மறைத்து தாம் வசதிக்கேற்ப வாக்குமூலத்தை திருத்தினேன் என்று 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியே தாம் பொய்யான வாக்குமூலத்தைக் கொடுத்தேன் என்று கூறியிருப்பதால் இந்த வழக்கில் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்திய தண்டனை சட்டம் 194 என்பது பொய்யான ஆவணங்களை தயாரித்து ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பது அல்லது தண்டனை நிறைவேற்றப்பட்டால் அப்படி ஆவணங்களைத் தயாரித்தோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது. அதனால் இது தொடர்பாகவும் ஒரு வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தண்டனை பெற்றுத்தர முடியும்'' என்றார்.
No comments
Post a Comment